– சைதை துரைசாமியின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்.
“உங்க வாழ்க்கையில் நீங்க எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க? இந்தக் கேள்வியை நான் சந்திக்கிற பெரும்பாலான இளைஞர்களிடம் கேட்பதுண்டு. அதற்கு பல்வேறு விதமான நல்ல விஷயங்களை எல்லாம் பதிலாகச் சொல்வார்கள்.
ஆனால், ஒருவர்கூட எங்க ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்னு சொன்னதே இல்லை. ஆரோக்கியம்தான் அடிப்படையானது என்பதை இங்கே பெருபாலானோர் உணரலையோ என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது” என இந்தச் சமூகம் ஆரோக்கியமாகப் பயணிக்க வேண்டும் என்பதில் தனக்கிருக்கும் ஆர்வத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் சென்னையில் முன்னாள் மேயரான சைதை துரைசாமி.
அரசியல்வாதி, பிசினஸ்மேன், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்டுள்ள சைதை துரைசாமி தீவிரமான உடல்நலப் பற்றாளரும்கூட, இயற்கை உணவு, யோகா பயிற்சி என தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலம் தன் உடலைப் பேணி பராமரித்துவரும் அவரை ‘ஹெல்த் இஸ் வெல்த்’ பகுதிக்காகச் சந்தித்ததும் உற்சாகமானார்.
“எதைப் பற்றி மக்களிடம் அதிகம் பேச வேண்டும் என நினைத்தேனோ – அதற்காகவே என்னை தேடிவந்து சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றவாறு தன் ஃபிட்னஸ் அனுபவங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.
“நான் கிராமத்துல் பொறத்து வளர்ந்தவன். 12 மைல் சைக்கிள்ல போய் படிச்சவன். சோளச் சோறும் மோரும்தான் என் மதியச் சாப்பாடு. எங்க வீட்ல கடை இருந்ததால், காலையில இட்லி சாப்பிடுவேன். ஆனா, எங்க அம்மா வற்புறுத்தி பழையது சாப்பிடச் சொல்வாங்க. வெங்காயம் அல்லது மிளகாயோடு கம்மஞ்ச் சோறு. கேழ்வரகு களி அல்லது எங்க ஊர்ல ‘புளிச்சத் தண்ணினு சொல்ற நீராகாரம்தான் காலை உணவு.
விளையாட்டுக்கென்று பெரும் நேரத்தைச் செலவிட்டு வளர்ந்தவன் நான். ஆனா, சென்னைக்கு வந்து பரபர வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சதும் எல்லாமே மாற ஆரம்பிச்சது. உடலுக்குப் பொருந்திய உணவு எது பொருந்தாத உணவு எதுன்னு பாகுபாடு பார்க்காம சாப்பிட ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல உடல் சோர்வு, ஏதோ ஓர் அசதி என்னை சுறுசுறுப்பா இயங்கவிடாம செஞ்சது. மெடிக்கல் டெஸ்ட் பண்ணா எதுவுமே இல்லைங்கிறாங்க
அந்த நிலையிலதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மரணம் நிகழ்ந்தது. எனக்கெல்லாம் கடுமையான அதிரச்சி எம்.ஜி.ஆர் நூறு வயசு வரைக்கும் இருப்பாருங்கிற அதிதீவிர நம்பிக்கையில் இருந்தவங்கள்ல நானும் ஒருத்தன். ஆனா, அது பொய்யாயிருச்சு. எம்.ஜி.ஆர் ஏன் இறந்தார்னு யோசிச்சு பார்த்தப்போ, எல்லாத்திலேயும் சரியா இருந்த எம்.ஜி-ஆர் உணவு விஷயத்துல குறிப்பா. உடலுக்குப் பொருத்திய உணவு, பொருந்தாத உணவு என்ற பாகுபாடு பார்த்து உண்றதுல சரியாகக் கவனம் செலுத்தலை. அதுதான் அவருடைய மரணத்துக்கான அடிப்படைக் காரணம்னு தெரிஞ்சது. அதன் பிறகுதான், நான் என்னுடைய ஹெல்த் பத்தி சிந்திக்க ஆரம்பிச்சேன், கந்தசாமி முதலியார் எழுதிய ‘உணவே மருந்து’ என்ற புத்தகத்தைப் படிச்சதுக்குப் பிறகுதான் உணவு விஷயத்துல எவ்வளவு தப்பு பண்றோய்ங்கிறது புரிஞ்சது.
