சொற்களில் ததும்பும் தாயன்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களின் பிறந்தநாளையொட்டி (05.01.2022) அவரது ‘கறுக்கும் மருதாணி’ நூலுக்கு 2003 ஆம் ஆண்டில் துரை.ரவிக்குமார் எம்.பி எழுதிய முன்னுரையை அவரது முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துகளோடு பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவு இதோ:

****

“கவனிப்பது – சொற்களையல்ல, ஒரு சொல்லிலிருந்து மற்றொன்றுக்குச் சொற்களினூடாக முடிவற்றுப் பாயும் துயரத்தைக் கவனிப்பது‘’ – மாரீஸ் ப்ளான்ஷொ (The Step not beyond)
யதார்த்தத்தைக் கவித்துவத்தோடு மாற்றியமைப்பதுதான் நல்ல நாவல் என காப்ரியல் கார்ஷியா மார்க்யெஸ் ஒருமுறை குறிப்பிட்டார்.

இது நாவலுக்கு மட்டுமல்ல, எந்தவொரு படைப்பிலக்கியத்துக்கும் பொருந்தும்.

இலக்கியத்துக்கான இந்தக் குணம் தத்துவத்துக்கும் அரசியல் போராட்டங்களுக்கும்கூடப் பொருந்தக் கூடியது தான் என்று சொன்னால் நாம் சற்றே வியப்படையக் கூடும். தத்துவத்தின் பணி உலகை வியாக்கியானப்படுத்துவதல்ல – அதை மாற்றுவதுதான் எனக் கார்ல் மார்க்ஸ் கூறியதை இங்கு நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

இலக்கியம் யதார்த்தத்தை மாற்றியமைக்கிறதென்றால் சமூக அரசியல் விமர்சனம் அதிகார உறவுகளை மாற்றியமைக்கிறது என்று சொல்லலாம். அதிகார உறவுகளை மாற்றியமைப்பதும்கூட யதார்த்தத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு வழிமுறைதான்.

இப்படிப் பார்த்தால் விமர்சனத்துக்கும் தத்துவத்துக்கும் படைப்பிலக்கியத்துக்கும் இடையிலான உறவினை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் படைப்புக் குணம் கொண்ட விமர்சனம் என்பது ஒரு போராட்டமாகவும் இருக்கிறது என்பதையும் நாம் உணர முடியும்.

அதிகார உறவுகளை மாற்றியமைக்கும் விமர்சனமுறை அதிகாரத்தை மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்படும் ஒன்றாகப் பார்ப்பதில்லை. மாறாக, அதிகாரம் எங்கும் விரவியிருக்கிறது என அது புரிந்துகொள்கிறது.

எனவே, குற்றவாளிகளை அது வெளியில் தேடிக்கொண்டிருப்பதில்லை. தன்னையும் உள்ளடக்கி தனது ஆய்வை அது செய்கிறது.

(மானுடச் செயல்பாட்டைப் பாவம் என முத்திரைகுத்திக் குற்ற உணர்வில் நைந்துபோகச் செய்யும் மதவகைப்பட்ட செயல்பாடல்ல அது.)

‘நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிவதல்ல அதன் நோக்கம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மறுப்பதுதான்’ அந்த அணுகுமுறையின் நோக்கம்.

நமது நிகழ்காலத்தின் அதிகாரச் செயல்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் இந்த அணுகுமுறை மிஷேல் ஃபூக்கோ வால் முன்வைக்கப்பட்டதாகும்.

அதிகார உறவுகளை ஆய்வு செய்வதன்மூலம் அதிகாரத்தைப் பற்றிய புரிதலை அடைய முடியும் என்ற ஃபூக்கோ அதற்கு உதாரணங்களாகச் சில போராட்டங்களை அடையாளப்படுத்தினார்:

“பெண்களின் மீதான ஆண்களின் அதிகாரத்தை எதிர்த்தல், குழந்தைகளின் மீதான பெற்றோர்களின் அதிகாரத்தை எதிர்த்தல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனநோய் மருத்துவத்தின் அதிகாரத்தை எதிர்த்தல், மக்களின் வாழ்முறைகள் மீதான அரசாங்க நிர்வாகத்தின் அதிகாரத்தை எதிர்த்தல்.”

