தீர்ப்புகள் விற்கப்படும்: ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்!

ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதைக் காட்டும் திரைப்படங்கள் நிறைய உண்டு. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பரிதாபம் கொள்ளும் வகையிலும், அக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறி கொள்ளும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்படுவதே இயல்பு.

பெரும்பாலும், அத்தகைய கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்படுவார் அல்லது கற்புநெறியில் இருந்து விலக்கப்பட்டதற்காகத் தற்கொலை செய்துகொள்வார்.

இப்படியொரு சம்பவத்திற்குப் பிறகு அப்பெண்ணுக்கு வாழ்வே கிடையாது அல்லது உயிருடன் இருந்தும் நடைபிணமாகவே வாழ்க்கையே அமையும் எனும் விதமாகவே கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தப் போக்கில் இருந்து விலகி நின்ற திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியொரு திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘தீர்ப்புகள் விற்கப்படும்’.

‘பழிக்குப் பழி’ பார்முலா!

சமூகத்தில் மாபெரும் அந்தஸ்தோடு வாழும் ஒரு தொழிலதிபரின் (மதுசூதன் ராவ்) மகனைக் கடத்துகிறார் டாக்டர் நளன் குமார் (சத்யராஜ்). அந்த வாலிபரை விடுவிக்க வேண்டுமென்றால் 4 கோடி ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்கிறார்.

அப்பணத்தைக் கொடுப்பதற்குள் காவல் துறையின் உதவியை நாடுகிறார் அந்த தொழிலதிபரின் உறவினர் (ஹரிஷ் உத்தமன்) ஒருவர். பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு, தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சாதுர்யமாக அப்பணத்தைப் பெறுகிறார் நளன்.

அதன்பிறகு, அந்த தொழிலதிபர் தன் மகன் இருக்குமிடத்தைக் கண்டறிந்து, ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார். அவரைச் சோதிக்கும் மருத்துவர்கள், அந்த தொழிலதிபரிடம் ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்க, மீண்டும் நளனை துரத்தும் படலம் ஆரம்பமாகிறது.

அந்த வாலிபர் என்னவானார்? எதற்காக அந்த வாலிபரை நளன் குமார் கடத்தினார் என்பதற்குப் பதிலளிக்கிறது மீதமுள்ள திரைக்கதை.

நளன் குமார் கடத்தியது வெறும் பணத்திற்காக அல்ல என்பது பிளாஷ்பேக் தொடங்கியவுடனேயே புரிந்துவிடுகிறது. ‘பழிக்குப் பழி’ எனும் டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், அதைச் சொன்னவிதத்தில் வித்தியாசப்படுகிறது ‘தீர்ப்புகள் விற்கப்படும்’.

மிக முக்கியமாக, பாலியல் அத்துமீறலுக்கு ஆளானபின் பாதிக்கப்பட்ட பெண் அவமானகரமாகத் தன்னை உணர வேண்டியதில்லை என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது.

மீண்டும் ‘உங்கள்’ சத்யராஜ்!

‘நூறாவது நாள்’,  ‘24 மணி நேரம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’ போன்ற படங்களையடுத்து, சத்யராஜ் நாயகனாக நடித்த படங்களிலெல்லாம் டைட்டிலில் அவரது பெயருக்கு முன்பாக ‘உங்கள்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். 90களிலேயே அது ‘புரட்சித் தமிழன்’ என்றாகிவிட்டது.

இப்படத்திலும் அதுவே தொடர்கிறது என்றாலும், திரையில் சத்யராஜின் பெர்பார்மன்ஸை பார்க்கும்போது அந்த ‘உங்கள்’ காலம் நினைவுக்கு வருகிறது.

‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உட்படப் பல்வேறு படங்களில் நாயகிக்கு தந்தையாக நடித்திருந்தாலும், இப்படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க சத்யராஜின் இமேஜை கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இன்றும் சத்யராஜின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது என்றாலும், இக்கதையில் ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று யோசித்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. உண்மையில், இது ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்.