அதன்பிறகு சமைத்த உணவுகளை அதிகம் எடுத்துக்கறதைத் தவிர்த்துட்டு பழங்கள், பழச்சாறு, பச்சைக் காய்கறிகள் உண்ண பழகினேன். முதல்நாள் மிகவும் சிரமமாக இருந்தது. அடுத்தநாள் இன்னும் சிரமமாக இருந்துச்சு. இப்படியே 13 நாள் தாண்டிட்டேன். அதுக்கு அப்புறம்தான் அதன் மகத்துவத்தை நான் உணர்ந்தேன். சமைத்த உணவையிட பழங்கள், பச்சைக் காய்கறிகளில் அதிக சத்துக்களை நாம் பெறலாம். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணாவு ஏற்படுத்த 1991-லிருந்து இயற்கை உணவு குறித்து நிறைய முகாம்களை நடத்த ஆரம்பிச்சேன். இதற்கிடையில் யோகா பயிற்சியை முறையாகப் பயின்றேன். நான் சென்னை மேயராக இருந்தப்ப, எனக்கு 60 வயது. என் 60 வயதில் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 19 மணி நேரம் உழைச்சேன்னா– அதுக்கு காரணம். இந்த உணவு முறையும் யோகா பயிற்சியும்தான்” என்று நெகிழ்ந்தவர், சற்று ஆசுவாசத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.
*2000-ம் ஆண்டில் சென்னையில் ‘இயற்கை உணவு மாநாடு’ நடத்தினோம். அதற்கு இந்தியா முழுக்க உள்ள இயற்கை ஆர்வலர்களெல்லாம் வந்திருந்தார்கள், அதன் பிறகு இயற்கை உணவு குறித்த மிகப் பெரிய எழுச்சியும் விழுப்புணர்வும் ஏற்பட்டுச்சு. அத்துடன் என்னுடைய தேடல் நிற்கவில்லை. சித்தா என்ன சொல்கிறது, ஆயுர்வேதம் என்ன சொல்கிறது. ஒவ்வொரு செடி, கொடி, மரமும் என்ன பயன் தருகிறது என்று நான் தேடிக் கொண்டே இருந்தேன் எவ்வளவு பெரிய பிரச்னைக்கும் ஒரு சின்ன விஷயம்தான் தீர்வா இருக்கும். ஆனா, நாமதான் பெருசா கற்பனை பண்ணிக்குவோம் என்ற உண்மை இந்தத் தேடலின் முடிவுல எனக்குத் தெரிஞ்சது.
ஆமா, நம்முடைய சித்தர்கள் சொல்லிச் சென்ற ‘நொறுங்கத் நின்றால் நூறு வயது’ என்ற கூற்றுக்குள்ளத்தான் தம் உடல் நலத்துக்கான எல்லா விஷயங்களும் அடங்கியிருக்கிறது என்பதை நான் கடைசியா கண்டுணர்ந்தேன்.
இந்தக் கூற்று அறிவியல் பூர்வமாகச் சொல்லப்பட்டது. நமக்கு 32 பற்கள் இருக்கிறதல்லாவா? நாம் ஒரு கவலம் உணவை வாயில் போட்டால் 32 முறைகள் மென்று திரவமாக்கி இரைப்பைக்கு அனுப்ப வேண்டும் என்பதைக் குறிக்குது அது -ஆனா, இங்கே எல்லோரும் அப்படியா நேரம் ஒதுக்கிச் சாப்பிடுகிறார்கள்! கோழி, இரை எடுக்கிற மாதிரி ‘கபக்’கென்று அப்படியே முழுங்கிடுறாங்க.