‘இந்தப் போராட்டங்களின் மையமான குறிக்கோள் அதிகார நிறுவனங்களையோ, அதிகாரக் குழுக்களையோ, அதிகாரம் உடைய மேட்டிமை வர்க்கத்தையோ தாக்குவதல்ல. அதிகாரத்தின் நுட்பத்தை, அதன் வடிவத்தைத் தாக்குவதாகும்’ என்று ஃபூக்கோ விளக்கினார். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் முக்கியத்துவம் நமக்குப் புலப்படுகிறது.

வெகுசன இதழொன்றின் பத்தியில் வெளிவந்தபோதிலும் இக்கட்டுரைகள் ஆற்றல்மிக்கனவாய் இருப்பதற்குக் காரணம் இவற்றின் தனித்துவமான அணுகுமுறையே ஆகும். பொதுப்படையாகக் கூறினால் இவை அதிகாரத்தின் வன்முறையைப் பற்றிப் பேசுகின்றன எனச் சொல்லலாம்.

அதைப் பேசுவதற்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை, தருணங்களை இந்தக் கட்டுரையாசிரியர் தேர்ந்து கொண்டுள்ளார்.

ஃபூக்கோ உதாரணம் காட்டிய அதே பிரச்சினைகளை – பெண்கள் மீதான ஒடுக்குமுறை, குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை, இன்னபிற – கனிமொழி தேர்வு செய்திருப்பது அவரது சிந்தனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

வன்முறையே வாழ்க்கை முறையாக மாறிவிட்டதுபற்றிப் பேசும் கட்டுரை நமது தினசரி வாழ்வில் வியாபித்திருக்கும் வன்முறையின் பல்வேறு வெளிப்பாடுகளையும் ஒரு விவரணப் படத்தின் தேர்ச்சியோடு நம்முன் அடுக்குகிறது.

அப்போது ஒரு பார்வையாளனின் சுவாரசியத்தோடு அவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும் நாம், ‘பந்த் அமைதியாக நடந்தது எனும்போது எல்லார் மனதிலும் ஒரு சிறு ஏமாற்றம் குடியேறுகிறது’ என்ற வரியைப் படிக்கும்போது அதிர்ந்து போகிறோம்.

நம் மனதின் அடி ஆழத்தில் ஒளித்துவைத்திருந்த ஒரு ரகசியத்தை மிக அனாயாசமாக இந்த ஒரு வரி உருவியெடுத்து வெளியே போட்டுவிடுகிறது.

சமூக வன்முறையின் துவக்கப்புள்ளியாக வீடு என்பது அமைந்திருப்பதையும் குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவில், மனைவிக்கும் கணவனுக்குமான உறவில், ஒரு பெண்ணுக்கும் அவளது சகோதரனுக்குமான உறவில் எவ்வாறு சமூக வன்முறைக்கான ஒத்திகை, தயாரிப்பு நடத்தப்படுகிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் கனிமொழி எடுத்துக்காட்டுகிறார்.

பழக்கம் தரும் பாதுகாப்பு, அது ஏற்படுத்தும் சுகம், அதிலிருந்து வெளிவரத் துணியாத மனோ பாவம் ஆகியவை வன்முறையைக் காட்டுச்செடி போலப் பரவச் செய்கின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டிவிடுகிறார்.

பழக்கம் தரும் பாதுகாப்பு மட்டுமல்ல, தனது பலவீனங்கள் பற்றிய பயமும்கூட ஒருவரை வன்முறைக்கு உடன்போகச் செய்கிறது எனக் கனிமொழி கூறும்போது (‘பசுமரத்தில். . . ‘) அதனை மேலும் சிலவற்றோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

தனது பலவீனம் பற்றிய பயம் பிறர்மீது நம்பிக்கையை, பக்தியை ஏற்படுத்தி அவரைச் சார்ந்திருக்கும்படிச் செய்கிறது. அப்படி பக்தி கொள்ளும் ஒருத்தர் தனக்குத்தானே வன்முறையை ஏவிக்கொள்ளவும் சித்தமாயிருப்பார்.

