அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும் வலியுறுத்தி வருகிறது.
பாலைவனங்கள், மலைப்பகுதிகள், பனி மழை பொழியும் குளிர்ப்பிரதேசங்களில் எல்லாம் தடுப்பூசி செலுத்தும் மருத்துவப் பணியாளர்கள் அலுப்பில்லாமல் சேவையாற்றி வருகிறார்கள்.
காஷ்மீரில் உள்ள இமாலய மலைக்கிராமத்தில் சுகாதாரப் பணியாளர் மஸ்ரத் பரீத், தன் தடுப்பூசி பெட்டியை சுமந்துகொண்டு பனிபடர்ந்த மலைகளில் ஏறி மக்களிடம் செல்கிறார். அதுவும் ஜனவரியில் கடும் குளிர் வீசும்.
ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பதின் வயதினருக்குத் தடுப்பூசியும் முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துகிறார்கள். யாரும் எளிதில் செல்லமுடியாத மலைக் கிராமங்களுக்குச் சென்று காஷ்மீர் மருத்துவப் பணியாளர்கள் சேவை செய்கிறார்கள்.
“நாங்கள் நோய்ப் பரவலை எதிர்த்துப் போராடுகிறோம். தொடர்ந்து செல்கிறோம்” என்கிறார் பரீத். முழங்கால் வரை பனிபடர்ந்த பகுதிகளில் மெல்ல ஊர்ந்து காடுகளுக்குள் இருக்கும் கங்கன்ஜீர் போன்ற மலைக்கிராமங்களை அடைகிறார்கள்.
பரீத் மற்றும் அவருடைய தோழர்கள் கடந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். அந்த கிராமங்களை அடைவது பெரும் சாதனைதான். எலும்பையே சில்லிடவைக்கும் குளிரைக் கடந்து செல்லவேண்டியிருக்கும்.
இதுபோன்ற பல தடைகளைத் தாண்டித்தான் மக்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். இன்னமும்கூட கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
“இளம் பெண்கள்கூட தயங்குகிறார்கள். ஏதோ தவறான தகவல்களைக் கேட்டு அப்படி செயல்படுகிறார்கள்” என்று சொல்கிறார் பரீத்.
சமீபத்தில்தான் அவர் பனிக்கட்டிகளால் சூழ்ந்த கிராமத்தில் தடுப்பூசி முகாமை நடத்தி வந்திருக்கிறார். தடுப்பூசி போடுவதால் கர்ப்பம் தரிக்காது போன்ற மூடநம்பிக்கைகள் பெண்களிடம் உள்ளதாக அவர் கவலைப்படுகிறார்.
“கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதுடன், தடுப்பூசி பற்றிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறோம்” என்று எதார்த்தம் பேசுகிறார் பரீத்.
இந்த மாதத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதேபோல 60 வயகுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துகிறார்கள்.
சுகாதார அதிகாரி ஜாபர் அலி, இந்த ஆண்டில் நிலவும் பருவநிலை எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது என்று கவலைப்படுகிறார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும், பின்விளைவுகள் அதிகம் இருக்கும் என்பன போன்ற மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரவியிருக்கின்றன.
பார்வைத்திறனற்ற மாற்றுதிறனாளி பெண்மணி ஆர்ஷா பேகம், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
- பா. மகிழ்மதி