– விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள்
காவியுடையில் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் நாடி நரம்புகளில் நம்பிக்கை ஏற்றிய ஆன்மிக ஞானி.
அன்புள்ள சகோதர சகோதரிகளே… என அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேச்சைத் தொடங்கியபோது, அவரை உலகம் வியந்து பார்த்தது. அவரது நம்பிக்கை மொழிகள் சில…
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால் தான் நமக்கு அச்சம் ஏற்படுகிறது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.
அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்து விடும்.
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவம்.
கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள். தடைகளிலிருந்து விடுபடுங்கள்.
இதயம் சொல்வதை செய். வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும்தான் உண்டு.
எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவையல்ல.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.
நீங்கள் பிறந்ததற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில், உங்களுக்கும் மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக்கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.