திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம் அதிகம் உள்ளது.
புதுவிதமான இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு தொண்டையில் வலி, ஜலதோஷம் மற்றும் அதிகப்படியான மூட்டு வலி ஏற்படுகிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது.
காய்ச்சல் தணிந்தாலும், 3 நாட்களுக்கு குறையாமல் மூட்டு வலியும், உடல் அசதியும் இருக்கிறது. சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது.
தென்மாவட்டங்களில் பலரும் இக்காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாரசிட்டமால் மாத்திரை மற்றும் சளி மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிக்குன் குனியா காய்ச்சலின் போது உடல் வலியை குணப்படுத்த பயன்பட்ட நிலவேம்பு குடிநீரையும், மக்கள் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில் காய்ச்சலும் பரவி வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
இக்காய்ச்சல் குறித்து பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் சுபாஷ் சந்திரன் கூறும்போது,
‘‘வழக்கமாக மார்கழி மாதம் பனிக் காலம் என்பதால் உடலில் கபம் விருத்தியாகும். இதனால் சளி, ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகள் அதிகளவில் ஏற்படும்.
அந்த வகையில் தற்போது காய்ச்சல், சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு பாதிப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு பெருமளவு காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் ஜே.ஜோசப்தாஸ் கூறியதாவது;
லேசான காய்ச்சல், உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டைவலி, மூக்கில் நீர் வழிதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பலரும் சிகிச்சைக்கு வருகிறார்கள். சிலருக்கு நுகரும் சக்தி குறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் சரியானாலும் உடல்வலி உள்ளிட்ட பிரச்சினை நீடிக்கிறது.
கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து மீண்டு வந்தபின்னர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதியுற்றனர். தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் பாதிப்பு குறைந்திருக்கிறது. தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், அரசு வழிகாட்டுதல்களை கடைபிடித்தால் பாதிப்பிலிருந்து தப்பலாம் எனக் கூறியுள்ளார்.
எனவே, தேவையான முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது நமது கடமை.
நன்றி: முகநூல் பதிவு