நினைக்கும்போது இனித்த காதல்!

நூல் வாசிப்பு:

கவிஞர் ஜெயபாஸ்கரன் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் மூலம் தமிழ்ப் படைப்புலகில் அறியப்படுகிறவர்.

ஆனால் சுகதேவ் சொல்வதுபோல கட்டுரைகள் எழுதும் படைப்பாளிகளுக்கு பெரிய அங்கீகாரமோ பாராட்டுகளோ கிடைப்பதில்லை. அதுவொரு சமகாலத்தின் சோக நிலை.

தமிழில் கட்டுரையாளனுக்கு அவன் கட்டுரையாளன் என்பதாலேயே பெரிய இடமோ அல்லது மதிப்போ இருப்பதாகத் தெரியவில்லை.

பிற ஆளுமைகளுடன் கட்டுரையும் இணையும்போது வேண்டுமானால், அதற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்ததாக நினைத்துக் கொள்ளலாம் என்கிறார் சுகதேவ்.

பல பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளில் நான்கில் ஒரு பகுதியைத் தொகுத்து ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் என்ற தலைப்பில் முதல் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார்.

தமிழ் இலக்கியச் சூழலில் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தும், கொந்தளித்தும், பெருமிதப்பட்டுக் கட்டுரைகளை எழுதவேண்டிய தேவை இருக்கிறது என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஜெயபாஸ்கரன்.

தாய் இணையதள வாசகர்களுக்காக நூலில் இருந்து ‘எது காதல்’ என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்…

“நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்…” என்கிற எப்போதோ யாருக்கோ எழுதப்பட்ட வசனம்தான் தற்போதைய தமிழ் காதல் உலகின் தாரக மந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தாம் கொண்டிருக்கும் காதல் மட்டுமே புனிதமானது. அடுத்தவரின் காதலைவிடவும் உயர்ந்தது எனும் எண்ணம் அனைத்துக் காதலர்களின் மனத்திலும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை எதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் மனோபாவம் பற்றியும் கவலைப்படாமல் வெறும் கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால் இன்றைய காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள்.

வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றி அடைகிறார்கள். வாழ்க்கை என்பதே நூறு சதவிகிதம் காதல்மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில் தோல்வியடைகிறார்கள்.

காதல் என்பது நெருங்கிவரும்போது முகமூடிகளைப் பரஸ்பரம் கிழித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகும்.

அதனால்தான் தனித்தனி வீடுகளில் இனிய காதலர்களாக வாழ்ந்தவர்கள், ஒரே வீட்டில் தம்பதிகளாகச் சேரும்போது தாறுமாறாகித் தகராறு செய்துகொண்டு பிரிவதை நாம் நிறையவே காணமுடிகிறது.

உலகப் புகழ்பெற்ற எத்தனையோ காதல் ஜோடிகள் பிரிவதற்காகவே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். காவியக் காதலர்களான அம்பிகாபதியும் அமராவதியும் திருமணம் செய்துகொண்டிருந்தால் நிச்சயம் பிரிந்திருப்பார்கள் என்று விவாகரத்து பெற்றவர்கள் வாதிடுவதுண்டு.

காதலில் தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்றெல்லாம் ஏதுமில்லை.

எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்று சொல்லப்படுவது போலவே, எல்லாக் காதல்களும் பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு பல்வேறு முகமூடிகளுடன் பவனி வருகின்றன.

அதில் வெற்றி கிட்டிய பிறகு அதன் போக்கில் ஒரு மந்தமும் சலிப்பும் மேலிட்டுவிடுகிறது.

நினைக்கும்போது இனித்த காதல் கிடைக்கும்போது கசந்துவிடுகிறது.

***

ஜெயபாஸ்கரன் கட்டுரைகள்: ஜெயபாஸ்கரன்
வழுதி வெளியீட்டகம்,
114, பத்திரிகையாளர் குடியிருப்பு,
சீனிவாசபுரம், திருவான்மியூர்,
சென்னை – 41
விலை ரூ. 180

– பா.மகிழ்மதி

You might also like