எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்?
கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக் காரணமாகியிருக்கிறது ‘அன்பறிவு’.
இன்னுமொரு மதுரைக் ‘கதை’!
அருகருகே இருக்கும் இரண்டு ஊர்கள். ஒரு ஊர் அளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருந்தாலும், மற்றொரு ஊரைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதர்தான் அந்த வட்டாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்.
சாதி வித்தியாசங்களை மனதில் சுமக்கும் அவர் என்ன சொன்னாலும் அப்பகுதியில் சட்டமாகப் போற்றப்படும். அப்படிப்பட்டவரின் மகள், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்கிறார்.
மகள் தன்னோடு இருக்க வேண்டுமென்பதற்காக, வேறு வழியில்லாமல் வேற்று சாதியைச் சேர்ந்தவரை மருமகனாக ஏற்றுக் கொள்கிறார் அந்த பெரிய மனிதர்.
அதேநேரத்தில், அவருடன் இருக்கும் ஒரு வேலையாள் தனது பொறாமையினாலும் பதவி மோகத்தினாலும் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைக்க, அந்தத் தம்பதிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு திசைகளில் வளர்கின்றன.
தாத்தா, தாய் அரவணைப்பில் மதுரைப் பின்னணியில் வளரும் குழந்தை முரட்டுத்தனத்தோடு இருக்க, வெளிநாட்டில் தந்தையிடம் வளரும் இன்னொரு குழந்தை உதாரண புருஷனாக மாறுகிறது.
பிரிந்த இரட்டைக் குழந்தைகள் ஒருவரையொருவர் சந்தித்தார்களா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்ற கேள்விகளுக்கான பதில்களோடு ஊர்ப் பிரிவினையும், சாதி வேற்றுமையும் அரசியல் வன்மங்களும் ‘அன்பறிவு’ படத்தின் பின்னணியாக காட்டப்படுகின்றன.
ஆதி மாற்றிக்கொள்வாரா?
கதையில் வரும் இரட்டைக் குழந்தைகளாக ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி வருவதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. தாத்தாவாக நெப்போலியனும் தாயாக ஆஷா சரத்தும் தந்தையாக சாய்குமாரும், அந்த குடும்பத்தைப் பிரிக்கும் அரசியல்வாதியாக விதார்த்தும் நடித்திருக்கின்றனர்.
’அன்பறிவு’ டைட்டில் திரையில் தோன்றும் முன்னரே ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பெயர் வந்துவிடுகிறது. அதன்பிறகும், அவரது பெயருக்குப் பின் நெப்போலியன், சாய்குமார் போன்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
விஜய், அஜித் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் மூத்த நடிகர்கள் நடிக்கும்போது அவர்களது பெயர்கள் முதலில் இடம்பெற வேண்டுமென்று எதிர்பார்க்கும் இக்காலகட்டத்தில் இந்த மனப்பாங்கை எப்படி எடுத்துக்கொள்வது?
ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்க எந்தளவுக்கு முயற்சிக்க வேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார் ஆதி.
ஆனாலும், தான் நடித்த இரட்டை வேடங்கள் எந்தளவுக்கு வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதை அவரே விளக்கினால் தான் உண்டு.
மிக முக்கியமாக, இதே ஹேர்ஸ்டைலை ஆதி அடுத்த படத்திலும் தொடர்ந்தால் இந்த வரவேற்பு கூட தொடராது என்பதை புரிந்துகொண்டு சில பல மாறுதல்களை மேற்கொள்வது நல்லது.
சாதிப் பெருமை கொண்ட பெரிய மனிதராக நடித்திருக்கும் நெப்போலியன் நடிப்பு அருமை. அவரது மகளாக வரும் ஆஷா சரத், தான் வரும் காட்சிகளில் நிறைவு தென்படுமாறு பார்த்துக் கொள்கிறார்.
தொய்வான உடல்வாகை மீறி சாய்குமாரின் குரல் மட்டுமே, அவரது நடிப்பைக் காப்பாற்றுகிறது. மற்றபடி தீனா, நரேன், ரேணுகா, மாரிமுத்து, அர்ஜெய் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நான்கைந்து காட்சிகளில் வந்துபோய் தங்களது இருப்பைக் காட்டுகின்றனர்.
காஷ்மீரா மற்றும் ஷிவானி இருவருமே நாயகிகள் என்பது பாடல்களில் மட்டுமே தெரிகிறது.
ஏற்கனவே பார்த்தது போலிருக்கிறதே என்ற உணர்வை ஏற்படுத்தும் காட்சிகளுக்கு நடுவே, ’நான் இருக்கேன்ல’ என்ற உறுதியைத் தருகிறது விதார்த்தின் நடிப்பு.
அவரது பாத்திரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும், அதிகளவில் வில்லன் வாய்ப்புகளை அள்ளும் திறமை நிறைந்திருப்பதுதான் ‘அன்பறிவு’ படத்தின் ஒரே சிறப்பு.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பிரதீப் ராகவின் படத்தொகுப்பும் ஒரு கமர்ஷியல் படமொன்றை பார்க்கிறோம் என்ற எண்ணத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. ஹிப்ஹாப் தமிழாவின் பாடல்களும் பின்னணி இசையும் ‘ஓகே’ ரகம்.
