‘முதல் நீ முடிவும் நீ’ – பால்யத்தின் மலர்ச்சி!

பதின்பருவத்தில் தோன்றும் காதல், காமம் இன்ன பிற களவுகள் பற்றிப் பேசிய படங்கள் சொற்பம். பாலியல் சார்ந்த உணர்வுகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படும் களத்தில் வெறுமனே நட்பையும் காதலையும் பேசிய திரைப்படங்கள் அதைவிடக் குறைவு.

அப்படியொரு படைப்பாக உருவாகி, பத்து பன்னிரண்டாம் வகுப்பு நினைவுகளைக் கிளறுகிறது தர்புகா சிவா இயக்கியுள்ள ‘முதல் நீ முடிவும் நீ’. ஆர்ஜே, நடிகர், இசையமைப்பாளர் வரிசையில் இயக்குனராக அவரது முதல் படம் இது.

ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், காஸ்ட்டிங் இயக்குனர்களுக்கு ஒரு பொக்கிஷம். காரணம், அந்தளவுக்கு இதில் இளம் நடிகர்களும் நடிகைகளும் நிரம்பி வழிகின்றனர்.

பருவ வயதினிலே..!

வினோத் (கிஷன் தாஸ்), சைனீஸ் (ஹரீஷ்) இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பார்க்கும் பெண்களிடம் எல்லாம் சைனீஸ் காதலைத் தெரிவிக்க, 8-ம் வகுப்பு முதல் ரேகாவை (மீதா ரகுநாத்) காதலித்து வருகிறார் வினோத்.

பதினோராம் வகுப்பில் ரேகா அறிவியல் பாடப்பிரிவுக்கு மாற, வணிகவியல் படிக்கச் செல்கின்றனர் வினோத், சைனீஸ் மற்றும் ரேகாவின் தோழி அனு (அம்ரிதா).

இசைதான் உலகம் என்றிருக்கும் வினோத்துக்கு பள்ளிப்பாடமே பிடிப்பதில்லை. வினோத்தின் கனவை நிறைவேற்ற, அவனுக்குப் பிடித்தமான கிடாரை வாங்கிப் பரிசளிக்கிறார் ரேகா.

நாளும் பொழுதுமாக இருவரது காதல் வளர்ந்துவரும் நிலையில், விக்டோரியாவின் வரவு ரேகாவை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதற்காகவே, விக்டோரியாவிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்க்கிறார் வினோத்.

பள்ளி இறுதியாண்டு விழாவின்போது, திடீரென்று வினோத்தை விக்டோரியா முத்தமிடுவதைப் பார்த்து ஏமாற்றம் தாங்காமல் வெடிக்கிறார் ரேகா.

“நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியாமல் இப்படிப் பேசுகிறாயே” என்று வினோத்தும் கோபப்பட, இருவருக்குமிடையேயான காதல் உடைந்து சிதறுகிறது.

அப்போது வினோத்தின் முன் தோன்றும் காம தேவன் “உனக்கு ரேகாவின் காதல் வேண்டுமா வேண்டாமா” என்று கேட்க, “வேண்டாம்” என்று வினோத் சொல்ல அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

உடனே இது வினோத்-ரேகாவின் காதல் கதை என்று நினைத்துவிட வேண்டாம். தனது பண அந்தஸ்தை வெளிக்காட்டும் ரிச்சர்ட், அவருடனே வால் பிடித்து திரியும் துரை, ஆண்களுடன் பழக வெட்கப்படும் பிரான்சிஸ், சக மாணவ மாணவியருடன் சகஜமாக பழகுவதில் அலட்சியம் காட்டும் கேத்தரீன், எந்நேரமும் சாப்பாடும் கையுமாக இருக்கும் சூ,

திருடுவதில் இன்பமடையும் ‘திருட்டுகொட்டு திருமால்’, தலையில் கை வைத்தவுடனே பதறும் ஸ்ரீவஸ்தவ், டாக்டராகும் கனவு கொண்ட நௌஷாத் என்று பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட இளையோரின் ‘பருவ வயதினிலே’வாக விரிகிறது ‘முதல் நீ முடிவும் நீ’!

தவிர்க்கப்பட்ட ஆபாசம்!

‘அழியாத கோலங்கள்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’ இரண்டும் திரையில் பதின் பருவத்திற்கான வழிகாட்டிகளாக இருப்பதால் ‘துள்ளுவதோ இளமை’, ‘பாய்ஸ்’, ‘96’ என்று விதவிதமான உணர்வுகளை வெளிக்காட்டும் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியாகி வருகின்றன.

ஆனால், ‘அடல்ட் காமெடி’ என்ற பெயரில் ஆபாசம் வேண்டாம் என்று தர்புகா சிவா இறங்கியிருப்பதற்கு பாராட்டுகள்!

பள்ளிப் பருவத்தில் காதல் மட்டுமே பிரதானம் என்ற எண்ணம் பூதாகரப்படுத்தப்படுவதைத் தவிர்த்து, கொஞ்சமே கொஞ்சமாய் ‘மெச்சூர்டாக’ கடந்து சென்றிருக்கலாம்.

அதே நேரத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களை தனிப்பிறவிகளாக காட்டாமல் சாதாரணமாகத் திரையில் வெளிப்படுத்தியிருப்பது அபாரம்! பெரும்பாலான காட்சிகள் மலையாளத்தில் வெளியான ‘தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தை நினைவுபடுத்துகின்றன.