சேக்கிழார் காட்டிய ‘வன்தொண்டர்’ முதல் இக்காலத்திய அரசியல் கட்சித் தொண்டர்கள்வரை தங்களைத் தாங்களே இம்சித்துக்கொண்டு அதன்மூலம் தமது பக்தியை வெளிக்காட்டுகிற ஒரு ‘மரபு ‘ இங்கே இருந்து வருகிறது.

அதன் உளவியல் இங்குதான் வேர்கொண்டிருக்கிறது.
வன்முறையை எதிர்க்க வேண்டும் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள்.

இன்று வன்முறை என்பதற்கான விளக்கம் வேகமாக மாறிவருகிறது. நூற்றுக்கணக்கில் கொலைகள் நடக்க வேண்டும். அந்தக் கொலைகளும்கூட இதுவரை கேள்விப்பட்டிராத விதங்களில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு பெண் கொல்லப் பட்டாள் என எழுதினால் அது அதிர்ச்சிதரும் செய்தியாக இருப்ப தில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அதிலி ருந்து சிசுவை எடுத்து வெட்டிக் கொன்றார்கள் என்று செய்தி வந்தால்தான் கொஞ்சமாவது நமக்கு அதிர்ச்சி உண்டாகிறது. அந்த அளவுக்கு வன்முறைக்கு நாம் தகவமைக்கப்பட்டிருக்கிறோம்.

இப்படிப் பெரிய அளவில் நடத்தப்படும் படுகொலை களைக் கண்டிப்பதற்கு நுட்பமான பார்வையோ, கூர்மையான ஆராய்ச்சியோ தேவையில்லை. கொஞ்சம் பச்சாதாபம் இருந்தாலே போதுமானது.

ஆனால் நமது தினசரி வாழ்வின் செயல் பாடுகளில் பொதிந்துள்ள வன்முறையைத் திறந்து காட்டி அதையும் இதே இனப்படுகொலைகளை எதிர்க்கும் தீவிரத்தோடு எதிர்த்துப் போராடத் தூண்டுவதுதான் இன்று முக்கியமாகும்.

அதைக் கனிமொழியின் கட்டுரைகள் செய்கின்றன.

ஊனமுற்றவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமென்பதில் நமக்கு மறுப்பு இருக்காது. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதாது. அவர்கள் இந்தச் சமூகத் தில் தடையின்றிப் புழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அவர்களது நடமாட்டத்தைக் கவனத்தில் கொள்ளாத நமது கட்டட அமைப்புகள் பற்றிய கனிமொழியின் விமர்சனம் மிகவும் முக்கியமானதாகும். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரும்கூட இதுபற்றிய பிரக்ஞையற்றவராக இருப்பதைக் கனிமொழி சுட்டிக்காட்டுகிறார்.

பெண்கள் மீதான வன்முறை பற்றிப் பேசுவதற்குக் கனிமொழி தேர்ந்துகொண்டுள்ள நிகழ்வுகளும் பிரச்சினைகளும்கூட வித்தி யாசமானவையாக உள்ளன. தங்கையை அண்ணன் ஒருவன் அடிக்கிறான். அதை அப்பா தடுக்கிறார். அவளை அடிக்க எனக்கு உரிமை இல்லையா எனக் கேட்கிறான் அண்ணன். கல்யாணம் ஆகாதிருந்தால் அடிக்கலாம்.

கல்யாணம் ஆனபிறகு புகுந்த வீட்டிற்குத்தான் அந்த உரிமை உண்டு என அப்பா பதில் சொல்கிறார். அடிப்பது என்கிற பெளதீக வன்முறையைவிடவும் பண்பாடாக, மரபாகப் பேணப்படும் இத்தகைய மதிப்பீட்டின் வன்முறையே கொடூரமானது என்பதைக் கனிமொழியின் கட்டுரை உணர்த்தி விடுகிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கவனப்படுத்தும் இன்னொரு முக்கியமான அம்சம் பண்பாட்டின் பன்முகத்தன்மை. வெறுப்பு தீயைப் போல நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கும் நேரமிது. ஒவ்வொருவரும் தத்தமது பங்குக்கு அதில் எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கரிசனத்தோடும், பொறுப் போடும் அதுபற்றிப் பேசுகின்றன இந்தக் கட்டுரைகள்.