அதுதான் எல்லா பிரசனைக்கும் ஆரம்பம் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதில் எத்தளவுக்குத் தெளிவு வேண்டுமோ, அந்த அளவுக்கு நாம் அதைச் சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனம் வேண்டும். எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது செரிமானக் கோளாறுதான் உடல் பருமன் ஏன் மாரடைப்பு ஏன் இப்படி ஒவ்வொரு கேள்வியாகப் பட்டியலிட்டு அதற்கு பதில்தேடினால் அதன் ஆரம்பப்புள்ளி உடலில் உணவுக் கழிவு தேங்குவதாகத்தான் இருக்கும்.
செரிமானக்கோளாறை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் நன்றாகமென்று சாப்பிட வேண்டும். அதாவது, ஒரு கவலம் வாயில் போட்டால், 32 முறைகளுக்கு மேலாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் 108 வகையான நோய்கள் வராது. ஒரு சாதாரண விஷயத்தால் 108 விதமான நோய்கள் வராது என்று சொன்னால், நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது! அதேபோல, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடுவதெல்லாம். உடல் விதிகளுக்குப் புறம்பானது.
அதேபோல தண்ணீர் குடிக்கும் போதும் உட்கார்ந்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பிடும் போதும் தண்ணீர் பருககூடாது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிச்சதும் சாப்பிட்டாலோ, சாப்பிடும்போது தண்ணீர் குடிச்சாலோ செரிமாணக் கோளாறு ஏற்படும். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காம் இருக்க முடியவில்லை. விக்கல் எடுக்கிறது;
நெஞ்சை அடைக்கிறது எனில் நீங்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்று பொருள். நாம் மிஉணவை நன்றாக மென்று சாப்பிடும்போது அந்த உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கழிவுகளாக மாறாமல் சத்துக்களாக மாறிவிடும். இந்த விஷயத்தைக் கடைபிடித்தால் உங்கள் வாழ்வில் நோயே இருக்காது. இது முடியுமா முடியாதா? இதைத்தான் பலர் முடியாது என்கிறார்கள்..
சுவர் இருந்தால்தான சித்திரம் வரைய முடியும் உடல் சரியா இருந்தால்தான் நம்மால் எந்த காரியத்தையும் செய்யமுடியும். பணிச்சுமை என்று இந்த உடலை வருத்திக் கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. நீங்களெல்லாம் சாதிக்க வேண்டுமென விரும்பினால் மருத்துவமனைக்கும் மருந்துக் கடைக்கும் மாதம்தோறும் பில் கொடுக்காம்ஸ் இருக்க வேண்டுமென நினைத்தால், இந்த விதியைப் பின்பற்றுங்கள்.
இதுதான் ஆரோக்கியத்துக்கான ஒரே மருந்து ஆரோக்கியம்தான் அனைத்துக்கும் அடிப்படை ஆரோக்கியம் இல்லா கல்வி ஆரோக்கியம் இல்லா பதவி. ஆரோக்கியம் இல்லா செல்வம், ஆரோக்கியம் இல்லா அனைத்தும் வீண்.
உங்களுக்கு கோடிக்கணக்கில் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் இல்லை எனில், என்ன பயன். நாம் செய்கிற காரியங்களாலும் நாம் கடைப்பிடிக்கிற பண்புகளாலும்தான் ஆரோக்கியத்தைப் பெற முடியுமே தவிர, பணத்தையோ அதிகாரத்தையோ வைத்துக்கொண்டு பெற்றுவிட இயலாது” என்கிறார் நிறைவாக.
- நன்றி: நாணயம் விகடன்.