கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்கக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார். ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
அவருக்கு நெருக்கமானவர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.
கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹாசன் நகர்ப் பகுதியில் காவல் துறையினர் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜியுடன் அவரது உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.