‘தாய்’ வாசகர்களைத் தமிழாகப் போற்றிய வலம்புரி ஜான்!

ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 6
***

எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வேறுயாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன்.

பாலகுமாரனா? என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படலாம். ஆமாம். அதே பாலகுமாரன் தான்.

‘நாயகன்’ படத்தில் வேலு நாயக்கரைப் பார்த்து ”நீங்க நல்லவரா கெட்டவரா?“ என்று பேரனைக் கேட்க வைத்த வசனத்தை எழுதி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.

புகழ் பெற்ற பிறகு பார்க்கிற பாலகுமாரனை நான் சொல்லவில்லை.

ஆரம்ப காலத்தில் அதாவது எண்பதுகளின் துவக்கத்தில் அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்.

நெற்றியில் மூன்று விபூதி பட்டைகளை அணிந்து கொண்டு லேம்பை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

மூன்று பட்டைக்கும் அவர் ஸ்டைலாக வண்டி ஓட்டுவதற்கும் சம்பந்தமே இருக்காது.
அப்படி ஒரு கலவை தான் பாலகுமாரன்.

ஜேம்ஸ்பாண்ட் கணக்காய் அழகிய முகம். அந்த லேம்பை ஸ்கூட்டர் இப்போது நிச்சயமாக எந்த சாலைகளிலும் செல்வதில்லை.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் சார் காமராஜன் என்கிற கதாபாத்திரம் பயன்படுத்துகிற வண்டி பாலகுமாரன் ஓட்டிக் கொண்டு போன வண்டி வகையறா தான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

பாலகுமாரன் தன்னுடைய தொடர்கதையை தாய் வார இதழில் எழுத வேண்டும் நினைத்து வலம்புரிஜானிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் குமார் என்கிற உதவியாளரை அழைத்து என்னை கூப்பிட்டு வரச் சொன்னார். நான் போய் எதிரில் நின்றேன்.

“ராசி, இவர்தான் பாலகுமாரன். நம்முடைய தாய் வார இதழில் கதை எழுதப் போகிறார். அந்தக் கதையை கேட்டுவிட்டு நீங்கள் பதில் சொல்லுங்கள்“ என்று சொன்னார்.

ஆசிரியர் முடிவெடுத்துவிட்டால் நேரடியாக தொடர் வெளி வந்து விடும். ஆனால் ஆசிரியர் அப்படிச் செய்யவில்லை. சிறுகதையையும் தொடரையும் பார்த்துக் கொள்கிற பொறுப்பு எனக்கு அப்போது தந்திருப்பதால் நீங்கள் கேளுங்கள் என்று சொன்னார்.

அது அவரின் பெருந்தன்மை.

நான் பாலகுமாரன் கதையைக் கேட்டேன். அவர் மிகச்சிறப்பாக ஒரு கதையைச் சொன்னார்.
ஆனால், அந்தக் கதையை அனுமதிக்க வேண்டாம் என்று கருதினேன். எனவே இது வேண்டாம் வேறு ஒரு கதையை நீங்கள் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

பாலகுமாரன் திடுக்கிட்டு ஏன் இந்தக் கதைக்கு என்ன? என்று கேட்டார்.

நான் உடனடியாக சொன்னேன், “இது உங்கள் சொந்தக் கதையாக இருப்பது போல் தெரிகிறது. நீங்கள் இதை டைரியில் வேண்டுமானால் எழுதலாம். ஆனால் பல லட்சம் வாசகர்கள் படிக்கிற ஒரு கதையில் நேர்த்தியான ஒரு அறம் இருக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

இப்போது அதை நினைத்துப் பார்த்தால் தவறாகக் கூட இருக்கலாம் அல்லது சரியாகவும் இருக்கலாம்.

காரணம் நான் ஜெயகாந்தன், விந்தன், புதுமைப்பித்தன் போன்றோரின் கதைகளைப் பின்பற்றி படித்த வாசகர் என்பதால், வாசகர்களுக்கு சரியான சமூகக் கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று கருதினேன்.

இதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

பாலகுமாரன் திறமை வாய்ந்தவர் என்பதால் அவரிடம் நல்ல கதையை வாங்கி விட வேண்டும் என்றும் கருதிதான் அந்தக் கதையை மறுத்தேன்.

‘மெர்குரிப் பூக்கள்’ நாவலில் தொழிற்சங்கப் பிரச்சனை, கூலி உயர்வு, சிவப்பு சிந்தனை மேம்பட எழுதியிருப்பார்.

கணேசன் என்கிற கதாபாத்திரம் இன்னும் மறக்கமுடியாது. அப்பேர்பட்ட பாலகுமாரன் இரண்டு பெண்களை மையப்படுத்திய ஆணின் கதையைச் சொல்கிறாரே என்பதுதான்.

