பேராசிரியர் மு.இராமசுவாமி
தமிழ்நாட்டில் பிறந்து, எதையும் பகுத்தறிவால் சிந்தித்து, ’இங்கிருக்கிற திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகிலுள்ள பிற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக, அதை ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதைத் தவிர வேறொரு பற்றுமின்றி, அந்தப் பணியாகவே உழைத்து’,
தன் இயக்கத்திற்கென சமூக நலம் பேசும் ஒரு சமூகக் கருத்தியல் தளத்தை தத்துவவெளியை உருவாக்கிய பெரியாரை, அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இப்பொழுதும், அவருடைய சுயமரியாதை வரித்த கலகக்காரக் குணத்தை, இக்காலச் சூழலின் தேவையை ஒட்டி, எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வது என்பது, இன்றையப் பரபரப்பில் மிகவும் தேவையானது தான்!
’கடவுளின் வைரி’ என்பதாய் மட்டுமே சனாதனிகளால் கட்டம் கட்டி வைக்கப்பட்டிருக்கிற பெரியார் என்கிற படிமத்தை, ‘மனித குலச் சூரி’ அவர்; அவரின் நாத்திகம் மனிதகுல மேம்பாட்டிற்குரியது; தமிழ்நாடு, அவர் மூலம் மட்டுமே, சமூகநீதியில் பகுத்தறிவில் கல்வி, மருத்துவத்தில், இந்திய ஒன்றியத்திலேயே, ’திராவிட முன்மாதிரி’யாக, இன்றைக்கு, உலகம் எடுத்தாளத் தப்பிப் பிழைத்திருக்கிறது,
என்கிற நெடிய வரலாற்றை உணர்த்த வேண்டிய காலச் சூழலைப் பெரியாரின் அய ர்வறியாத் தொண்டின்மூலம் இங்கு உருவாகியிருக்கிற பெரியாரியலாளர்க்கு, இயற்கை வழங்கியிருப்பதாகவே, இப்பொழுது நினைக்கிறேன்.
பெரியார் என்பவர் தவயோகி அல்ல; அவர் ஒரு சமூகப் பகுத்தறிவு மோகி!
கடந்த நான்கைந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில், பெரியாரை இந்து மதத்திற்கு எதிரானவராக, கடவுள் மறுப்பாளராக மட்டுமே முன்னிறுத்தி, கருத்துக் குருடர்களால் பெருமளவு சேதம் விளைவிக்கப்பட்ட சிலை பெரியாரினுடையது.
ஆனால், அந்தக் கயவாளித்தனம், தமிழ்நாட்டு மக்களிடம், அவர்களுக்குக் கடும் சேதாரத்தையே உண்டுபண்ணியிருந்ததென்பது, வரலாறு நமக்குச் சொன்ன சேதி!
சரி, ஏன் அவர்களுக்குப் பெரியாரின்மீது அத்தனை ஆகாத கோபம்? பெரியார் எதையும் கேள்வி கேட்கச் சொல்கிறார்.
அவர் சொன்னதேயானாலும் அதையும் கேள்விக்குட்படுத்தச் சொல்கிறார். எதையும் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்க்கச் சொல்கிறார். உலக நடவடிக்கைகளைக் காதுகளைத் திறந்து வைத்துக்கொண்டு கேட்க-விவாதிக்கச் சொல்கிறார்.
அவரின் ஒற்றை அளவு கோல், இவற்றினடியிலான சமூகநீதி மட்டுமே! இந்த அடிப்படையில் நின்று, புனிதம் என்று நம் தலையில் கட்டமைக்கப்பட்டிருக்கிற, பொய்முகமான சனாதன தருமங்களையும், அவற்றைத் தூக்கி நிறுத்துவதற்காய், மக்களை மனச் சலவை செய்யும் புராண இதிகாசங்களையும், கூண்டுக்குள் நிறுத்திவைத்து, குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறார் பெரியார்!
அதற்கான விவேகமான, அறிவியல் பூர்வ பதில் அகப்படாத அடிமைக் கூட்டம், ஆத்திரத்தில், தங்கள் மூடத்தனத்தை, இப்படி, அடாவடியாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பெரியாருக்கு நேர்ந்த இந்த இழிவு, திரிபுரா வில், அங்குள்ள காவிகளால் லெனின் சிலைக்கும் நிகழ்ந்தது.
அதேபோல், சனாதனம் உப்பிட்டு வளர்த்த, சாதிய விஷ நாக்குகளால் அம்பேத்கரின் சிலைகளுக்கும் இதே அவமானம் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டதும், இந்திய அரசியல் சட்டம் இயற்றியதில் தலைமைப் பங்காற்றிய அவரைக் கூண்டுக்குள் நிறுத்தி வைத்திருப்பதும் நிதர்சனமாயிருந்தது.
ஐரோப்பாவில் காலூன்றி, அகிலமெ ங்கும், உழைக்கும் மக்களின் கருத்தாயுதமாய்-கை வாளாய்ப் பரவி நின்றது-நிற்பது மார்க்சியம்!
ஐரோப்பியச் சுற்றுப் பயணங்களின் மூலம் வாசிப்பின் மூலம், மார்க்சியம் கால்பரப்பி நின்ற தேச ங்களின் குணரீதியான சமூக மாற்றத்திற்கான விதைகளை உள்ளுக்குள் ஊறப்போட்டு, இங்கு அத ற்கொரு புதிய முகவரி சொல்லப் புறப்பட்டிருந்தது பெரியாரியம்!
