– மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதற்கு ஒமிக்ரான் வைரசே காரணம். இதனால் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் கடந்துள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மரபணு வரிசைப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள பிஏ.2 வகை புதிய மரபணு மாறுபாடு வைரசே இந்தியாவில் பெரும்பாலானோருக்கு தொற்றியுள்ளது. இதை ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலும் கண்டறிய முடியவில்லை. இந்த வகை வைரஸ் இந்தியா, ஸ்வீடன், டென்மார்க் உள்பட 40 நாடுகளில் பரவி உள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் சமூக பரவல் கட்டத்தை அடைந்துள்ளதால், வரும் நாட்களில் இந்தியாவில் 3-வது அலை மிக தீவிரமடையும் என்றும், இதனால், முக்கிய நகரங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,06,065 ஆக உள்ளது. இது கடந்த 4 நாட்களாக இருந்து வந்த சராசரி தினசரி பாதிப்பை விட 8% குறைந்து காணப்படுகிறது.
அதே போல, உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களை விட குறைந்து 439 ஆக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு உச்சநிலையில் இருந்த டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில், கடந்த 2 வாரங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மருத்துவர் சுபாஷ் சலுங்கி, “இவ்வகை உருமாறிய வைரஸ் நடுத்தர நகரங்கள், கிராமங்களில் மட்டுமே பரவுகிறது. இன்னும் 8 முதல் 10 வாரங்களில் இது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று 3-வது அலையின் தீவிரம் பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும். ஏற்கனவே, சில மாநிலங்கள், மெட்ரோ நகரங்களில் தொற்று குறையத் தொடங்கி உள்ளது என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, 162.26 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. 81.80 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் தொற்றின் தீவிரம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.