கொம்பு வச்ச சிங்கம்டா: சமத்துவப் பிரச்சாரம்!

சாதியில்லா சமூகம் எப்போது உருவாகுமென்ற கேள்வியுடன், சமத்துவத்தை வலியுறுத்திச் சில திரைப்படங்கள் ஆக்கப்படுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’.

சிங்கத்துக்கு கொம்பு முளைத்தால் என்ற சிந்தனையே ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான். அதையே தலைப்பாகக் கொண்டிருப்பது, ‘சுந்தர பாண்டியன்’, ‘சத்ரியன்’ போன்ற இயக்குனரின் முந்தைய படங்களைப் போலல்ல இது என்பதைப் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே புரிய வைக்கிறது.

அந்த இடத்தைத் தாண்டாமலேயே போயிருப்பதுதான் மனதைச் சங்கடப்படுத்துகிறது.

சாதி வேண்டாமெனும் கதை!

தன்னுடைய பேச்சால் சுற்றுவட்டார மக்களின் வாக்குகளை மாற்றும் வல்லமை படைத்த ஒரு பெரியவர் (இயக்குனர் மகேந்திரன்). அவரது மகன் (சசிகுமார்) தனது உறவினர்கள் அனைவரும் ஆதிக்க மனப்பான்மையோடு இருப்பதை எண்ணி வருந்துகிறார்.

தனது நண்பர்களோடு இணைந்து சாதியில்லா சமூகத்தை உருவாக்க உழைக்கிறார். ஊருக்கு நல்லது செய்வதோடு பள்ளிப் பருவத்து காதலியின் (மடோனா செபாஸ்டியன்) பின்னாலும் சுற்றுகிறார்.

மெல்ல இருவருக்கும் காதல் முளைக்கிறது. நாயகியின் தந்தைக்கும் நாயகனின் தந்தைக்கும் ஏற்கனவே முட்டல் மோதல் என்பதால் சண்டை மூளும் சூழல் உருவாகிறது.

மாறாக, இருவரும் சந்திக்கும்போது உள்ளாட்சித் தலைவர் பதவி கிடைக்கத் தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று ஊர்ப் பெரியவரிடம் கேட்கிறார் நாயகியின் தந்தை.

இதனால், நாயகன் மற்றும் அவரது நண்பர்களின் துணையோடு அதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லாமல் வெற்றி பெற்றவரின் (இந்தர்குமார்) மனம் கோணுகிறது.

நாயகியின் தந்தை தேர்தலில் வெற்றி பெற்றதும் நடைபெறும் கலவரத்தில் நாயகனின் நண்பர் ஒருவர் கொல்லப்படுகிறார். அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைக் கொன்ற பழிக்கு ஆளானவர் நாயகனின் இன்னொரு நண்பர்.

இதனால், இரு தரப்பு அரசியல் மோதல் சாதி சார்ந்ததாக மாறுகிறது. அதன் பிறகு அந்த ஊரில் இயல்பு திரும்பியதா இல்லையா என்பதைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

‘சாதி வேண்டாம்’ என்று சொல்லும் இக்கதையில் பல வண்ணக் கொடிகள், பெயர்கள் மற்றும் சிலவற்றின் வழியே கதாபாத்திரங்களின், வாழ்விட்த்தின் பின்னணியை இயக்குநர் காட்டியிருப்பது குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.

மற்றவர்களைப் பொறுத்தவரை, இது இரண்டுக்கு மேற்பட்ட சாதியினர் இடையேயான மோதல். அவ்வளவுதான்!

அரிவாளும் சசிகுமாரும்!

’ஏய் இந்தாரு…’ என்ற வசனத்தை இந்த படத்திலாவது பேசாமல் இருப்பாரா என்று சொல்லுமளவுக்கு மதுரை வட்டாரப் படங்களாகத் தேடித் தேடி நடித்தார் சசிகுமார்.

அந்த சூட்டோடு தயாரான ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ வெகுகாலத்திற்குப் பின் வெளிவந்திருக்கிறது.

இப்படத்தில் சசிக்கு தந்தையாக மறைந்த இயக்குனர் மகேந்திரன் நடித்திருப்பதே அதனைக் காட்டிக் கொடுக்கிறது.

வழக்கம்போல கொஞ்சம் அப்பாவித்தனமும் ஆவேசமும் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார்.

அரிவாளும் கையுமாகத் திரியாவிட்டாலும், இத்திரைக்கதையிலும் வன்முறைக்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவரது நண்பர்களாக வருபவர்களின் முகங்கள் திரையில் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பை வெளிக்காட்டப் போதுமான காட்சிகள் தரப்படவில்லை.