பாலகுமாரன் அப்போது இளைஞர்கள் எதிர்பார்த்திருக்கிற ஒரு இலக்கிய எழுத்தாளராக திகழ்ந்தார்.

பாலகுமாரன் நான் சொன்னதை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. உடனே ஆசிரியர் அறைக்குச் சென்று அமர்ந்தார்.

என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆசிரியர் என்னை அறைக்குள் அழைத்து ஒரு காகிதத்தில் “என்றென்றும் அன்புடன் – பாலகுமாரன்“ என்று எழுதி என்னிடம் தந்து, அடுத்த வாரமே இந்தத் தொடர்கதை வரவேண்டும் என்று நீங்கள் அறிவித்து விடுங்கள் என்று சொன்னார்.

நான் தயங்கினேன்.

“ராசி நாம் நினைப்பது எல்லாமே வந்துவிட வேண்டும் என்று கருதாதீர்கள். எழுத்தாளன் சமூகத்திற்கு தான் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறானோ, அதைத் தடையின்றி சொல்வது எழுத்தாளருடைய உரிமை. நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இது இன்னொரு மாதிரியான புரிதல் என்பதை உணர்ந்து நான் அமைதியானேன்.

பிற்காலத்தில் இந்த முரண்பட்ட அனுபவமே பாலகுமாரன் அவர்களிம் என்னை நெருக்கமாக நட்பாக பழக வைத்தது என்று சொல்லலாம்.

பிறகு, ‘என்றென்றும் அன்புடன்’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

பாலகுமாரனை உற்றுப் பார்த்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன்.

வாழ்வியலில் பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்கிற அற்புதக் கலையை, மனசுக்குள் பேசும் ஒரு மொழியை பாலகுமாரன் கைவரப் பெற்றிருந்தார் என்பதை ஆச்சரியமாக பார்த்தேன்.

அதன்பிறகு, அவர் பின்னால் வண்டியிலும், பேருந்திலும், காரிலும் பேசிக்கொண்டே பயணப்பட்ட சம்பவங்கள் நிறைய.

ராணிமேரி கல்லூரிக்கு ஒரு முறை பாலகுமாரனை அழைத்துச் சென்றேன்.
அப்போது வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நீண்ட இடைவெளி இருந்தது.

எழுத்தாளர்களை நேரடியாக அமர வைத்து அவர்களின் மனநிலையை புரியவைக்க வேண்டும் என்று கருதினேன். அதுதான் இந்த ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு சென்ற கதை.

அதில் ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்தது.

ஜெயகாந்தனைப் போலத்தான் பாலகுமாரன் கம்பீரமாக அமர்ந்துகொண்டு மாணவிகளைப் பார்த்து “நான் புகைப் பிடிப்பது வழக்கம். நான் பிடிக்கலாமா?” என்று கேட்டார்.

மாணவி ஒருவர் எழுந்து பிடிக்கக் கூடாது என்றார்.

அதனாலென்ன உங்கள் விருப்பம் உங்களுக்கு, என் விருப்பம் எனக்கு எனச் சொல்லி ஒரு இழு இழுத்தார். எல்லோரும் அவரையே பார்த்தார்கள்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதை கீழே போட்டுவிட்டு, “உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன்” என்று அவர் பேசி அந்த அரங்கை தன் கட்டுக்குள் கொண்டுவந்தது ஆச்சரியமான சம்பவம்.

வலம்புரி ஜான் எப்போதும் எழுத்தாளர்களை மதிப்பதை அடிப்படை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் அவர்களை பார்க்கச் சென்றிருந்தேன். மகேந்திரன் திரைப்படங்கள் மீது எனக்கு அலாதி பிரியம் உண்டு.

முள்ளும் மலரும் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அவரோடு பயணித்து அடிக்கடி பேட்டியை போட்டுக் கொண்டிருந்தேன். மகேந்திரன் இல்லத்தில் வழக்கத்திற்கு மாறாக அவர் அமைதியாக இருந்தது போல் எனக்குத் தோன்றியது.

படங்கள் சரியாகப் போகவில்லை.

வலம்புரிஜானிடம் சென்று “மகேந்திரன் அவர்களை தாயில் ஒரு தொடரை எழுத வைக்க வேண்டும் என்றேன்”.

“ஏன்?” என்றார்.

“தொடர்ச்சியாக அவர் திரைப்படத்தில் பயணப்பட்டு சிறிது தளர்வாக இருக்கிறார். அவரை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்” என்றேன்.

உடனே “ஆமாம் எழுத்தாளர்கள் எப்போதும் பின்தங்கி விடக்கூடாது. அவர்களை நாம் நம்பிக்கையான மனிதர்களாக மாற வேண்டும்” என்று சொல்லி உடனே ஒரு தொகையை எனக்கு அளித்து அவரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார்.

