எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

*

பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன.

வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஜலதோஷத்தால் குரல் கமறப் பேசுகிறார்கள். தொண்டையில் ஒருவித அழற்சி பலருக்கு இருக்கிறது.

தும்மலோ, இருமலோ தொற்று அதிகரிக்கக் காரணங்கள் பொதுவெளியில் நிறைந்திருக்கின்றன.

கொரோனா இரண்டு அலைகளைச் சந்தித்துவிட்ட காரணத்தால், பலரும் அரசின் பரிசோதனை மையங்களுக்குச் சென்று கொரோனா இருக்கிறதா என்று சொதித்துக் கொள்ளத் தயங்குகிறார்கள்.

பாசிட்டிவ் என்று வந்துவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வீட்டிற்கு முன்னால் தனிமைப் படுத்தப்பட்ட நோட்டீஸ் ஒட்ட வேண்டியதிருக்கும். இதனால் இரு வார காலம் வீட்டைவிட்டு யாரும் வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

இதனால் அரசு பரிசோதனை மையங்களைத் தவிர்த்துவிட்டுக் கணிசமானவர்கள் தனியார்கள் விளம்பரப்படுத்தும் பரிசோதனை கிட்களைப் பயன்படுத்துகிறார்கள். சில மருந்தகங்களிலும் இந்தப் பரிசோதனைகள் நடக்கின்றன. ஆன்லைனிலும் நடக்கின்றன.

ஆனால் இந்தப் பரிசோதனை முடிவுகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டவை என்பதை யார் உறுதிப்படுத்துவார்கள்?

சுகாதாரத்துறையின் கவனத்திற்கு இந்த விளம்பரங்களும், பரிசோதனைகளும் வரவில்லையா? அரசின் பரிசோதனை மையங்களுக்கு வருவதை ஏன் பலர் தவிர்க்கிறார்கள் என்பதைச் சுகாதாரத் துறை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறதா?

முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்பதைச் சுறுசுறுப்பாகச் செயல்படுத்தி பெரு நகரங்களில் வரிசைகட்டி வசூல் பண்ணுவதில் காவலர்களுக்கு இருக்கிற அக்கறை, முறைப்படுத்தப்படாத பரிசோதனை மையங்கள் குறித்து ஏன் இல்லை?

அதிலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஏன்.. மருத்துவக் கல்லூரிகளிலும் கூட, கொரோனாப் பாதிப்பை நாம் உணர்ந்து கொண்டிருக்கும் போது, உலக வங்கியில் பணியாற்றுகிறவர்களோ பள்ளிகளில் கொரோனா பரவும் என்ற அச்சத்தால், பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய ஊழியர்கள் துவங்கி மறுபடியும் பீதியில் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்லத் தயாராகிவிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் வரை, வியாபாபரிகள், மாணவர்கள் என்று பலருக்கும் இருக்கிற கேள்வி,

“எப்போது தான் இந்தப் பீதியான மனநிலையில் இருந்து விடுபட்டு, இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும்?”

இந்தக் கேள்விகளுக்கு எதிர்க்காலம் பற்றிய தெளிவோடு யார் பதில் அளிப்பார்கள்?

-யூகி

**

You might also like