இதனால், அவ்வப்போது நகைச்சுவையை ஒன்லைனர்களாக தெளிக்கும் சூரி மட்டுமே நம் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக வரும் மடோனா செபாஸ்டியனுக்குப் பெரிதாக வேலையில்லை. போலவே ஹரீஷ் பேரடி, இந்தர் குமார், சங்கிலி முருகன், சென்ட்ராயன், அருள்தாஸ், தீபா ராமானுஜம் மற்றும் நாயகனின் உறவினர்களாக, ஊர்க்காரர்களாக நடித்த அனைவருக்குமே பெரிதாக முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சசியின் அத்தை மகளாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்காவுக்கும் அதே கதிதான்.

ஒரு காட்சியில் மகேந்திரனை பார்த்து கொளப்புளி லீலா ‘எனக்கு வயசு 72’ எனும்போது, கொஞ்சம் மேக்கப்பில் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

திபு நிணன் தாமஸ் இசையில் அமைந்த பாடல்கள், இன்னும் சில நாட்கள் கழித்து தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் தருகிறது.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஒரு கலர்புல்லான கமர்ஷியல் திரைப்படத்தைக் காணும் அனுபவத்தை வழங்குகிறது. திரைக்கதையில் இருக்கும் குழப்படிகளுக்கேற்ப மொத்தமாகக் கதையைக் கோர்ப்பதில் தடுமாறியிருக்கிறது டான் பாஸ்கோவின் படத்தொகுப்பு.

ஏன் தடுமாற்றம்!?

‘நாங்கள்லாம் மதுரக்காரய்ங்க’, ’என்னப்பூ லந்தா’, ‘எங்க வந்து என்ன பேசுற’, ‘அவுகளும் பெரிய தலக்கட்டுதான்’ என்பது போன்ற வசனங்களை எதிர்பார்த்தால், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தர்றோம் என்பதாக அமைந்திருக்கின்றன வசனங்கள்.

ஆனால், கதைப்படி யார் சிங்கம், கொம்பு யாருக்கு முளைத்திருக்கிறது என்பதற்கேற்ற விளக்கம் ஏதும் சரியான முறையில் தரப்படவில்லை.

நட்பு, பகை, துரோகம், சொந்தம், காதல் என்று ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் திரைக்கதையை இதில் ‘ரீபூட்’ செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அது ஆணவக் கொலைக்கு ஆதரவான படமாக கவனிக்கப்பட்டதால், அதற்குப் பரிகாரம் தேடும் வகையில் இப்படியொரு கதையைக் கையிலெடுத்திருக்கிறார்.

ஆனாலும், முன்னதில் இருந்த செய்நேர்த்தி தவறிப்போய் வெறுமனே சமூகநீதிக்கான வாய்மொழிப் பிரச்சாரமாக மாறியதைத் தவிர்த்திருக்கலாம்.

மகேந்திரன் மறைவு திரைக்கதையில் சில காட்சிகள் விடுபட்டிருக்கும் சாத்தியத்தை உணர்த்துகிறது. இயக்குனர் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்.

கிளைமேக்ஸில் வரும் ட்விஸ்டை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. திரைக்கதையில் சசிகுமாரின் நண்பர்களாக வருபவர்களுக்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதுவே ‘சுந்தர பாண்டியன்’ படத்திற்கும் இதற்குமான வித்தியாசத்தை பெருமளவு அதிகப்படுத்தி, கதையின் அழுத்தத்தைச் சிதைக்கிறது.

திரையில் உலாவும் பாத்திரங்களையும் பார்வையாளர்களையும் சமமாகப் பாவிக்கச் செய்வதே திரைப்படங்களில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான வழி.

வெறுமனே பெரியாரின் படத்தையோ, அவர் உதிர்த்த சொற்களையோ காட்டுவது கண்டிப்பாகத் திரை நீதியாகாது.

என்னதான் உலோகக் கலவை சரியாக இருந்தாலும் செய்நேர்த்தி இல்லாவிட்டால் எந்த நகையும் பார்ப்பவரின் கண்களைக் கவராது.

அந்த வகையில், சிறிதளவும் குறை சொல்ல முடியாத மிகச்சிறப்பான கமர்ஷியல் சினிமா நேர்த்தியையே இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனிடம் எதிர்பார்க்கிறோம்..!

  • உதய் பாடகலிங்கம்
    17.01.2022  12 : 30 P.M
You might also like