ஐரோப்பாவில் உயர்கல்வி கற்று, அங்கு வெளிக்காற்றில், அவமானத்திற்கான அரிச்சுவடியே காணாமலிருந்த சூழலில், அங்கிருந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை, மூச்சுக் காற்றாய் முன்னெடுத்து, இந்த மண்ணிலே, பார்ப்பனிய, இந்துமதப் பாகுபாட்டிற்கெதிராய், ஒதுக்கப்பட்டோரின் பவுத்தமாய் மலர்ந்திருந்தது அம்பேத்கரியம்!
ஆயிரங்கால் பூதங்களாக, ஆதிக்கச் சக்திகளைப் பயங்காட்டிக் கொண்டிருக்கிற, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர்-இவர்கள் மூவரின் அபேதவாதத் தத்துவச் செயல்பாட்டு முகமைகளின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூர்ந்து நோக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை அடையாளப்படுத்த வேண்டியதிருக்கிறது.
இந்தச் சூழலில், பெரியாரை, அறிவியல் பூர்வமாய் எப்படிப் புரிந்து கொள்வது, அல்லது எதிர்ச் சனநாயகச் சக்திகளுக்கு அவரை எப்படிப் புரிய வைப்பது என்கிற வினாவின் விடையே இந்த உரை!
உண்மையில் சொல்லப்போனால், பெரியார் சொல்லுவதைப் போல, ’நாம செய்யிற வேலையினுடைய முக்கியத்துவம் நம்ம மக்களுக்குத்தான் சரியாப் போய்ச் சேரலெ.
எதிரிகளுக்குத்தான் சரியாப் போய்ச் சேர்ந்திருக்குது. அவுங்கதான் நம்மெச் சரியாப் புரிஞ்சி வச்சிருக்காங்க’ என்பதன்படி, சனநாயகச் சக்திகளுக்கு – நம் மக்களுக்குப் பெரியாரை எப்படிப் புரிய வைப்பது என்கிற வினாவிற்கான விடையே இது!
’மார்க்ஸ்-எங்கெல்ஸ் நினைவுக் குறிப்புகள்’ நூலில், மார்க்ஸின் இடத்தை வரையறுக்கிறபொழுது, நூலாசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார்:-
”பாரிஸ் நகரம், ஐரோப்பாவின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாக 1840 களில் இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர்ந்த இலட்சியங்களுக்குப் பதிலாக, பண வேட்டையை இலட்சியமாக்கிவிட்ட முதலாளித்துவ அமைப்பின்மீது, தீவிரமான அதிருப்தி, பாரிஸைப்போல வேறெங்கும் இருக்கவில்லை.
காரல் மார்க்ஸ் இந்தப் புறச் சூழலினால்தான், பாரிஸில்தான் அவர் மார்க்சியவாதியானார் என்பதும், விஞ்ஞானக் கம்யூனிசத் தின் தீர்மானகரமான கருத்துகள் அங்கேதான் வகுத்துரைக்கப்பட்டன என்பதும் இயற்கையே (பக்.261).
தத்துவரீதியான விமர்சனத்தை, வர்க்கங்களின் உண்மையான போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார் (பக்.265).
தத்துவத்தையும் நடைமுறையையும், தத்துவஞானத்தையும் உலகத்தையும் இணைக்கின்ற சங்கிலியாக, அவர் பாட்டாளி வர்க்கத்தைக் கண்டடைந்தார்!
அந்தவகையில், மார்க்ஸ், ’மனிதகுலத்தின், மொத்த வரலாற்றுக்குமான விளக்கத்தைப் பொருளாதார உறவுகளில்தான் தேட வேண்டும்’ என்ற கருத்தில் இருந்தே, ’1844 ஆம் வருட த்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் குறிப்புகள்’ புத்தகத்தைத் தொடங்குகிறார்..
’மனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு இவைதாம், சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை.
மனிதனுடைய உழைப்பு, வெவ்வேறு சமூக நிலைமைகளில், வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் மொத்தமாக, மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள்-தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம்-மட்டுமே எஞ்சுகின்றன’ என்கிறார்.
ஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில், மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹ் (Fauerbach), மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திற்கு முந்தைய, ஹெகலிய பள்ளியைச் சேர்ந்த செர்மா னிய தத்துவ அறிஞராவார். கருத்து முதல்வாதத்திற்கு எதிராக பொருள் முதல்வாதத்தை முன்மொழிந்தவர்.
கடவுள்/ஆன்மீகம் எனும் கருத்தியல் இடத்தில், ஃபாயர்பாஹ் மனிதனை முன்னிறுத்தினார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கிற உறவுகளின் இடத்தில், மார்க்ஸ், தொழிலாளிக்கும் முதலாளிக்கும், வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப் பிற்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.
எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற-வாங்கப்படுகிற உலகத்தில், பணம், தலைமையான-தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலக த்தில், தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான்.
அவனிடம், மூலதனமோ, வாரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கின்றான்.
உழைப்பு, சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கின்றது. முதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையை, மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியில், தொடக்க நிலையாக வைக்கிறார்…. தொழிலாளி, பொருளை அல்லது செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது, அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை.
மேலும், இச்செல்வம், தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி, மூலதனம் என்ற முறையில், தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாகத் தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது.
மார்க்ஸ் இந்த உண்மையை, ’உழைப்பு அந்நியமாக்கப்படுதல்’ என்கிறார்” (பக்-277-278). மார்க்சியத் தத்துவம், சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் நடைமுறைத் தத்துவமாக உருவெடுத்த பின்புலத்தை, இதன்வழி ஒருவாறு விளங்கிக் கொள்ளப் பார்க்கலாம்.
இதேபோன்றதொரு நிலையை, பெரியாரைப் புரிந்துகொள்ள அப்படியே தமிழ்நாட்டிற்கும் நகர்த்திக் கொண்டு வருவோம்.
(தொடரும்…)
26.01.2022 5 : 30 P.M