சீரியசாகவும் கதை சொல்லாமல் சினிமாத்தனமாகவும் இல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி வரும் படைப்புகள் எக்காலத்திலும் உண்டு.
அந்த வகை சினிமாக்கள் நகைச்சுவை தோரணங்களாக அமைந்தால் கூடுதல் கலகலப்புக்கு உத்தரவாதமாகும். வழக்கமாக, நாயகனின் நண்பனாகத் தமிழ் திரைப்படங்களில் வலம் வந்த சதீஷ் நாயகனாக மாறியிருக்கும் ‘நாய் சேகர்’ படமும் அதில் ஒன்றாகியுள்ளது.
இயக்குனர்கள் கோபு, ராம.நாராயணன் மற்றும் பாண்டியராஜன் நாயகனாக நடித்த முக்கால் சொச்சம் படங்களில் நகைச்சுவை பிரதானமாகவும் பட்ஜெட் மிகக்குறுகியதாகவும் அமைந்திருக்கும்.
சீரியல்கள், குறும்படங்கள், யூடியூப் சீரிஸ்கள் என்று பலவும் அவ்வகைப்பாட்டை பிரதியெடுத்துவிட்ட சூழலில், ‘மினிமம் கியாரண்டி’ காமெடி படத்தைத் திரைக்கு கொண்டுவருவது ’ரிஸ்க்’ என்று தெரிந்தும் ’ரஸ்க்’ சாப்பிடுவது போல அப்பிரச்சனையைக் கையாண்டிருக்கிறது ‘நாய் சேகர்’ குழு.
நாயும் சேகரும்!
நாய் என்றாலே சேகருக்கு (சதீஷ்) சிறுவயது முதலே அருவெருப்பு. அப்பாவை ஒரு அஃறிணை போலவும், தம்பியை விரோதி போலவும் எண்ணும் இவருக்கு இரண்டு பிரச்சனைகள்.
முதலாவது, ஐடி அலுவலகத்தில் பணியாற்றும் சேகருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கவில்லை. இரண்டாவது, அவர் தீவிரமாகக் காதலிக்கும் பூஜாவிடம் (பவித்ர லட்சுமி) காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
எந்த தீர்வும் இல்லாமல் நகரும் சேகரின் வாழ்க்கையில் திடீரென்று அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராஜராஜன் (ஜார்ஜ்) வளர்த்துவரும் நாய் படையப்பா நுழைகிறது.
ஆராய்ச்சியாளரான அவர் நாயின் டிஎன்ஏயை வேறொரு உயிருக்கு மாற்றிப் பரிசோதிக்கும் முயற்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில் படையப்பா சேகரைக் கடிக்க, இரண்டு டிஎன்ஏக்களும் மாறிப்போகிறது. சேகருக்கு நாயின் குணங்கள் வர, படையப்பா மனிதனைப்போலச் சிந்திக்கத் தொடங்குகிறது.
ராஜராஜன் உரிய மருந்தைக் கண்டுபிடித்தால் மட்டுமே இயல்பு திரும்பும் என்றானபிறகு, சேகர் ஏற்கனவே எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை அவரது நாய்க்கடியே (வழக்கம்போல) தீர்க்கிறது என்பது மீதக்கதை.
ஆங்காங்கே நகைச்சுவை!
சதீஷ் நாயகனாக நடிக்கும் முதல் படம் என்ற எதிர்பார்ப்புக்கேற்ப, அவர் நடிப்பதற்கான இடம் திரைக்கதையில் நிறையவே இருக்கிறது. அதோடு, நாயக அந்தஸ்துக்கேற்பத் தன் உடல்வாகிலும் கவனம் செலுத்தியிருப்பது நல்ல விஷயம்.
நாயகியாக வரும் பவித்ர லட்சுமி எந்தெந்த கோணங்களில் அழகாக இருப்பார் என்று பார்த்துப் பார்த்து படம்பிடித்திருப்பது நன்றாகத் தெரிகிறது.
பாடல்கள் அதிகமில்லை என்பதால் அவரை மீண்டும் மீண்டும் டிவியில் பார்க்கும் வாய்ப்பும் குறைவு.
சதீஷின் அலுவலகத் தோழர்களாக வருபவர்கள் மட்டுமே அதிக நேரம் திரையில் இடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆராய்ச்சியாளர் ராஜராஜனாக வரும் ஜார்ஜ் திரையில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறார்.
சதீஷும் ஜார்ஜும் வரும் காட்சிகள் மட்டுமே திரைக்கதையின் அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன.
மனோபாலா, ஞான சம்பந்தம், நித்யா, லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், இளவரசு, வினோதினி, சுவாமிநாதன், மாறன், பாலா என்று பலரும் திரையில் வந்து போகின்றனர்.