சுமார் பத்தாண்டு கால இடைவெளியைக் காட்டும் வகையிலான திரைக்கதையின் காரணமாக, பள்ளிப்பருவத்திலும் அதற்குப் பின்னும் பெரும்பாலும் ஒரே நடிகர், நடிகைகளையே பயன்படுத்திய விதத்தில் வித்தியாசப்படுகிறது ‘மு.நீ.மு.நீ’.

இதற்காகவே 20-களைத் தாண்டியவர்களை நடிக்க வைத்திருப்பது ஆங்காங்கே ‘ஜெர்க்’ தருகிறது.

கிஷன் தாஸ், ஹரீஷ் இருவரும் பெரும்பாலான பிரேம்களை ஆக்கிரமித்தாலும் ரிச்சர்டாக வரும் வருண் ராஜன், துரையாக வரும் ஷரண் குமார், பிரான்சிஸாக வரும் ராகுல் கண்ணன்,

சூவாக வரும் கௌதம் ராஜன், நௌஷத் ஆக வரும் மஞ்சுநாத், ஸ்ரீவஸ்தவாக வரும் சச்சின், திருமாலாக வரும் நரேன் விஜய், கேசட் கடை உரிமையாளராக வரும் ஆனந்த் உள்ளிட்டோரும் திரையில் மின்னுகின்றனர்.

உண்மையைச் சொன்னால் சச்சின், நரேன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ‘எடிட்’டில் சிக்கியிருப்பதால் பின்பாதியில் வரும் சில சம்பவங்கள் துண்டாகத் தெரிகின்றன.

மீதா, அனு தவிர்த்து கேத்தரீனாக வரும் பூர்வா ரகுநாத், விக்டோரியாவாக வரும் ஹரிணி மற்றும் ஆசிரியர்களாக வரும் மிர்ச்சி சிவசங்கரி, பவித்ரா உள்ளிட்டோரும் கவனம் அள்ளுகின்றனர். இவர்களைத் தாண்டி சிறு வேடங்களில் நடித்தவர்களும் கூட ஈர்க்கின்றனர்.

பிரதான வேடங்களில் நடித்தவர்களில் சிலர் உதவி இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

தர்புகா சிவா தோன்றும் காட்சி திடீர் திருப்பமாக இருந்தாலும், அதன்பின் வரும் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. கிஷன் – மீதா முத்தம் வரை இது தொடர்கிறது. அதன்பின் வரும் திருப்பம் எதிர்பார்த்தது என்றாலும், ஒவ்வொரு பாத்திரத்தின் எதிர்காலமும் எப்படி மாறியது என்பதைக் காட்டியதில் கொஞ்சம் உளவியலும் கலந்திருப்பது சர்ப்ரைஸ்!

வீடியோ எபெக்ட்!

சுஜித் சாரங்கின் ஓளிப்பதிவு ஹேண்டியாக வீடியோ பாணியில் அமைந்திருப்பது, நாமும் ஒரு பள்ளிக்கூடத்தினுள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரேமை கொஞ்சம் அழகுபடுத்தினாலும் ‘96’ நினைவுக்கு வரும் என்று கவனமெடுத்து தவிர்த்திருப்பது தனி அழகு. ஆனாலும், கலரிஸ்ட் நவீன் சபாபதியின் உழைப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

கேசட் கடை, வகுப்பறை போன்றவற்றில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் கலை இயக்குனர் வாசுதேவன். பின்பாதியில் வரும் ரெஸ்டாரெண்ட் செட்டப் மட்டும் வெகு சாதாரணமாகத் தெரிகிறது.

ஸ்ரீஜித் சாரங்கின் கத்திரி சில இடங்களில் இரக்கம் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சூ வீட்டில் ஆபாச வீடியோ ஓடும் காட்சியை ‘கட்’ செய்துவிட்டு ஸ்ரீவஸ்தவ், திருட்டுகொட்டு திருமால் மற்றும் சக மாணவிகளோடு பழகாமல் தனிமையில் உழலும் கேத்தரீன் குறித்த காட்சிகளைக் காட்டியிருக்கலாம்.

அதேபோல வினோத், ரேகா பாத்திரங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அவர்களது உறவினர்களுக்கோ, சுற்றியிருப்பவர்களுக்கோ கொஞ்சம் கூட கிடைக்காதது திரையில் யதார்த்த உணர்வைச் சீர்குலைக்கிறது.

மிக முக்கியமாக, இருவரது காதலும் உடையுமிடத்தில் பின்னணியில் இருப்பவர்கள் ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருப்பது கொடுமை.

தர்புகா சிவாவின் இசையில் ‘முதல் நீ முடிவும் நீ’, ’நெடுநாள்’, ’வீழாதே மனமே’ உள்ளிட்ட பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, முழுக்க ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

ஒரு இயக்குனராக நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கியதிலும் காட்சிகளை கோர்த்ததிலும் அசத்தியிருக்கிறார் தர்புகா சிவா.

ஆனால், பாத்திரங்கள் அனைத்துமே தங்களது காதலைக் கண்டுணர்ந்து வாழ்வில் உயர்ந்திருக்கின்றன என்று சொல்ல வந்தவர், திரைக்கதையில் அதற்கான உரிய இடம் தர மறந்திருக்கிறார்.

இதனால் பள்ளிப் பருவம், ரீயூனியன் மற்றும் இரண்டாம் கிளைமேக்ஸ் திரையில் ஓடும் நேர விகிதம் முழு திருப்தியைத் தரவில்லை.

ஆனாலும், நல்ல இசைக்காகவும் நடித்தவர்களின் திரை இருப்புக்காகவும் ‘மு.நீ.மு.நீ’ கண்டிப்பாக நினைவுகூரப்படும்!

  • உதய் பாடகலிங்கம்
You might also like