தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?

புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஊடகங்களில் பலர் இது பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, ஒன்றிய அரசு சார்பில் இதற்கு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தற்போது மட்டும் புதிதாக நடக்கிற ஒன்றல்ல என்றும் இதற்கு விசேஷ அர்த்தம் கற்பிக்க வேண்டியதில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

நேதாஜியை முன்னிலைப்படுத்தும் மேற்கு வங்கத்திற்கும், நாராயாணகுருவை முன்னிலைப்படுத்தும் கேரளாவுக்கும அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பாரதியை, வ.உ.சி.யை, மருது சகோதரர்களை, வேலு நாச்சியாரை முன்னிலைப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

75 ஆவது குடியரசுத் தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் இத்தகைய சர்ச்சைக்கு ஒன்றிய அரசு வழி வகுத்திருக்க வேண்டியதில்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களை மாநில பேதம் பார்த்து ஒத்துக்குவதோ, புறக்கணிப்பதோ வரலாற்று அபத்தம்.

1887 ல் வட இந்தியாவில் மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகத்தை முதலாம் சுதந்திரப்போராக குறிப்பிடுகிற ஒன்றிய அரசு, 1808 ல் கேரளாவில் திருவிதாங்கூரில் நடந்த கலகத்தையும், அதற்கு முன்பு 1806 ஆம் ஆண்டில் வேலூரில் நடந்த கலகத்தையும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

ஏனிந்த பாரபட்சம்? அதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கட்டபொம்மன் என்று எத்தனை பேர் போராடி உயிர் நீத்திருக்கிறார்கள்? இவை பற்றிய குறிப்புகளை ஆங்கிலேயர் எழுதி வைத்த குறிப்புகளில் கூடப் பார்க்கலாமே!

ஸ்டாலின் குணசேகரன் தொகுத்து வெளியிட்ட “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்கிற இரு தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ம.பொ.சி.யும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பற்றி விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

பிரதமர் மோடியே தன்னுடைய பேச்சிலும், ட்விட்டர் பதிவுகளிலும் தமிழகத்தில் பங்களித்தவர்களைப் பற்றிப் பல முறை குறிப்பிட்டிருக்கிறார்.

வரலாறு என்பது முன்பு ஆங்கிலேயர்களுக்குச் சாதகமானதாக எழுதப்பட்டிருக்கலாம். நெல்லைப் பகுதியில் கட்டபொம்மனுடன் நடந்த போரில் மறைந்த ஆங்கிலேயப் படை வீரர்களுக்கான கல்லறைகளில் இன்றும் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ் என்கிற ஆங்கிலேய அதிகாரியின் கல்லறை இப்போதும் பாளையங்கோட்டையில் இருக்கிறது. கட்டபொம்மனும், மருத நாயகமும், மருது சகோதரர்கள் மறைந்த நினைவிடங்கள் இப்போதும் இருக்கின்றன.

அன்று ஆங்கிலேயர் செய்த வரலாற்றுத் தவறை இப்போது யாரும் பண்ணிவிடக்கூடாது. தேசிய உணர்வில் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள். நேதாஜி படையில் சேர்ந்தவர்களில் தமிழர்கள் எவ்வளவு பேர் என்பதற்கான குறிப்புகள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

மொழி சார்ந்தும், இனம் சார்ந்தும் தமிழர்களின் தொன்மத்தைச் சொல்ல கீழடி முதல் ஆதிச்சநல்லூர், கொற்கை வரை எத்தனையோ இடங்கள் சான்றாக இருக்கின்றன. அவற்றை ஒப்புக் கொள்வதிலும் வடக்கே இருப்பவர்களுக்கு ஒருவிதத் தயக்கம் நீடிக்கிறது.

நிதி ஒதுக்கீட்டில், தமிழ் மொழியை அங்கீகரிப்பதில் நீடிக்கிற புறக்கணிப்பு மனநிலை இதிலும் தொடர்வது நல்லதல்ல.

ஒன்றிய அரசுக்குத் தமிழின் தொன்மத்திலிருந்து ஒரு வரியை நினைவூட்ட வேண்டும்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

*

மணா-வின் “தமிழகத் தடங்கள்” (அந்திமழை பதிப்பகம் வெளியீடு) நூலில் இருந்து சில பகுதிகள் உங்கள் கவனத்திற்கு. நாளை முதல்…

*

You might also like