தி.ஜா: ஆவேசம் கொண்ட பெரும் கலைஞன்!

நண்பர் திரு. தி. ஜானகிராமன், ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயர் என்ற முறையில்தான் நான் அவருடன் முதன்முதல் பழக நேர்ந்தது.

ஐயம்பேட்டை பள்ளிக் கூடத்தில் உபாத்தியாராயிருந்த அவர், அந்த ஊர் பஞ்சாயத் யூனியன் அதிகாரியாயிருந்த என் மைத்துனன் ராமமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் (ஜாதி குடியிருப்பில்) குடியிருந்தார்.

நான் வேட்டகத்திற்குச் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவார். அப்போது நான் விகடன் பொறுப்பாசிரியராயிருந்து வந்தேன். நான் மூத்தவன் என்ற முறையில் மிகவும் மரியாதையுடனும், எழுத்தாளன் என்ற முறையில் தனிப்பட்ட அபிமானத்துடனும் இருப்பார்.

எழுத்தாளர் ஜானகிராமன் இலக்கிய படைப்புக்களைப் பற்றித் திட்டவட்டமான கொள்கைகள் உள்ளவர். அவர், ஆர்.வி அவர்களின் ‘அணையா விளக்கு’ என்ற நாவலுக்கு எழுதியுள்ள முகவுரையில் அந்த அபிப்ராயங்களை அழுத்தமாக சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிவித்திருக்கிறார்.

“நாவல் என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும்? சிறுகதை என்றால் என்ன; எப்படி இருக்க வேண்டும் (இதே போல் வேறு வடிவங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்) என்ற கேள்விக்கு இப்போதெல்லாம் விடை சொல்ல முடிவதில்லை. உத்திகளும், பாணிகளும் அப்படிக் கிளை விட்டிருக்கின்றன.

எழுதுகிறவர்கள் எத்தனை பேரோ அத்தனை இருக்கும் என்று கூடத்தோன்றுகிறது. ஆகவே, எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று மதிப்பிடுவது சிரமமாகிவிட்டது.

ஆனால், ஒரே ஒரு அளவுகோல்தான் உண்டு. அது, ஆத்மார்த்தமான ஆனந்தம், அமைதி ஏற்படுகிறதா என் சாசுவதமான அளவுகோல் ஒன்றுதான். நாம் எப்போதும் நம்பியிருக்க கூடியது…

பழமையின் உரத்தில் இருந்து புதுமையைப் படைத்தால்தான் ஒரு மனித ஜாதியை உருவாக்க முடியும். புதுமையையே வெறியாகவும் குறிக்கோளாகவும் கொண்டு புரட்சி செய்த நாடுகளில் மீண்டும் கூடை கூடையாகப் பழமையின் மண்ணைக்கொண்டு கொட்டிச் சேர்த்துக் கொண்டிருப்பதை நாம பார்த்தே வருகிறோம்.

பழமையும் புதுமையும் இருகண்கள் ஒற்றைக் கண்ணுடன் வாழ்வது சாத்தியமான காரியந்தான். ஆனால் அது விகாரமாகத்தானே இருக்கிறது. அழகாக இருப்பது மனிதனது கடமையல்லவா…

…உத்திகளிலும், பாணிகளிலும் எத்தனையோ வகைகள் முக்காலே மூணுவீசம் மலையைக் கொல்லி எலி பிடிக்கின்றன. உண்மையில் அவேசங்கொண்ட பெருங்கலைஞன் யாரோ தனக்காக ஒரு பாதையை வகுத்துக் கொள்கிறான்…

ஓர் ஆசிரியர் தாம் எழுதுவதைப் பிறர் படித்து நம்பச் செய்துவிடும் மாயத்துக்கு பல சாதனைகள் தேவை.

ஏராள அனுபவம் வேண்டும்.

சர சரவென்று பார்த்ததையெல்லாம் மனத்தில் பதித்துக் கொள்கிற கண் சூடிகையும் வேண்டும். இந்த இரண்டையும் சமயம் பார்த்துப் பயன்படுத்துகிற கலை உணர்வு வேண்டும். இல்லாவிட்டால் திட்டம் தெரியாமல் உப்புப் புளி போட்டுப் பண்ணின சமையல் ஆகிவிடும்.”

தி.ஜானகிராமன் தமது இலக்கியப் படைப்புக்களை இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே படைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ராபர்ட் பர்னஸ் என்ற ஸ்காட்லாந்து தேசக்கவி தமது கவிதைகளை எல்லாம் தம் நாட்டு மக்களின் கொச்சை மொழியிலேயே அமைத்திருக்கிறார்.

ஜானகிராமனின் பாணி எங்கள் தஞ்சை மாவட்டத்தின் கொச்சைப் பேச்சை அப்படியே நூற்றுக்கு நூறு கையாண்டிருப்பதுதான்.

சித்திரக்காரர் அமரர் மாலி தனது சித்திரங்களால் தஞ்சைக்காரர்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஜானகிராமன் தமது பேனா எழுத்துக்களால் அவர்களை நம் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

ஜானகிராமன் சில வாரங்கள் முன் வரை தினமணி கதிர் பத்திரிகையில், ‘அபூர்வ மனிதர்கள்’ என்ற தலைப்பில் தொடர்ந்து ‘நடைச் சித்திரங்கள்’ எழுதி வந்தார்.

அவற்றுள் தஞ்சாவூர்காரர்களின் கொச்சைப் பேச்சு, பொங்கிப் பொங்கி குமிழியிட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. சிந்தனைகள் முழுதும் பேச்சு, பேச்சு, பேச்சுத்தான். ஆசிரியர் அதிகப் பிரசங்கித் தனமாகத் தலையிடவில்லை.

பாத்திரங்களின் பேச்சுக்களிலிருந்து நாம் அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் பழக்க வழக்கங்கள், ஆசாபாசங்கள், லட்சியங்கள் முதலியவற்றை அறிந்து கொள்கிறோம்.

நகைச்சுவை என்பது, ஆசிரியர் புத்தகங்களில் ஆங்காங்கே பேச்சு வாக்கில் தானாகவே மிளிர்கிறது.

ஒரு தாயார் ரயிலுக்குச் செல்லும்போது மறந்து போய்த் தன் குழந்தையை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போய் விடுகிறாள்.

கணவன் அவளை அதற்காகக் கோபித்துக் கொள்ளும்போது “பொகு சமத்து வழிச்சுண்டு சிரிப்பா!” என்று பல்லைக் கடித்தார் என்று எழுதியிருக்கிறார்.

‘உண்மையில் ஆவேசங் கொண்ட எழுத்துக்காரன்’, தன்னையும் மீறி எடுத்துக் கூறிவிடும் பேச்சு இது!

எனக்குத் தெரிந்து தஞ்சை மாவட்டக்காரர்களையும் அவர்கள் பேச்சையும் இவ்வளவு சரளமாகக் கையாண்டவர் தி.ஜானகிராமன் ஒருவர்தான்.

அவரது பல கதாபாத்திரங்களின் பேச்சை ரிகார்ட் செய்து வைத்தால் அது தான் உண்மையான தஞ்சைப் பேச்சு கேஸட்டாக, விளங்கும்.

-துமிலன்

– நன்றி: கணையாழி 1982, டிசம்பர் மாத இதழ்.

You might also like