சம்பூர்ண ராமாயணம்: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!

தேரோடும்போது சக்கரத்தின் அடியில் சிறிய சாய்வான கட்டையொன்றை வைத்தால் போதும், தேரின் திசை திரும்பிவிடும்.

அதைப் போலவே, 1960-களில் தமிழ் சினிமாவின் போக்கை புராணங்களின் பக்கம் திருப்பிய பெருமை ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்துக்கு உண்டு.

1958-ம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தமிழ்ப் புத்தாண்டு’ வெளியீடாக இத்திரைப்படம் வெளியானது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெள்ளிவிழாப் படமாகவும் ஆனது.

திருவிளையாடல், திருவருட் செல்வர், கந்தன் கருணை முதல் பல்வேறு திரைப்படங்கள் புராண இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் திரையுலகில் வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

அவை தயாரிக்கப்படுவதற்கான தைரியத்தைத் தந்தது சம்பூர்ண ராமாயணம் என்றும் சொல்லலாம்.

சமூகப் படங்களுக்கு நடுவே…!

1950-களுக்குப் பிறகு தமிழில் புராண திரைப்படங்களின் வருகை குறைந்து போயிற்று. சமூகப் படங்களில் வசனங்களை உரக்கப் பேசும் பாணியும், ராஜ கதைகளில் நிரம்பியிருந்த கற்பனையும், ஒரு பாதுகாப்பான உள்ளடக்கத்தைப் படைப்பாளிகளிடம் உருவாக்கியிருந்தன.

மக்களுக்குத் தெரிந்த கதைகளைச் சுவாரஸ்யமாகச் சொல்வதில் தயக்கம் இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அந்த நேரத்தில், சேலத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு சம்பூர்ண ராமாயணத்தை உருவாக்க முன்வந்தார்.

இதற்கு முன்னதாக, இவர் தயாரித்த திரைப்படத்தின் பெயர் ‘டவுன்பஸ்’. இப்படத்தின் திரைக்கதையை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு இயக்கத்தைக் கவனித்திருந்தார். இப்படம் தந்த வெற்றி, இக்கூட்டணியை மீண்டும் ஒன்று சேர்த்தது.

சினிமாவில் ராமாயணம்

மௌனமொழி பேசிய காலத்தில் இருந்தே சினிமாவுடன் ராமாயணத்துக்கு இருந்த தொடர்பு தொடர்ந்து வருகிறது.

1917-இல் தாதா சாகேப் பால்கேவின் லங்கா தகன், 1920-இல் ஜி.வி.சனேவின் ராம் ஜன்மா, 1942-இல் விஜய் பட்டின் பரத் மிலாப், 1943-இல் ராம்ராஜ்யா ஆகியன இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாக வெளியாகின.

இதில் பரத் மிலாப், ராமராஜ்யா இரண்டும் இந்தி மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்டன. மகாத்மா காந்தி கண்ட ஒரே சினிமா என்ற பெருமை ராமராஜ்யாவுக்கு உண்டு.

இடையே இந்தியில் 1933லும், தெலுங்கில் 1936லும் ராமாயணம் படமாக்கப்பட்டது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் தயாரான பல திரைப்படங்கள், தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றன.

ஆனாலும், 1960களில் இந்த ட்ரெண்டை வெற்றிகரமாகத் துவக்கிய பெருமை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு உண்டு.

வால்மீகி ராமாயணத்தின் தழுவல்!

சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் வால்மீகியின் எழுத்தை அடிப்படையாகக் கொண்டது என்று விக்கிபீடியா உள்ளிட்ட தகவல் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம், கம்பரின் காவியத்தில் இருந்த சுவை இதன் திரைக்கதையில் பெரிதாக வெளிப்படாததுதான்.

ராமாயணத்தில் உள்ள பாத்திரங்கள், பெயர்கள், இடங்கள், கதைப் போக்கைத் தீர்மானிக்கும் சம்பவங்கள் இதில் பிரதான இடம் பிடித்தன.

ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய நால்வரது பிறப்பிலிருந்து படம் தொடங்குகிறது. ராவணனை போரில் வென்று அயோத்தி திரும்பும் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடப்பதோடு முடிவடைகிறது.

