சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி – இவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பர்.
இவற்றில் முதல் மூன்றும் முற்றிலும் கிடைத்துள்ளன.
வளையாபதியில் 72 பாடல்களும், குண்டலகேசியில் 19 பாடல்களும் மட்டுமே கிடைத்துள்ளன.
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்.
மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்.
சீவக சிந்தாமணி – திருத்தக்கதேவர்.
குண்டலகேசி – நாதகுத்தனார்.
வளையாபதி – இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.
உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
1. உதயணகுமார காவியம் – குணாட்டியர் – 150 பாடல்கள்.
2. நாககுமாரகாவியம் – ஆசிரியர் அறியப்படவில்லை – 170 பாடல்கள்
3. யசோதரகாவியம் – வெண்நாவலர் உடையார் வேல் – 320 பாடல்கள்
4. சூளாமணி – தோலாமொழித் தேவர் – 2131 பாடல்கள்
5. நீலகேசி – ஆசிரியர் அறியப்படவில்லை – 894 பாடல்கள்.
இவை யாவும் டிஜிட்டல் வடிவிலும் உள்ளன.
அனைத்தும் சமண, பவுத்த மதம் சார்ந்த ஆசிரியர்களால் இயற்றப்பட்டவையே.
சிலப்பதிகாரம் மட்டும் கி.பி. 2 அல்லது 3ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. மணிமேகலையின் காலம் கி.பி. 5 அல்லது கி.பி. 6 ஆக இருக்கலாம்.
பிற காப்பியங்களின் காலம் கி.பி. 8 முதல் கி.பி. 15 எனக் கருதப்படுகிறது. காலத்தை நிர்ணயிப்பதில் தமிழறிஞர்கள் இடையே பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஐங்குறுக்காப்பியங்கள் பற்றி அதிகம் பேசப்படாமல் போனதிற்கு அவை சமண சமயம் சார்ந்தவையே எனக் கருதுகிறேன்.
ஐம்பெருங் காப்பியங்களிலும் சிலப்பதிகாரம் மட்டுமே மக்கள் அறிந்த காப்பியமாகத் தமிழ் அறிஞர்களின் பெரு முயற்சியால் பரவலாக வெளிக்கொணரப்பட்டது.
பிற காப்பியங்களும் அவற்றின் பவுத்த, சமணக் கோட்பாட்டால் தமிழறிஞர்களாலேயே அதிகம் பேசப்படாமல் மறைக்கப்பட்டது.
உமரின் சீறாப்புராணத்திற்கும், வீரமாமுனிவரின் தேம்பாவணிக்கும் கூட இதே கதிதான்.
இலக்கியத்திற்கான இடத்தையும், பெருமையையும் தீர்மானிக்கும் சக்தியாக மதம் விளங்குவதை மாற்றியாக வேண்டும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை மட்டுமே தமிழின் மூல நூலாகவும், பிற நூல்கள் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மூல நூல்களின் தழுவல்களாக இருந்ததும் அதிகம் மக்களை ஈர்க்காதாதற்கான காரணமாக இருக்கலாம்.
ஏது எப்படி இருந்தாலும், அச்சிடப்பட்ட நூல் வடிவில், குறைந்த எண்ணிக்கையிலெனும் இவைகளைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும், தமிழக அரசுக்கும் உள்ளது.
தமிழ் மக்களிடையே இந்நூல்கள் குறித்த அடிப்படைத் தகவல்களையேனும் கொண்டு சேர்க்க வேண்டிய பணி தமிழறிஞர்களுடையது.
-ஆதிரன்
12.01.2022 12 : 30 P.M