பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் 105வது பிறந்தநாள் செய்தி
“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”
– என்று நம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரையில் பாடியதோடு மட்டுமில்லாமல், இந்த பாடல் வரிகளுக்கு இலக்கணமாய் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டினார்.
“மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்” என்ற பெயரைக் கொண்ட நம் புரட்சித்தலைவர் அவர்கள், அனைவராலும் எம்.ஜி.ஆர். என்று அன்போடு அழைக்கப்பட்டார். 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் திரு.மருதூர் கோபாலன்- அம்மையார் சத்திய பாமா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், இரண்டரை வயதில் தந்தையை இழந்தபிறகு, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த வடவனூருக்குக் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்.
தனது மூன்று வயதில் தமிழகத்திற்கு வந்து கும்பகோணம் யானையடி பள்ளியில் படித்திருக்கிறார். ஏழு வயதில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கடும் உழைப்பும், விடா முயற்சியுமே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தன. 1936-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதி லீலாவதி’ படத்தில் துவங்கியது அவரது திரைப்பயணம். 1947-ல் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
எளிய மக்களின் பிரதிநிதியாக மக்கள் திலகம் நடித்த ‘மதுரை வீரன்’ படம் துவங்கி, ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, குடியிருந்த கோயில், ராமன் தேடிய சீதை மற்றும் 1958-ல் அவரே தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’, எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், இறுதியாக ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை அவர் 136 திரைப்படங்களில் மீனவராக, தொழிலாளியாக, விவசாயியாக காவல்காரனாக இன்னும் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து அவரை, தமிழக ரசிகப் பெருமக்கள், வெற்றி நாயகனாக ஆக்கினார்கள்.
1954-ல் துவக்கப்பட்ட அவருடைய ரசிகர் மன்றங்கள் தான் புரட்சித்தலைவரின் அரசியலுக்கு அடித்தளமாயின. காலம்சென்ற நடிகமணி நாராயணசாமி அவர்களால் கிடைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிமுகம் திராவிட உணர்வுள்ளவராக புரட்சித்தலைவரை மாற்றியது, தான் நடிக்கும் படங்களில் சமூக சிந்தனைகளை, ஏற்றுக் கொண்ட கொள்கைகளை, எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும், தொடர்ந்து முன்வைத்து, மக்களிடம் கொண்டு சென்றார். அன்றைய தினத்தில், தான் சார்ந்த கட்சி வெற்றிபெறக் கடுமையாக உழைத்தார். மேலவை உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றினார். 1967-ல் துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவைத் தொடர்ந்து, சூழ்ச்சி வலை பின்னப்பட்டு தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதை புரட்சித்தலைவரின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தனிக் கட்சியைத் துவக்க விரும்பினார்கள்.
அவ்வாறு தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பு உணர்வில் 1972-ல் தனியாக இயக்கத்தை உருவாக்கி, தான் பெரிதும் போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்தார். அவருடைய உருவத்தைக் கழகக் கொடியில் இடம் பெற வைத்தார். அவருடைய கொள்கையை ஏற்று “அண்ணாயிசம்” என்று அறிவித்தார். 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முதல், பல தொடர் வெற்றிகளை பெற்றார்.
கட்சித் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில், தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார். தமிழக முதல்வரானார். தொடர்ந்து 1980, 1984 என்று நம் புரட்சித்தலைவரையே முதல்வராக நீடிக்க வைத்தார்கள் தமிழக மக்கள். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சுமார் பதினோரு ஆண்டுகள் இந்த தமிழ் மண்ணில் நல்லாட்சியை நடத்திய மாபெரும் தலைவர் தான் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள்.
1984-ல் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது கடின உழைப்பாலும், சூறாவளியாக சுழன்று மேற்கொண்ட பிரச்சாரங்களாலும், மீண்டும் கழக ஆட்சி அமைந்தது.
புரட்சித்தலைவரும், ஆண்டிப்பட்டித் தொகுதியில் மகத்தான வெற்றி கண்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகம் பெற்ற வெற்றியை சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய நம் புரட்சித்தலைவருக்கு பரிசாக வழங்கினார்.
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய ஆட்சிக்காலத்தில் தன்னிறைவுத் திட்டம் கொண்டுவந்து பட்டி தொட்டி எங்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். ஏழை குடிசைகளுக்கு ஒரு விளக்கு மின் திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, ஒரே சமயத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளைக் கொண்டு வந்து ஏழை எளிய சாமானிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்தது.
“சிறு வயதில் ஒரு வேளைச் சோற்றுக்கும், ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும். அதனால் தான் சத்துணவோடு, சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்” – என்று எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகையை அதிகப்படுத்தி, ஐ.நா.சபை வரை பேசப்பட்டது.
இலவசச் சீருடைகள், காலணிகளை வழங்கினார். பொறியியல் கல்லூரிகள் பலவற்றைத் திறந்து தமிழக மாணவர்கள் பலரைப் பொறியியல் பட்டதாரிகள் ஆக்கினார். மகளிர் பல்கலைக்கழகத்தைத் திறந்து அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றார். சமநீதிக்கான பார்வையோடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். கிராமம் தோறும் கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தார். அண்டை மாநிலத்தோடு பேசி கிருஷ்ணா நதிநீரை சென்னைக்குக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டைத் தமிழகம் எங்கும் கொண்டாடினார். அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியை நவீனப்படுத்தினார். தமிழுக்கென்று தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைத்தார். உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்புடன் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தார். அரசாணைகளைத் தமிழில் வெளியிடவும், தமிழில் கையெழுத்திடவும் வைத்தார்.