ராமரின் பெருமையைப் பாடுவதாகவே ராமாயணம் அமைந்திருந்தாலும், அதில் பல்வேறு தனித்துவமான பாத்திரங்களும் உண்டு. வாலி, குகன், மந்தரை உள்ளிட்ட பல பாத்திரங்களுக்கு இத்திரைப்படத்தில் பெரிதாக இடமில்லை.

90-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ராமானந்த சாகரின் ‘ராமாயணா’ இவற்றை விலாவாரியாகக் காட்டியது.

சில மணி நேரங்களில் ராமாயணத்தின் சாரத்தைத் திரைக் கதையில் பிழிந்தாக வேண்டிய கட்டாயம் இதன் பின்னிருப்பதை நம்மால் உணர முடியும். இதனாலேயே கம்பனின் காதலை இதில் நம்மால் காண முடியாது.

மாபெரும் நட்சத்திரப் பட்டாளம்!

சம்பூர்ண ராமாயணத்தில் ராமனாக என்.டி.ராமராவ், சீதையாக பத்மினி, லட்சுமணனாக நரசிம்ம பாரதி, பரதனாக சிவாஜி கணேசன், தசரதனாக சித்தூர் நாகையா, கோசலையாக புஷ்பவல்லி,

கைகேயியாக ஜி.வரலட்சுமி, சுமித்திரையாக எஸ்.டி.சுப்புலட்சுமி, ராவணனாக டி.கே.பகவதி, மண்டோதரியாக சந்தியா, சூர்ப்பனகையாக எம்.என்.ராஜம், குகனாக வி.கே.ராமசாமி உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்திருந்தனர்.

ராமனாக நடித்த என்.டி.ஆருக்கு கே.வி.சீனிவாசன் எனும் நாடகக் கலைஞர் குரல் இரவல் தந்திருந்தார். சாந்தமான குணம் எனும் தன்மையை அது எளிதில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

‘மாயபஜார்’ படத்தில் முதன்முதலாக கிருஷ்ணர், சம்பூர்ண ராமாயணத்தில் ராமன் பாத்திரங்களை ஏற்ற என்.டி.ஆர். பின்னாட்களில் தெய்வாம்சமாக ஆந்திர மக்களால் கொண்டாடப்பட்டார். 17 படங்களில் அவர் புராண பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

புராண பாத்திரத்தில் முதன்முதலாக!

ராமனுக்கு பட்டாபிஷேகம் இல்லை என்றதும் லட்சுமணன் ரவுத்திரம் கொள்வார் என்பது ராமாயணம் படித்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதனை மீறாத ஏ.பி.நாகராஜன், நாடு திரும்பும் பரதன் நடந்ததைக் கேள்விப்பட்டு ஆத்திரத்தில் கொதிப்பதாக அமைத்திருப்பார்.

காரணம், பரதனாக நடித்த சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகர் என்பதே.
அயோத்தி மக்கள் தன்னைக் கண்டதும் முகம் சுருக்குவதைக் கண்டதும் நேராக கைகேயியைக் காண்பார்.

தசரதனிடத்தில் வரம் பெற்று ராமனைக் காட்டுக்கு அனுப்பினேன், உனக்கு அரியாசனம் ஏற வகை செய்தேன் என்று தாய் சொன்னதும், மலையென வார்த்தைகளைக் கொட்டுவார் பரதன்.

நாயே பேயே என்று சொல்லாத குறையாக, தாயை ஒருமையில் விளிப்பார். வசைமாரி பொழிவார்.
பஞ்சவடி சென்று ராமனை நேரில் கண்டபிறகே, தாயைப் பழிக்கக் கூடாது என்ற அவரது வார்த்தைகளைக் கேட்ட பிறகே, தன் கோபத்தைக் கைவிடுவார்.

மற்ற மொழிகளில் வெளியான படங்களில் பரதனுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தில் முதலில் பரதன் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
திமுகவில் அங்கம் வகித்த அவர், தான் புராணப் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, அந்த வாய்ப்பு சிவாஜிக்கு போனது.