நேட்டிவிட்டிய விட்ருங்க..!
ஒவ்வொரு வட்டாரத்தையும் தனித்தனியாக காட்டும்போது நுணுக்கமான கலாச்சார, சமூக வேறுபாடுகளோடு குறிப்பிட்ட சாதி சார்ந்த தினசரி வாழ்வியலும் காட்சிப்படுத்தப்படும்.
அது, பொதுமைப்படுத்தும் பொழுதுபோக்கு சினிமாவிலிருந்து தனித்து நிற்பதோடு கதைக்கு நம்பகத்தன்மையையும் வழங்கும்.
’மண் வாசனை’, ’கிழக்கு சீமையிலே’க்கு முன் தொடங்கி ‘ஆடுகளம்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்ட பல படங்களில் மதுரையின் பல்வேறு முகங்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
அவற்றைப் பொதுமைப்படுத்தி வெறுமனே மதுரை வட்டார வழக்கை வசனங்களாகக் கொண்ட படமாகியிருக்கிறது ‘அன்பறிவு’.
’லேய்’ என்ற வார்த்தையைக் கொண்டு நெல்லை வட்டாரத்தைச் சுட்டுவது போல, இப்படத்தின் வசனங்களில் ‘ய்ங்க’ என்ற வார்த்தை இப்பட வசனங்களில் அதிகமாகப் புழங்குகிறது.
’வேட்டியை மடித்துக் கட்டினால் கலவரம், மீசையை முறுக்கினால் கலவரம்’ என்ற பாடல் வரிகளே மதுரை வட்டாரத்தைப் பற்றியும், அங்கு வசிக்கும் மக்களைப் பற்றியும் எவ்வளவு தரக்குறைவாகப் படக்குழுவினர் சிந்தித்திருக்கின்றனர் என்பதைக் காட்டிவிடுகிறது.
தியேட்டரில் அல்லாமல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் எனும் ஓடிடியில் பார்க்கிறோம் என்பது புரியும்போதெல்லாம், திரைக்கும் நமக்குமான இடைவெளி இன்னும் அதிகமாகிறது.
டைட்டிலில் கதைக்கு நேரே ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதன்பின், ஏன் எதற்கென்று தெரியாமல் ‘சத்யஜோதி கதை இலாகா’வின் பெயர் வருகிறது.
வசனங்களை பொன்.பார்த்திபனோடு ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இவர்களோடு, இயக்குனர் அஸ்வின் ராம் பெயரும் எழுத்தாக்கத்தில் இடம்பெறுகிறது. ஆனாலும், இப்படத்தின் கதையும் காட்சியமைப்பும் எத்தனையோ இரட்டை வேட தமிழ் படங்களை நினைவூட்டுகிறது.
மிக முக்கியமாக, இயக்குனர் ஹரியின் ‘வேல்’ படத்தை ‘ஸ்பூஃப்’ செய்வதாக எண்ணிப் பார்த்தால் அத்தனை காட்சிகளும் பொருந்திப் போகின்றன.
தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வருபவராக விஷால் நடித்து வந்த காலத்தில், ஒரு படத்தில் ‘நானும் மதுரக்காரந்தாண்டா’ என்று அவர் வசனம் பேசியவுடன் ‘அப்ப நாங்க என்ன மலேசியாகாரங்களா’ என்று கிண்டலடிப்பார் சந்தானம்.
அது போலவே, ’அன்பறிவு’ பார்த்து முடித்தவுடன் ‘இந்த மதுரை எங்கிட்டு இருக்கு’ என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது.
ஜல்லிக்கட்டு, அடிதடி, மண் வாசம், ஊர் மரியாதை, பந்த பாசம், கேலி கிண்டல் கலந்த பேச்சு, ஒரு ஹீரோ, ஒரு வில்லன்,
இவற்றுக்கு நடுவே தமிழ்நாட்டின் ஏதோவொரு வட்டாரத்தைப் பின்னணியாக காட்டினால் மாஸ் ஹீரோவாகிவிடலாம் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு யாரோ தவறான ஐடியாவை கொடுத்திருக்கின்றனர்.
அதை நம்பி, அவரும் ‘ஸ்லோ மோஷனில்’ திரையில் ‘எண்ட்ரி’ கொடுக்கிறார்.
இனிமேலாவது ‘பேக்ட்ராப்’ பற்றி யோசிக்காமல், ஆதி நல்லதொரு கதையைத் தேர்ந்தெடுப்பது நல்லது; அதில் கொஞ்சம் புதுமை கலந்தால் இன்னும் நல்லது.
அதை விடுத்து, ‘கிளப்புல மப்புல’ பாடலை இப்போதும் முனுமுனுப்பவர்களே போதுமென்று எண்ணினால், இது போல பழமைவாதங்களை தூக்கிப் பிடிக்கும் நடிப்பினைத் தாராளமாகத் தொடரலாம்!
- உதய் பாடகலிங்கம்