‘நவராத்திரி’ எடுத்த ஏ.பி.என் பற்றி நவரத்தினச் செய்திகள்!

* ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் – அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன்.

சேலம் அக்கம்மா பேட்டையில் உள்ள ஏ.பி.என்.னின் சொந்த வீட்டில் அவர் இயக்கிய படங்களின் படங்களைத் தொகுத்து, ஒரு நூலகத்தையும் அமைத்து திறந்து வைத்தவர் நடிகர் சிவகுமார்.

* டி.கே. சண்முகம் நாடகக் குழுவில் நடித்த நாகராஜன் தானே முயன்று தமிழைக் கற்றவர். கனமான குரல். தெளிவான உச்சரிப்பு. எப்போதும் கதராடை – வேட்டி. அவருடைய வீட்டில் இருந்தவை மட்டும் சுமார் மூவாயிரம் நூல்கள்.

*வி.கே.ராமசாமியுடன் இணைந்து கூட்டாகத் தயாரித்த ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்திற்குக் கதை, வசனம் ஏ.பி.என். அவர் வசனம் எழுதிப் பெரும் வெற்றியைப் பெற்ற இன்னொரு படம் –  சம்பூர்ண ராமாயணம்.

* விஜயலெட்சுமி பிக்சர்ஸ் சார்பில் ஏ.பி.என். தயாரித்த படம் ‘நவராத்திரி’. சிவாஜியின் நூறாவது படமான இந்தப் படம் ஏ.பி.என்.னின் வளமான குரலுடன் தான் துவங்கும்.

பிரான்ஸூக்கு அனுப்பப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. 1964 ல் வெளியான ‘நவராத்திரி’ பெரும் வெற்றி.

* அடுத்த ஆண்டில் வெளியாகித் தொடர் வெற்றியைக் கொடுத்த படம் ‘திருவிளையாடல்’. மாநில அரசின் விருதும், குடியரசுத் தலைவர் விருதும் கிடைத்த இந்தப் படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கிப் பாதுகாத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.

*கந்தன் கருணை – கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் சீனிவாசனுக்காக ஏ.பி.என் இயக்கிய படம். ஏற்கனவே தானே நக்கீரராக நடித்திருந்தும், இந்தப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனை நக்கீரராகப் பாடி நடிக்க வைத்தார் ஏ.பி.என்.

*1968ல் ஜெமினி வாசனிடமிருந்து உரிமையைப் பெற்று உருவான ‘தில்லானா மோகனம்பாள்’ படம் கலைஞர், ஜெயலலிதா இருவருக்குமே பிடித்தமான படம்.

பரதம், நாதஸ்வரம் – இரண்டின் மகிமையையும் ஒன்றிணைத்த இந்தப் படம் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பாடமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

* 1977-ல் எம்.ஜி.ஆரை வைத்து ஏ.பி.என் இயக்கிய படம் ‘நவரத்தினம்’. படத்தை முடித்ததும் ஏ.பி.என். செய்தியாளர்களிடம் சொன்னார். ”நான் நடிகர் திலகத்தை வைத்துப் பல படம் எடுத்தேன். மக்கள் திலகத்தை வைத்துப் பணம் எடுத்தேன்”.

* தமிழ் உணர்வினால் ம.பொ.சி.யின் ‘தமிழரசுக் கழகத்தில்’ இணைந்து செயல்பட்ட ஏ.பி.என்.னின் ஒரு விழாவுக்கு வந்திருந்த கலைஞர் சொன்னார்.

“சிறப்பாகப் படம் எடுப்பார் என்று பாராட்டுவதில் என்ன தவறு? அவர் பெயரே நாகராஜனாயிற்றே. அவர் சிறப்பாகப் படம் எடுக்காமல் இருப்பாரா?”

21.01.2022 10 : 50 A.M

You might also like