அவர் புராணப் படங்களில் நடிப்பதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், இப்படமே முதலாவதாக அமைந்தது. திமுக மீது அவர் கொண்டிருந்த அபிமானம் காங்கிரஸ் கட்சியின் பக்கம் திரும்பியதும் இதே காலகட்டத்தில் தான்.

இதனாலேயே, சிவாஜியின் பிலிமோகிராபியில் இப்படம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
பின்னாட்களில் ஏ.பி.நாகராஜன் சிவாஜியோடு கைகோர்த்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம் உட்படப் பல வெற்றிகளைக் குவிக்க இப்படம் வழிவகுத்தது என்று சொல்லலாம்.

பாடல்களில் சொல்லப்பட்ட கதை!

சூரிய வம்சத்தின் சிறப்பைக் கூறுவதாக அமைந்த ‘மக்கள் பிறந்ததை எண்ணி எண்ணியே’ என்ற பாடலில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் வழியாகவே நான்கு மக்களைப் பெற்ற தசரதனின் பெருமை சொல்லப்பட்டுவிடும்.

விசுவாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அழைத்துச் செல்ல, தாரகை உள்ளிட்ட அசுரர்களை அழித்து அதன்பின் அகலிகையின் சாபம் நீக்கியதெல்லாம் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் அமைந்த ‘பஞ்சணை மீது’ பாடலில் அடக்கப்பட்டிருக்கும்.

ஜனக சபையில் வில்லை ஒடித்து சீதையை மணந்ததும் கூட இதிலேயே சொல்லப்பட்டுவிடும். இதில் பால்ய பருவத்து சீதையாக நடிகை சுகுமாரி வந்து போவார்.

அதேபோல அனுமன், சுக்ரீவன் அறிமுகமும், வாலியை வதைத்து வானரப் படைகளின் உதவியுடன் ராமன் இலங்கைக்கு பாலம் அமைத்துச் செல்வதும், ராவணனுடன் போர் புரியத் தயாராவதெல்லாம் பின்னாட்களில் விரிவாகச் சொல்லப்பட்டன.

ஆனால், இப்படத்தில் அவை அனைத்தும் ‘சபரிக்கு ராமனும் தன்னிலை உரைத்தான்’ எனும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

காதல், நகைச்சுவை, சோகம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே பாடல்கள் அமைக்கப்பட்ட காலத்தில், ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் மீண்டும் அவை கதை சொல்லப் பயன்படுத்தப்பட்டன. இது நேரத்தைச் சிக்கனப்படுத்தும் உத்தியாகும்.

இன்றும் கூட, பல படங்களில் வசனங்களுக்கு நடுவில் பாடல்களின் வழியே கதை சொல்வது வெற்றிகரமாகக் கையாளப்படுகிறது. அது, ரசிகர்களை எளிதில் கதைசொல்லியுடன் பிணைக்கும் வழியாகவும் இருக்கிறது.

மயக்கும் ‘கந்தர்வ’ இசை!

டைட்டில் காட்சியில் பெயருடன் ஒலிக்கிறது நாமகிரிப்பேட்டை கே.கிருஷ்ணன் அண்ட் பார்ட்டியின் நாதஸ்வர இசை.

‘அன்னையும் பிதாவுமாகி’, ‘நீதி தவறாது’, ‘சங்கீத சௌபாக்யமே’, ‘எல்லோரும் கொண்டாடும் ராமராஜ்யமே’, ‘அறநெறி மறந்த தமையனை’ உட்பட 19 பாடல்கள் இப்படத்தில் உள்ளன. இதில், அனைத்து பாடல்களையும் மருதகாசி எழுதினார்.

சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் குரல்களில் ஒலிக்கும் ‘வீணை கொடியுடைய வேந்தனே’ இப்போதும் நம் மனதை மயக்கச் செய்யும்.

போரில் தோல்வியுற்று தனியனாகத் திரும்பிய ராவணன் மனதை அரற்றுவதாக ஒலிக்கும் ‘இன்று போய் நாளை வா’ பாடலை மட்டும் சி.எஸ்.ஜெயராமனே இசைத்துப் பாடியிருக்கிறார்.

