சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவதுடன், உரம் விற்பனையை அதிகரிப்பதன் மூலம், சென்னையை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியில், தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஐந்து மண்டலங்களில், மாநகராட்சி நேரடியாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளில், 19 ஆயிரத்து 618 துாய்மை பணியாளர்கள் மற்றும் 6,117 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் தினசரி, 5,200 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 50 சதவீதம் மக்கும் குப்பையும், 50 சதவீதம் மக்காத குப்பையும் கிடைக்கிறது.
மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்க 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், தினசரி 450 டன் மக்கும் கழிவுகள் பதனிடப்பட்டு உரமாக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உரம், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகக் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக ஒரு கிலோ உரம் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் மகேசன்,
“சென்னையில், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில், 208 உரம் தயாரிக்கும் நிலையங்களில், 450 டன் உரம் தயாரிக்கப்படுகிறது.
இதைத் தவிர, மறுசுழற்சி செய்ய முடியாத, எரியூட்டக்கூடிய உலர் கழிவுகள், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு வாரந்தோறும் 50 டன் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள குப்பை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குளில் கொட்டப்படுகின்றன.
இதில், பெருங்குடி குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பை, ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கும், ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றப்பட உள்ளன.
தினசரி சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களிலேயே, உரம் தயாரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பயன்படுத்த முடியாத பொருட்களை, எரியூட்டி அழிக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் 2,600 டன் குப்பை மக்கும் தன்மை உடையது.
இதில், தயாரிக்கப்படும் பசுமை உரத்தை மக்கள் வாங்கி, விவசாய நிலங்கள், வீடுகளில் வளர்க்கும் பூச்செடிகளுக்கு பயன்படுத்தத் துவங்கினால், கிடங்கிற்கு செல்லும் குப்பையின் அளவு பெரும்பகுதி குறையும்.
மேலும், சிமெண்ட் ஆலை, மறுசுழற்சி ஆலைக்கு குப்பை அனுப்பப்படுவதால், குறைந்த அளவிலான குப்பையை பயோ மைனிங் முறையில் எரியூட்டி அழிக்கலாம்.
தற்போது, சென்னை மாநகராட்சியில் சேகரமான மக்கும் குப்பையில் இருந்து தயாரித்த, 160 டன் உரம் கையிருப்பில் உள்ளது.
இவற்றை, உரப்பைகளில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு பயன்படுத்த மிகக் குறைந்த அளவில், ஒரு கிலோ மூன்று ரூபாய் அளவில் பசுமை உரம் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாகவும், மாநகராட்சியின் மண்டல அலுவலங்கள் வாயிலாகவும் பசுமை உரத்தை மக்கள் வாங்கலாம்.
வரும் நாட்களில் உரம் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், சென்னையை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற முடியும்” எனக் கூறினார்.
ரசாயன கலப்பின்றி, மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த உரத்தை, சென்னையைச் சுற்றியுள்ள, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தயக்கிமின்றி வாங்கிப் பலன் அடையலாம். மிகமிக குறைந்த விலையில் விற்கப்படுவதால், விரைவில் விற்பனை அதிகரிக்கும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு கொடுத்தால் உற்பத்தியை அதிகப்படுத்தி, ‘குப்பையில்லா மாநகாரட்சி’ என்பதை சாத்தியப்படுத்த முடியும்.