– வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு
தமிழகத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் – அமரகுந்தி, திருநெல்வேலி – மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைகள் உள்ளன.
இப்பகுதிகளுக்கெல்லாம் மாடுகள் வாங்க, கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநில வியாபாரிகள் வருவது வழக்கம்.
ஆனால், தற்போது கொரோனா மூன்றாவது அலை துவங்கி உள்ளதால், மாடு வளர்ப்பவர்கள், வியாபாரிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவலும் வியாபாரிகள் மத்தியில் பரவி வருகிறது.
இதனால், வியாபாரிகள், மாடு வளர்ப்பவர்கள் தங்களுக்குள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் குரூப்புகளை உருவாக்கி, மாடுகள் விற்பனையை அதன் வாயிலாக மேற்கொள்ள துவங்கி விட்டனர்.
மாடுகளை விற்பனை செய்பவர்கள், அதன் படம், கிடாரி, பால் மாடு, உழவு மாடு என வகைப்படுத்தி, விலை விபரம், தொடர்பு எண், முகவரி போன்றவற்றைப் பதிவிடுகின்றனர்.
அதைத் தெரிந்து கொள்ளும் வியாபாரிகள், மாடு வளர்ப்போரின் வீடு, தோட்டங்களுக்குச் சென்று மாடுகளை பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர்.
மாடு வளர்ப்பவர்கள் அளிக்கும் படம், குறிப்பிடும் விலையை எல்லாம், வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளுக்கு உள்ளூர் வியாபாரிகள் அனுப்பி விலை பேசி விற்பனை செய்கின்றனர். 20 முதல் 30 மாடுகள் வாங்கியவுடன் உள்ளூர் வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை ஏற்றி அனுப்புகின்றனர். மாடுகளுக்கான பணம் விற்போரின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் கொண்டலாம்பட்டி மாட்டு வியாபாரி கணேசன்.
“முந்தைய இரண்டு கொரோனா ஊரடங்கின் போது, மாடுகளின் விற்பனை பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள், இடைத்தரகர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் வாயிலாக மாடுகள், ஆடுகள் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு வளர்ப்போர், தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அந்தக் குழுக்களில், வியாபாரிகளும் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் தலைதூக்கத் துவங்கி உள்ளது” என்கிறார் மாட்டு வியாபாரி கணேசன்.
தொழில்நுட்ப வளர்ச்சியையும், காலச் சூழலையும் நமக்கு சாதகமாக்கிக் கொண்டால் அனைவருக்குமே நல்லது தான்.