சத்யராஜின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட், அவரது கணவராக வருபவர், சார்லி, ரேணுகா, மதுசூதன் ராவ், ஹரிஷ் உத்தமன், சூப்பர்குட் சுப்பிரமணி உட்பட அனைவரது நடிப்பும் நிறைவைத் தருகிறது.

மதுசூதனின் ஆட்களாக வரும் லொள்ளு சபா மனோகர், கலையின் காமெடி நடிப்பு படத்தொகுப்பில் பறிபோயிருப்பது நன்றாகத் தெரிகிறது.

வழக்கமாக, இது போன்ற கதைகளில் பாலியல் அத்துமீறலுக்குக் காரணமானவர்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கும். மாறாக, இக்கதையில் சத்யராஜும் மதுசூதனனுமே மாறி மாறி காட்டப்படுகின்றனர்.

வழக்கமான ‘பழிக்குப் பழி’ கதை போலல்லாமல், வில்லனின் வேதனையை வசனங்கள் வழியே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

படத்தின் மிகப்பெரிய பலமாக கருடவேகா ஆஞ்சியின் ஒளிப்பதிவும், பிரசாத்தின் பின்னணி இசையும் அமைந்திருக்கின்றன. காட்சிகளில் நிரம்பியிருக்கும் பரபரப்பை இவ்விரண்டுமே அதிகப்படுத்துகின்றன.

நௌபல் அப்துல்லாவின் படத்தொகுப்பு தேவையற்ற காட்சிகளுக்கு ‘தடா’ போட்டிருக்கிறது. அனல் ஏதும் பறக்காமல், கண்ணால் காண்பது போன்ற உணர்வை சண்டைக்காட்சிகள் ஏற்படுத்துகின்றன.

இக்கதையை எழுதி இயக்கியிருக்கும் தீரன், எதிர்காலத்தில் பல நல்ல கமர்ஷியல் படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார்.

தொடக்கத்திலேயே சத்யராஜின் குரலையும் அவரது தோற்றத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும், கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகே முகத்தைக் காட்டியிருப்பது அருமை.

புதிய நீதி!

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை எப்படியெல்லாம் தண்டிக்க வேண்டுமென்று கேட்டால், நம்மவர்கள் ஒரு பட்டியலே இடுவார்கள். அதிலொன்றை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன். நிச்சயமாக அது புதிதல்ல.

அதேநேரத்தில், பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்ணின் பெற்றோர்கள் அடையும் வேதனையை அக்குற்றச்செயல்பாட்டில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர் அனுபவிப்பார்கள் என்பதை உணர்த்திய விதம் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

மிக முக்கியமாக, ‘என் பையன் கெடுத்துட்டா உன் பொண்ணு செத்தா போயிட்டா’ என்ற கேள்விக்கு, ‘என் பொண்ணு ஏண்டா சாகணும்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பதில் சொல்வது அருமையான இடம். இதன் மூலமாக, திரையில் காலம்காலமாக போற்றப்படும் கற்பு நெறியைத் தூக்கி கடாசியிருப்பது அருமையான விஷயம்.

எண்பதுகளில் பாலியல் வக்கிரங்களுக்கு பெண்கள் ஆளாவதைக் காட்டாத படங்கள் மிகக்குறைவு. தற்போது, அவ்வழக்கம் திரையில் குறைந்தாலும் ’பொள்ளாச்சி சம்பவம்’ போன்று பல குற்றங்கள் இன்னும் செய்திகளாக வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டோரை பாவிகளாக உணரவைக்காதவாறு கதை சொல்லியிருப்பதுதான் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் வெற்றி.

நீதிமன்ற செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் ’தீர்ப்புகள் விற்கப்படும்’ என்று டைட்டில் அமைந்தாலும், அது தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை. அந்த வகையில் மட்டுமே இத்திரைப்படம் ஏமாற்றத்தை அளிக்கிறது.!

-உதய் பாடகலிங்கம்

02.01.2022  4 : 05 P.M

You might also like