– கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அஜயன் பாலா.
அஜயன் பாலாவை எனக்கு நண்பராய் இருபத்தைந்து ஆண்டுகளாக தெரியும். எந்த நல்ல நட்பையும் ஒரு நொடியும் இறக்கிவிடாமல் தோளில் சுமந்து நடக்க அஜயன் பாலா போல் நான் வேறு யாரையும் பார்த்ததில்லை.
சற்றும் சலிக்காமல் நட்பிடம் அவர் காட்டும் அன்பின் செயல்பாடுகள் இன்றும் என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த ஆச்சர்யங்களில் ஒன்றுதான் இந்தப் புத்தகம் ‘நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார்’.
– இந்தப் புத்தகம் அவருக்கும் சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்குமான நட்பைப் பற்றியது.
அதுவொரு அற்புதமான காலமாய் கண் முன் விரிகிறது. அங்கே மலர்ந்த பூக்களும் அழகாய் இருக்கிறது. உதிரும் இலைகளும் அழகாய் இருக்கிறது.
ஒரு வாசனை போல் மனமெங்கும் பரவும் இருவரது நட்பின் காட்சிகளை நான் இன்னும் நினைத்து நினைத்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
இருவருக்கும் ஒரே ஊர். காஞ்சிபுரம். இருவரும் சினிமா தேடி சென்னை வந்தவர்கள். அப்போது சென்னை பிலிம் சேம்பர்தான் நண்பர்கள் சந்திக்கும் களமாக இருந்திருக்கிறது.
முத்துக்குமாருடனான முதல் சந்திப்பும் அங்கேதான் நிகழ்ந்திருக்கிறது. சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் போதே அதற்கு விசிட்டிங் கார்ட் அடித்து வியக்க வைத்தவர் முத்துக்குமார்!
முத்துக்குமார் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருக்க, அவரிடமிருந்து வாங்கி வந்த காட் பாதரின் மூன்று பாகங்களையும் நண்பர்களைப் பார்க்க வைத்து மகிழ்ச்சி கொண்டவர் அவர்.
முத்துக்குமாரின் ‘தூர்’ கவிதையை எழுத்தாளர் சுஜாதா மக்கள் அரங்கில் தூக்கிக் கொண்டாட அவரது உயரம் ஒரே நாளில் வானம் தொடுகிறது.
பிறகு பாடலாசிரியராய் பரிமாணம். பிறகு இசையமைப்பாளர் தேவாவால் அறிமுகப்படுத்தப்பட்டு.. அசுர வளர்ச்சிக்கு பின்.. ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்..: என நம் கண்களை நனைய வைத்த முத்துக்குமார் பாடல் பயணம் இரண்டு தேசிய விருதுகள் வரை சென்றதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான்.
அஜயன் பாலா முத்துக்குமார் நட்பு சைக்கிளில் தொடங்கி டூவீலர் காரென வளர்ந்தாலும் நட்புக் கொண்ட காலம் தரம் மாறாமல் ஒலிக்கும் ஒரு நல்ல பாடலைப் போலவே கடைசிவரை இருந்திருக்கிறது. எந்த ஊராக இருந்தாலும் இலக்கிய கூட்டங்களில் ஒன்றாய்தான் இருவரையும்தான் பார்க்கலாம்.
அவனது கவிதைகள் குறித்து அஜயன் பாலா தரும் கடினமான விமர்சனங்களை தாங்கும் பக்குவம்கூட முத்துக்குமாரிடம் இயல்பாகவே இருந்திருக்கிறது. அந்த பெருந்தன்மையே முத்துக்குமாரை யார் சிறப்பாக எழுதினாலும் தேடிப் போய் பாராட்ட வைக்கிறது!
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவுக்கு இருவரும் நினைவு அஞ்சலி கூட்டத்தை சென்னையில் நடத்தியது. 73 அபிபுல்லா சாலை.
அறிவுமதி அண்ணனின் நண்பர்களுக்கான சரணாலயத்தில் இவர்களும் வாழ்ந்த அந்த நாட்கள்!
திருவண்ணாமலையில் இருவரும் கிரிவலம் வந்த அந்த தீபநாட்கள் என நெகிழ்வாய் அத்தனை நிகழ்வுகளும் நம் நெஞ்சில் நிறைகிறது.
அஜயன் பாலா தன் சினிமா வாழ்வின் வழியாகத்தான் இந்த நட்பை பகிர்கிறார். அதை பகிரும் அவரது எழுத்து மொழி வெகு இயல்பாய் அதே சமயம் வேகமாய் ஒரு நட்பின் கரத்தை அன்பாய் பற்றிக் கொண்டு எல்லோரிடமும் போய் ‘இவன் என் நண்பன்’ என அறிமுகப்படுத்துவதில் எத்தனை மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகிறது!!
தப்பி தவறிக்கூட ஒரு துளி ஈகோ இல்லாத நட்பு ஒரு கொடியைப் போல் கிடைத்த கிளையெங்கும் பரவிய நிகழ்வுகள் பசுமையாய் என்றென்றும் நம் நினைவில் நிற்கும்.
அது ஒரு நல்ல நட்பு எப்படி இருக்கும் வேண்டும் என்ற விதிகளையும் படிப்பவர்களுக்கும் இந்த நினைவுகள் நிச்சயம் அறிமுகப்படுத்தும்! சிறந்த புத்தகம் ஒன்றை தந்ததற்கு மகிழ்வும் வாழ்த்துகளும் அஜயன்!!
புத்தகம் : ‘நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார்’
ஆசிரியர் : அஜயன் பாலா.
பதிப்பகம் : நாதன் பதிப்பகம்.
விலை : ₹ 100/-
- நன்றி: ராம் சரசுராம் முகநூல் பதிவு