‘தெய்வ முகமூடி அணிந்த பிசாசுகளின் பாதங்களில் மக்கள் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கும்’ இந்தச் சூழலில் ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் சூதாட்டத்தைப் பற்றியும் நகரங்களில்கூடப் புதிய வடிவில் வெளிப்படும் சாதிவெறி பற்றியும் சில கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன.

மிகவும் சிக்கலான, ஆழமான பிரச்சினைகளை, நாம் தினசரி வாழ்வில் கடந்துசெல்லும் முக்கியத்துவமில்லாத நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுவதன் வழியாகக் கனிமொழி ஆராய்ந்திருப்பது ஜேம்ஸ் பால்ட்வின் சொன்னதை நமக்கு நினைவுபடுத்துகிறது.

பால்ட்வினும் ஓவியரான அவரது நண்பரும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்களாம். சாலையில் சிக்னலில் காத்திருக்கும்போது பால்ட்வினிடம் அந்த நண்பர் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினாராம். அங்கே அழுக்குத் தண்ணீர் சாலையில் தேங்கியிருந்தது.

‘அதைப் பார்! அதைப் பார்!’ என அந்த நண்பர் வற்புறுத்தவே பால்ட்வின் அதைக் கூர்ந்து கவனித்தாராம்.

அழுக்குத் தண்ணீரில் எண்ணெய் மிதந்துகொண்டிருக்க, அதில் அந்தத் தெருவும், அங்கே நடக்கும் மனிதர்களும், ஓடுகிற வாகனங்களும் பிரதிபலிக்கக் கண்டாராம் பால்ட்வின்.

உலகின் இயக்கத்தைச் சாலையில் தேங்கியிருந்த அழுக்குத் தண்ணீரில் பார்த்ததாகச் சொல்கிறார் பால்ட்வின். அது போல, நாம் பார்த்தும் கவனிக்காமல் கடந்து போகிறவற்றினூடாக நமது வாழ்வின் ஆதாரமான சிக்கல்களை அணுகியிருக்கிறார் கனிமொழி.

வெகுசனப் பண்பாடு, வெகுசன அரசியல் ஆகியவை பற்றிய புதுவிதமான விமர்சனப் பார்வையைக் கொண்டிருக்கும் இக்கட்டு ரைகளின் இன்னொரு சிறப்பம்சம் கவித்துவமான அதன் மொழி யாகும். தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத நல்ல சொற்கள் சிலவற்றை உறுத்தாமல் கனிமொழி கையாண்டிருக்கிறார். (சழக்கு, கொட்டடி, தண்டனிடுதல் இன்னபிற.)

ஒளவையின் பாடல் முதல் ஆத்மாநாமின் கவிதைவரை கனிமொழி கொண்டிருக்கும் இலக்கிய ஈடுபாடு அவரது சொற்களுக்குக் கூடுதலான வலுவைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. அவரே ஒரு கவிஞர் என்பதால் வார்த்தைகளை விரயம் செய்யாமல் எதையும் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

இந்தக் கட்டுரைகளின் சொற்களுக்கு அப்பால் ததும்பிக்கொண்டி ருக்கும் ‘தாயன்பு’ பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். புத்தர் குறிப்பிட்ட ‘மைத்ரி ‘ என்ற பொருளில் அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தூங்கும் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு அதனுடன் பேசுவது போல, கவனமாகத் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒரு தாயை இக்கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன.

பொய்மையோ பாசாங்கோ இல்லாத, பொறுப்பும் கடப்பாடும் கொண்ட சொற்களால் நெய்யப்பட்டி ருக்கும் இக்கட்டுரைகள் இப்படியாகத்தான் படைப்பிலக்கியத்தின் மதிப்பையும் ஆற்றலையும் பெறுகின்றன.

அதிகாரத்தின் பொறியமைவுகளைச் சிதைத்து அதிகார உறவுகளை மாற்றியமைக்கவும் முற்படுகின்றன.

நன்றி: ரவிக்குமார் எம்.பி

You might also like