தஞ்சை மண்ணின் வட்டார வழக்கு மணக்க பெருங்கதைகளை எழுதியவர் சோலை சுந்தரபெருமாள்.
இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், தன் வாழ்வின் கடைசி வரையில் கீழத்தஞ்சை வாழ்வின் மகத்துவங்களையும் துயரங்களையும் எழுதியவர்.
மறைந்த அந்த எளிமையான எழுத்தாளர் பற்றிய நினைவுகளை எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யா, பேஸ்புக் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு…
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக கீழத்தஞ்சை மற்றும் தஞ்சை வட்டார மக்களின் வாழ்வியலை யதார்த்த மொழியில் எந்த பூடகமும் இன்றி இசங்களின் தாக்கத்தை முற்றிலும் எதிர்த்து எழுதி வந்தவர் சோலை.
எனது தொடக்கக் காலம் இவரின் தோழமையோடும் அணுக்கத்தோடும் கழிந்தன. மணிக்கணக்கில் அவருடன் நான் பேசியிருக்கிறேன்.
எனது பார்வையும் திசையும் வேறு என்றாலும், அவரின் இலக்கு கொள்கைமீது நான் விமர்சனம் வைக்கத் தவறியதில்லை. அதனை இன்முகத்துடன் எதிர்கொண்டு இருக்கிறார்.
அவரது படைப்புகள் பெரும்பாலானவை எனது முதல் வாசிப்புக்குப் பிறகுதான் அநேகம் வெளி வந்திருக்கின்றன.
தாண்டவபுரம், பால்கட்டும் முதலில் நான் வாசிக்கவில்லை. பிழைப்பைப் தேடி சென்னையில் இருந்த காரணத்தால் முடியவில்லை.
முதல் நாவலான நஞ்சை மனிதர்கள் தொடங்கி 8 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுதிகள், 4 கட்டுரைத் தொகுதிகள் எனத் தொடர்ச்சியாக இயங்கியவர்.
இடதுசாரியாக தன்னை அறிவித்துக் கொண்டவர். தனது படைப்புகளில் பொருள்முதவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே தனது கதைக்களத்தைப் படைத்தார்.
வர்க்க சிந்தனைகள் மீது அதிக ஈடுபாடுகொண்டவர். கீழ்வெண்மணியை கதைக்களமாகக் கொண்டு அவர் எழுதிய செந்நெல் நாவல் பல அதிர்வுகளை உண்டாக்கியது. கள ஆய்வுகள் செய்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோடனைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்று நம்பியவர்.
இவரின் படைப்புகள் ஏன் பெருவாரியான வாசகரையும், இலக்கிய உலகில் போதிய கவனத்தையும் பெறவில்லை என்ற கேள்வி அவரின் நெருக்கமான சில நண்பர்களையும்போல் எனக்கும் எழுவதுண்டு.
அது குறித்து சிலரிடம் பேசியபோது. அவர்கள் சொன்ன பதில், அவரின் நேரடியான கதை சொல்லும் முறை.
தஞ்சை மக்களின் வட்டார காலாவதியான வட்டார வழக்கு, மற்றும் அழகியல் கூறுகளின் பஞ்சம், இதனால் அவரது படைப்புகள் தொடர்ந்து வாசிக்க அலுப்பை ஏற்படுத்துகின்றன எனச் சொல்கிறார்கள்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவரது உழைப்பை மறுக்கமுடியாது.
தமிழின் முக்கியமான 100 நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் அவருக்கும் இடமுண்டு.
கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பால் இறந்தார். முதல் ஆண்டு நினைவு நாள் (12.01.2022) நிகழ்வு திருவாரூரில் நடைபெற்றது.
பணி காரணமாக என்னால் கலந்துகொள்ள இயவில்லை.
சாகித்ய அகடாமி விருதுக்கு அவரது அபார உழைப்பும், படைப்பும் தகுதியானவை என்று மட்டும் என்னால் உரக்கச் சொல்லமுடியும்.
பா.மகிழ்மதி