மகேந்திரன் இந்தத் தொகையைக் கொடுத்ததும் “எதற்கு?” என்றார்.

சிரித்துக்கொண்டே “சார் தொடர்கதை…“ என்று சொன்னேன்.

“சரி நான் எதைப்பற்றி எழுத“ என்று கேட்டார்.

“நீங்கள் திரைப்படமாக எடுக்கும் ஒரு கதையைக் கூட தொடராக எழுதலாம்” என்றேன்.

உடனே ‘மருதாணி’ என்ற தலைப்பிட்டு நான் எழுத ஆரம்பிக்கிறேன் என்றார்.

“இந்தத் தொடரில் ஒரு ஓவியரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் சார். அவரிடம் நீங்கள் படத்தில் வருவது போன்ற காட்சிகளைச் சொல்லுங்கள். புதிய கோணங்களில் சினிமாக் காட்சி போல் வரட்டும்“ என்றேன்

அந்த ஓவியர்தான் அரஸ்.

அரஸ் பல கோணங்களில் திட்டமிட்டு வரைந்தார். திரைப்படத்தில் வருவது போல் பல கோணங்களில் படம் வரைந்து வாசகர்களைக் கவர்ந்தார்.

புகழ் பெற்றிருக்கும் நிலையில் ஒருவரைப் பயன்படுத்திக்கொண்டு உயர்வது அல்ல வாழ்க்கை.
உயர்வதற்கு காரணமாக இருப்பதே தனது கொள்கையாக இருந்தவர் வலம்புரிஜான்.

நா.காமராசன் அவர்கள் எங்கெங்கோ இயக்கங்களில் சென்ற போதும்கூட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கவனத்திற்கு சென்று மீண்டும் அவர் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்து தொடர்ச்சியாக பல வாரங்கள் அவருடைய கவிதைகளை படம் வரைந்து சிறப்பாக வெளியிட்டார்.

நா.காமராசன் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவர் கருதித்தான் அந்தக் கவிதைகள் வெளியிடப்பட்டது.

அதற்கு காரண கர்த்தாவாக நானும் இருந்தேன். கடைசியில் வலம்புரிஜான் நோக்கம் நிறைவேறிவிட்டது.

புரட்சித் தலைவர் அவருக்கு தமிழ்நாடு கதர் கிராம வாரியத் தலைவர் பதவி வழங்கினார் என்பது வரலாறு.

மரபுக் கவிதையில் கவியரசு கண்ணதாசனுக்கு இணையாக ஒருவர் இருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்தார் வலம்புரிஜான். அவர்தான் இளந்தேவன்.

பல கவியரங்குகளில் தலைமையேற்று நடத்த வாய்ப்பு தந்தார் வலம்புரிஜான் அவர்கள்.
அதோடு மட்டுமல்ல தொடர்ந்து எழுதவும் வைத்தார்.

இதனுடைய பின்னணியில்தான் ஜெயலலிதா முதல்வர் ஆன பிற்பாடு இளந்தேவன் அவர்களை தன்னுடன் எழுதுவதற்கு வைத்துக் கொண்டார் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தி.

இப்படி தேவைப்படுவோருக்கு பயன்படுகிற காற்றாக வலம்புரிஜான் இருந்தார்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே ஒரு புதிய இளைஞர், இளைஞியையோ எழுத்தாற்றல் உள்ளவர் என்று உணர்ந்தால் உடனே கையோடு அவர்களின் படைப்பை எடுத்துக் கொண்டு வந்து பிரசுரித்து விடுவார்.

எல்லோரும் பத்திரிகையை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் வலம்புரிஜான் அரசியலை திணிக்கவில்லை.

அதற்கு காரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வலம்புரியாருக்கு கொடுத்த சுதந்திரம், நம்பிக்கை, உரிமை.

அந்த காலக்கட்டத்தில் பல்வேறு இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், குறிப்பாக கிராமத்து இளைஞர்களால் பெரிதும் பாராட்டப்பட, விரும்புவதற்கு காரணம் வலம்புரிஜான் அவர்கள் கையாண்ட நேர்த்தி. இளைஞர்களின் எண்ணங்களை மதித்த விதம்.

முற்போக்கு எண்ணம் கொண்ட இந்த தாய் வார இதழில் ஆன்மீகம் வருவது பலருக்கும் நெருடலை ஏற்படுத்தியது. அதிலும் அதில் தவறாமல் இடம் பெற்ற ஜோசியம் ’நம்புங்கள் நாராயணன்’.

இது ஏன்?

(தொடரும்…)

You might also like