யாராலும் வெல்ல முடியாத வீரனாகப் புகழப்படும் ராவணனின் புகழைச் சொல்வதோடு, மாற்றான் மனைவியைக் கவர்ந்ததே அவர் இழைத்த ஒரே தவறு என்று மற்றனைவரும் சொன்னபிறகு, தன்னிலை உணரத் தலைப்படும் இறைவனை வேண்டிப் பாடுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

பாடகரின் கோபம்!

இப்படத்தில் ராவணனாக நடித்த டி.கே.பகவதிக்கு முதலில் பின்னணி பாடியவர் எஸ்.சோமசுந்தரம். ஆனால், அவரது குரலுக்கு ஏற்ப பகவதியால் வேகமாக வாயசைக்க முடியவில்லை.

இதனால், சி.எஸ்.ஜெயராமனை வைத்து மீண்டும் அதே பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இதனைக் கேள்விப்பட்டு கோபமான சோமசுந்தரம், தான் பாடியதை இசைத்தட்டில் சேர்க்க வேண்டாம் என்று படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனால் இழப்புக்குள்ளானது தமிழ் திரையிசை ரசிகர்கள்தாம்.

அவசரமான முடிவு!

மந்தரை சூழ்ச்சியின் விளைவாக தசரதன் அல்லலுறுவதும், தாயின் வரங்களே தந்தையின் உயிர் குடித்ததை எண்ணி பரதன் வருந்துவதும்,

ராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை மூக்கறுபடுவதும், தங்கையின் நிலை கண்டு துடிக்கும் ராவணன் ராமனை அடக்க நினைப்பதும் இத்திரைக்கதையில் பெரும்பாலான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் இப்படத்தில் போர்க் காட்சிகள் மிகக் குறைவு. ஆனாலும், ஒளிப்பதிவாளர் கோபன்னாவின் தந்திரக் காட்சிகளால் அவை குறை சொல்ல முடியாத தரத்தினில் அமைக்கப்பட்டிருக்கும்.

போரில் ராவணனை வென்றபிறகு, உடனடியாக சீதையைத் தீக்குளிக்க உத்தரவிடுவார் ராமன். அதன் தொடர்ச்சியாக, வனவாசம் அன்றோடு முடிந்து அடுத்தநாள் அனைவரும் நாடு திரும்புவதாகத் திரைக்கதை அமைத்திருப்பார் நாகராஜன்.

பின்னாட்களில் இந்த இடத்தைச் செப்பனிட்டு லவகுசா உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன.

ராஜாஜியின் பாராட்டு!

திரைப்படங்கள் மீது பெரிதாக ஆர்வம் காட்டாத மூதறிஞர் ராஜாஜி, சம்பூர்ண ராமாயணத்தைப் பார்த்தபிறகு ‘பரதனைக் கண்டேன்’ என்று சிவாஜியை வெகுவாகப் பாராட்டினார். அந்த நேரத்தில், அவர் கல்கி இதழில் ராமாயணத்தை தொடராக எழுதி வந்தார்.

சமூகப் படங்கள் பெருகிய காலத்தில், மீண்டும் புராணப் படங்களின் பெருக்கத்துக்கு வித்திட்ட படம் இது. திமுக மற்றும் சமூகப் படங்களின் வளர்ச்சி, எம்ஜிஆரின் திராவிட அரசியல், சிவாஜியின் காங்கிரஸ் ஈர்ப்பு போன்ற பல விஷயங்களை சேர்த்தணைத்து நோக்குகையில் இதன் வெற்றி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியவரும்.

டைட்டிலில் புகைப்படம்

பொம்மை படத்தின் இறுதிக்காட்சியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவரையும் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர்.

அதற்கு முன்னதாகவே உருவான இப்படத்தில், டைட்டிலில் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயருக்கு அருகே அவர்களது புகைப்படங்கள் இடம்பெற்றது நிச்சயம் புதுமையானது.

