நூல் வாசிப்பு:
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த பால்ராஜ் கென்னடி, அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை படித்தவர்.
கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும், பி.சி. ஸ்ரீ ராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும் இருந்த அனுபவம் பெற்றவர். பின்னர் தூர்தர்ஷனில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவரின் சிறுகதைத் தொகுப்பு தான் இந்த ‘உணர்வுகள் சில சித்திரங்களாய்’.
“அனுபவத்தில் சந்தித்த ஆழமான நெருடல்களும், நெகிழ்வுகளும் கதைகளில் சிறப்பாக பிரதிபலித்துள்ளன.
எல்லோரிடமும் இனிய முகத்துடன் பழகும் தனது தந்தை, தன்னிடம் மட்டும் சிடுசிடுப்பும், கண்டிப்பும் காட்டுவது ஏன் என்று குழம்பி வருந்துகிறான்.
ஒரு தனயன், தன் மகனை சான்றோர் எனக் காட்டவேண்டிய கட்டாயமே தந்தையின் அந்த கண்டிப்புக்கு காரணம் என்பதை மறைமுகமாக நமக்குப் புரியவைத்தது புதுமை” என்று நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் இயக்குநர் கே. பாக்யராஜ்.
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்.
பவா. செல்லதுரை எழுதியுள்ள சுவையான முன்னுரை, நூலைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.
“நான் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு இடம்பெயர்ந்தபோது கென்னடி தொகுத்த ‘வீடு’ தொகுப்பு எப்போதும் என் ஜோல்னா பையிலேயே இருக்கும்.
ஒரு பிரியமானவனின் தொடுதலைப்போல அது எனக்கு சொல்ல முடியாத ஸ்பரிச சுகங்களைத் தந்தது. அத்தனை அழகான கட்டமைப்பில் அதுவரை ஒரு தமிழ் புத்தகத்தை நாங்கள் யாருமே பார்த்ததில்லை. அப்புத்தகத்தின் தன்னகங்காரம் எப்போழுதும் என்னால் ரசிக்கத்தக்கது.”
சுந்தர ராமசாமியில் ஆரம்பித்து கி.ராஜநாராயணன், அப்துல்ரகுமான், கல்யாண்ஜி, கலாப்ரியா என தமிழில் அப்போது எழுதிக்கொண்டிருந்த அத்தனை படைப்பாளர்களும் அந்த வீட்டில் அடைந்திருந்தார்கள்.
வாசிப்பின் குதூகலமானக் காலமது. நினைத்தபோது வண்ணதாசனையோ, பக்கத்தில் இருத்திக் கொள்ள முடியும். அதை சாத்தியமாக்கிய கென்னடிதான் எங்களையெல்லாம் திருவிழாவிலேயே விட்டுவிட்டு தொலைந்துபோயிருந்தார்.
பால்ராஜ் அடிப்படையில் ஒரு ஓவியன் எனச் சொல்லலாமா? இல்லை. அவர் ஒரு புகைப்படக் கலைஞன். இல்லையில்லை. அவர் பல திரைப்பட உருவாக்குதலை சாத்தியமாக்கியவர்.
நான் எளிதில் வரைந்துவிடமுடியாத சித்திரமாக கலைந்து கலைந்து பால்ராஜ் என்ற அந்த உருவம் நழுவுகையில், நான் உங்களைப் போல, ஒரு எளிய எழுத்துக்காரன்தான் என இத்தொகுப்பின் மூலம் தன் கதைகளுடன் நம்முன் வருகிறார்.
நூலாசிரியர் பால்ராஜ் கென்னடி, “நான் கடந்து வந்த பாதையில் என்னை பாதித்த மனிதர்களையும், நிகழ்வுகளையுமே இங்கே கதைகளாக எழுதியுள்ளேன்” என்று சொல்லியுள்ளார்.
நூல் – உணர்வுகள் சில சித்திரங்களாய்:
ஆசிரியர் – பால்ராஜ் கென்னடி
வெளியீடு – தமிழ்வெளி,
1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர்,
மாளயம்பாக்கம், சென்னை – 122
விலை ரூ. 200
பேச: 90940 05600
-பா. மகிழ்மதி