இசையமைப்பாளர் கணேஷை காமெடி வில்லனாக காட்டியிருப்பது ‘ஓகே’ என்றளவில் உள்ளது. நாயின் வாயசைவுக்கு ‘மிர்ச்சி’ சிவா குரல் கொடுத்திருப்பது அப்பாத்திரத்தின் தன்மையை அப்படியே நமக்குள் கடத்துகிறது.
இயக்குனரின் கற்பனைக்கு ’ஹேண்டி’ ஷாட்கள் துணையுடன் வடிவம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.
படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் கைவரிசையால் காட்சிகள் சீராகச் சென்றாலும், சில இடங்கள் துண்டாகத் தனித்து நிற்கின்றன. உதாரணமாக, நாயகியின் தோழி காணாமல்போனது குறித்த கவலைகள் திரைக்கதையில் அப்படியே விடப்பட்டிருக்கின்றன.
அனிருத் மற்றும் அஜீஸின் பாடல்களும் பின்னணி இசையும் ஒரு காமெடி படம் பார்க்கிறோம் என்ற உணர்வை அதிகப்படுத்துகின்றன.
ஆல் பாஸ்..!
நாயகனாக நடிக்கும் முதல் படம் என்ற தேர்வில் ‘ஆல் பாஸ்’ என்றதொரு ஆறுதலைப் பெற்றிருக்கிறார் சதீஷ். ஆனாலும், அவசர கதியில் படம் உருவாக்கப்பட்டது போன்ற தோற்றம், 90களைச் சேர்ந்த படமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
கூடுதலாக வசனங்களைச் சேர்த்தாலோ, காட்சிகளை நீட்டித்தாலோ இழுவையாகத் தென்படும் அபாயத்தைக் கூடிய மட்டும் தவிர்க்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்.
’நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ என்ற தாரக மந்திரத்தை துணையாகக் கொண்டு ஆரம்பம் முதல் இறுதி வரை ஆங்காங்கே நகைச்சுவையை வாரி இறைத்திருக்கிறார்.
நாய் சண்டையிடும் காட்சிகளில் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பது, 80 மற்றும் 90களில் நாயகனோடு சேர்ந்து நகைச்சுவை நடிகர்களும் நடிகைகளும் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளை நினைவுபடுத்துகிறது.
கணேஷ் பாடும் பழைய பாடல்கள், நாய் வரும் காட்சிகளின் பின்னணியில் ஹீரோக்களுக்கான பிஜிஎம் என்பதோடு ஏற்கனவே வெற்றி பெற்ற பேட்ட, துப்பாக்கி, உள்ளிட்ட படங்களை பிரதியெடுத்த காட்சிகளைக் கொண்டு ‘ஸ்பூப்’ வகை திரைப்படமாகவும் இதனை மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குனர்.
சில இடங்கள் பிரபல நாயகர்களைப் பகிரங்கமாகக் கிண்டலடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்குப் பதிலாக சொறிவது, கவ்வுவது, சிறுநீர் கழிப்பது, நக்கிச் சாப்பிடுவது, உறுமுவது என்பதைத் தாண்டி நாயின் உலகத்தில் வேறென்னவெல்லாம் இருக்கும் என்று அறிய முற்பட்டிருந்தால், சதீஷ் இடம்பெறும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம்.
முழுக்க நகைச்சுவைக்கு இடமளிக்கப்பட்டாலும், மகனின் பிரச்சனை அறிந்து ஆறுதல் சொல்லும் தந்தையாக சம்பந்தம் வரும் காட்சியும், ‘இரண்டு வாரமா தலை காட்ட முடியலைன்னு சொல்றியே 21 வருஷமா இந்த வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கறேனே’ என்று ஜார்ஜ் சொல்வதும் நெஞ்சை நெகிழ வைக்கும் இடங்கள். அந்த இடத்தில் நமக்கு சிரிப்பு வரவில்லை என்பதுதான் சிறப்பு.
வடிவேலுவின் ‘நாய் சேகர்’ காமெடிக்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், நாயும் சேகர் என்ற பாத்திரமும் படத்தில் இருக்கின்றன என்ற வகையில் அத்தலைப்பு பொருத்தமாகவும் ஆகியிருக்கிறது.
வடிவேலு தரப்பிடம் தலைப்பை விடாப்பிடியாக வாங்கியதற்கு ஏற்ப வயிறு குலுங்கச் சிரித்திருக்கிறோமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால், எப்போதாவது நம்மை ‘ரிலாக்ஸ்’ செய்ய ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம் என்று தேடலைத் தொடங்கினால் அதில் ‘நாய் சேகர்’ருக்கும் ஒரு இடமுண்டு!
– உதய் பாடகலிங்கம்