“தமிழ்ப்பண்புக்கு நான் அடிமை” என்று உணர்த்துவதற்காக பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடினார். புரட்சித்தலைவருடைய ஆட்சிக்காலத்தில் தான் சுமார் ஒன்பது ஆண்டுகள் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மிகப் பெரிய பொருளாதார மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் அவர்கள், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு நம் புரட்சித்தலைவரை வெகுவாக பாராட்டினார்.
கருணை, கடமை, பொறுமை மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் என்று திரையில் பாடியபடி, அடித்தட்டு மக்கள் முதல், தமிழ் உணர்வாளர்கள் வரை அனைவரும் போற்றும்படி மக்கள் திலகத்தின் ஆட்சித் தமிழகத்தில் பொற்கால ஆட்சியாக திகழ்ந்தது.
அதனால்தான் இதய தெய்வம் என்று ஏழை எளிய மக்களின் மனதில் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை நிலைக்க வைத்தது. டாக்டர் பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் நம் புரட்சித்தலைவரைத் தேடி வந்து சிறப்பித்தாலும், தமிழக மக்களின் மனதில் அவர் என்றும் மக்கள் திலகம்’. தொண்டர்கள் பார்வையில் அவர் என்றும் ‘வாத்தியார்’.
வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு, என்று இல்லாமல் சிறந்த வாழ்வியல் நெறிகளை இறுதி வரை கடைப்பிடித்து அனைத்து தரப்பு மக்களின் அன்பையும், பாசத்தையும், நம்பிக்கையையும் ஒருசேரப் பெற்ற மாபெரும் தலைவர் தான் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
“ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்”
– என்று பாடியதோடு அல்லாமல், தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு வாரி வாரி கொடுத்து “வள்ளல்” என பெயர் பெற்றவர். தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவும் தெய்வீகக் குணம் படைத்த மகானாகவே வாழ்ந்து சென்றுள்ளார்.
விருந்தோம்பலில் நம் புரட்சித்தலைவருக்கு இணை யாருமில்லை என்பது உலக பிரசித்தம். அவருடைய ராமாவரம் தோட்டத்து இல்லம் வடலூர் வள்ளலாரின் “சத்திய தர்ம சாலை” போன்று எந்நேரமும் செயல்படும்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய உயிலில் கூட காதுகேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் நலனைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார் என்றால், அவர் மறைந்தும் வள்ளலாக இருந்து கொண்டிருக்கிறார்.
இதையே ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாத, வாய் பேச முடியாதோருக்கான பள்ளியைப் பார்வையிட்ட, முன்னாள் குடியரசு தலைவர் அய்யா அப்துல் கலாம் அவர்களும் சொல்லியிருக்கிறார் என்றால், மக்களுக்காக வாழ்ந்தவர்களை மக்கள் மறப்பதில்லை என்பதைத் தானே நினைவூட்டுகிறது.
புரட்சித்தலைவர் உருவாக்கி வளர்த்த பேரியக்கத்தை தலைமையேற்று, அதைத் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி, அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
தேசிய நலனில் அக்கறை கொண்டிருந்தாலும், தமிழக நலனை விட்டுக் கொடுக்காத உணர்வை வளர்த்தெடுத்த நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் இந்த இயக்கத்தை கொண்டு செல்லும்போது தான் நம் தலைவர்களின் கனவு நனவாகும்.
நம் இயக்கம் விருட்சமாக பரந்து இருப்பதற்கு முழு முதற் காரணமாக இருப்பது, வேர்களாகிய நம் தொண்டர்கள் தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதனால் தான் கழகத்தின் சட்டவிதிகளில் கூட, தொண்டர்கள் தான் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தார் நம் புரட்சித்தலைவர். அதுபோன்று, நம் அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் தலைமையால் தான், நம் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதியே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார் நம் புரட்சித்தலைவர்.
திரைப்படத்தில் புரட்சித்தலைவர் ஒரு வசனம் பேசுவார். “என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு ஆனால் என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமே இல்லை” என்று.
அந்த நெறிப்படி தான் புரட்சித்தலைவர் அவர்கள் தன் இறுதிநாள் வரை வாழ்ந்தார். அவரை நம்பிக் கெட்டவர்கள் எவருமே இல்லை. திரையுலகிலும் சரி, அரசியல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்ட காலங்களிலும் சரி, அவருக்கு துரோகம் செய்தவர்களைக் கூட மன்னித்து அரவணைத்து அழைத்துச் சென்றவர் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அப்படி புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் வளர்த்த இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயமாக நம் தொண்டர்கள் அனைவரும் கருதுகிறார்கள். இதே வேண்டுகோளைத்தான் நானும் தொடர்ந்து முன் வைத்து வருகிறேன். அனைவரும் இதை உணர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவரின் ஆட்சியை அமைக்க முடியும்.
மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் நம் புரட்சித்தலைவரின் 105-வது பிறந்தநாளில், ஏழை-எளியவர்கள், முதியவர்கள், மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள், கொரோனா தாக்கத்தால் தங்களது பெற்றோர்களை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவோம்.
அதே சமயத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, நம் புரட்சித்தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுமாறு உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி மறவாத நல்ல மனதோடு’ நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, இந்த நன்னாளில் அவருடைய பொற்கால ஆட்சியை மறுபடியும் தமிழகத்தில் மலர உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க
நாளை நமதே!