செட் டிசைன் – சி.ஹெச்.இ.பிரசாத் ராவ், உடை அலங்காரம்- டி.ஏ.மாதவன், மேக்கப் – கே.ஆர்.ராகவ், ஆர்ட் அண்ட் செட்டிங்க்ஸ்- எம்.பி.குட்டி அப்பு உட்பட அனைவரது புகைப்படங்களும் இதில் பெற்றிருக்கும்.

ஆனால், இதில் உதவியாளர்களுக்கு அந்த சிறப்பு செய்யப்பட்டிருக்காது.

எதிர்பாராத திருப்பம்!

சினிமாவுலகத்தைப் பொறுத்தவரை மேக்கப், உடைகள் மற்றும் துணை நடிகர், நடிகைகளின் வாழ்வாதாரத்துக்கு இவ்வகை திரைப்படங்கள் வழி அமைத்தன.

திரைப்படங்களில் வண்ணம் புகுந்தபோது, மண்ணில் இருந்து அந்தரத்துக்குத் தாவின புராண, இதிகாசப் பாத்திரங்கள். புகை மண்டலத்துக்கு நடுவே அசரீரி புகுந்து, ரசிகர்களின் கற்பனையில் தங்க நிறம் கலந்துபோனது.

இதற்கு அர்த்தம் தர பிரமாண்டத்தை படைப்பாளர்கள் தேர்ந்தெடுக்க, அதுவே பின்னாட்களில் புராணப் படங்களைத் தயாரிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் மாறியது.

ஒருவகையில், திரையில் புராணப் படங்களின் பெருக்கம் நாட்டுப்புறக் கலைகளின் ஒடுக்கத்துக்குக் காரணமானது.

தெருக்கூத்து உள்ளிட்ட கலைகளைக் காணும் ஆர்வம், கதை சொல்லுதலின் வழியே கடத்தப்பட்ட கலாசார மதிப்பீடுகள், கதைகளுக்குப் பின்னிருக்கும் தத்துவ சாரம் ஆகியன சிதைந்து போயின.
நாடெங்கும் இதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன.

ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களைத் தாண்டி, மைய நீரோட்டத்துக்கு எதிரானதாக இல்லாமல் புனைவுகளை உருவாக்க முயன்றால் அதீத புகழ்ச்சி மட்டுமே மீதமிருக்கும். அதற்கான தொடக்கங்களுள் ஒன்றாக ‘சம்பூர்ண ராமாயணம்’ படமும் அமைந்தது.

இவையனைத்தையும் மீறி சைவ, வைணவ புராணங்களைத் திரையில் மொழிபெயர்க்க உதவியதும், அதனைக் கண்டு தமிழ் திரை ரசிகர்கள் அனைவரும் ஆனந்தமடைந்ததும், இத்திரைப் படத்திற்கான பெருமையின் உச்சம்!

****

படத்தின் பெயர்: சம்பூர்ண ராமாயணம், இயக்கம்: கே.சோமு,
திரைக்கதை, வசனம்: ஏ.பி.நாகராஜன்,
பாடல்கள்: ஏ.மருதகாசி,
இசை: கே.வி.மகாதேவன்,
கலை: சி.ஹெச்.இ.பிரசாத் ராவ், எம்.பி.குட்டி அப்பு,
உடை அலங்காரம்: டி.ஏ.மாதவன், மேக்கப்: கே.ஆர்.ராகவ்,
ஒளிப்பதிவு அண்ட் தந்திரக் காட்சிகள்: வி.கே.கோபன்னா,
ஒலிப்பதிவு: சி.வி.ராமஸ்வாமி, பாடல்கள் ஒலிப்பதிவு: டி.எஸ்.ரங்கசாமி,
படத்தொகுப்பு: டி.விஜயரங்கம், தயாரிப்பு: எம்.வி.வேணு,
ஸ்டூடியோ: ரத்னா, சேலம்
நடிப்பு: என்.டி.ராமாராவ், பத்மினி, சிவாஜி கணேசன், டி.கே.பகவதி, நாகையா, சந்தியா, ஜி.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, நரசிம்ம பாரதி, எம்.என்.ராஜம் மற்றும் பலர்.

– உதய் பாடகலிங்கம்.

You might also like