கல்யாண பரிசு – தியாகக் காதலின் திரையுருவம்!

சாந்தம், மூர்க்கம், வெகுளி, வீரம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, சிரிப்பு என்று தமிழ் திரைப்படங்களில் எந்த உணர்வைக் கொட்டினாலும், காதல் அவற்றுடன் தவறாமல் கைகோர்த்து வருகிறது.

முடிந்தவரை, காதலின் அத்தனை பரிமாணங்களும் தமிழ்த் திரையில் திகட்டத் திகட்டப் படைக்கப்பட்டிருக்கின்றன.

காதலைக் கொண்டாட்டமாக அணுகுவது ஒரு வகை என்றால், அதனைக் கைவிட்டுச் சோகத்தில் உழல்வதைச் சொல்வது மற்றொரு வகை.

1960கள் வரை ‘தேவதாஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் காதலின் வலியை, அது வாழ்வில் உருவாக்கும் தாக்கத்தைப் பிரதிபலித்திருந்தாலும், அவையனைத்தும் யாரோ ஒருவருடைய உணர்வுப் பெருக்காகவே இருந்தன.

ரசிகர்கள் திரையைக் கட்டியணைத்து ‘எனது காதல் இது’ என்று சொல்வதற்குத் தடை விதித்திருந்தன சில அம்சங்கள்.

அதனை மீறி இயல்பான மனிதர்களைத் திரையில் காட்டி ரசிகர்களை சிரிக்கவும் ரசிக்கவும் அழுதுருகவும் வைத்தவர் இயக்குநர் ஸ்ரீதர். அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘கல்யாண பரிசு’.
இதில் திரைக்கதை, வசனம், நடிப்பு என்று ஒவ்வொன்றும், அக்காலத்திய தமிழ் திரைப்படங்களில் படங்களில் இருந்து நிரம்பவே விலகியிருந்தது.

அது மட்டுமல்லாமல் ‘முக்கோணக் காதல்’ என்ற அம்சத்தையும் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது.

முக்கோணக் காதல் கதை!

சென்னையிலுள்ள கல்லூரியொன்றில் படித்து வரும் பாஸ்கருக்கு (ஜெமினி கணேசன்), தன் வகுப்பிலுள்ள வசந்தி (சரோஜா தேவி) மீது காதல். அவர் எழுதிய காதல் கடிதம் வசந்தியின் கைக்குக் கிடைக்கிறது.

மற்ற மாணவிகளுக்கும் இது தெரியவர, கோபத்தில் கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கிறார் வசந்தி. இதனால் பாஸ்கர் கல்லூரியை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

தன்னால் ஒருவரது படிப்பு தடைபட்டதாக வருந்தும் வசந்தி, பாஸ்கரைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்கிறார்.

அவரோ, கல்லூரியை விட்டு வெளியேறியவுடனே தனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார். அந்த சந்திப்பு, இருவருக்கும் இடையே காதல் உருவாகக் காரணமாகிறது.

அதன்பின், வசந்தியின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடி வருகிறார் பாஸ்கர். வசந்தியின் தாய் (எஸ்.டி.சுப்புலட்சுமி), சகோதரி கீதா (விஜயகுமாரி) இருவருக்கும், பாஸ்கர் மீது நல்லபிப்ராயம் உருவாகிறது.

இதற்கிடையே, இனிமேல் ஒருவரையொருவர் பிரியவே முடியாது என்ற அளவுக்கு பாஸ்கரும் வசந்தியும் காதல் வளர்க்கின்றனர். இந்தச் சூழலில், தான் பாஸ்கரைக் காதலிப்பதாகக் கூறுகிறார் கீதா.

தான் கல்வி கற்பதற்காகச் சதா சர்வகாலமும் தையல் எந்திரத்திடம் சரணடைந்த சகோதரி, காதல் கைகூடா விட்டால் தன் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை என்று சொல்வதை வசந்தியால் ஏற்க முடிவதில்லை.

அதனால், தன் காதலைத் தியாகம் செய்யத் தயாராகும் வசந்தி, பாஸ்கரிடம் சென்று கீதாவைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார். ‘நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்’ என்ற பாஸ்கரின் கேள்வியை வசந்தியின் வாதம் வெல்கிறது.

பாஸ்கர் – கீதா தம்பதிகளின் வாழ்வு, சில காலத்திற்குப் பின் மகிழ்ச்சியானதாக மாறுகிறது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

திடீரென்று கீதாவுக்கு உடல்நலம் குன்ற, பாஸ்கருக்கும் குழந்தைக்கும் கண்ணயராது சேவை செய்கிறார் வசந்தி. இது, வசந்திக்கும் பாஸ்கருக்கும் இடையே தொடர்பிருப்பதாகக் கீதாவின் மனதில் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

அது, மூவரது வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப் போடுகிறது.

வசந்தியின் காதல் தியாகத்தை அறியும் கீதா, அவரை வீட்டுக்கு அழைத்து வருமாறு பாஸ்கரிடம் கூறுகிறார். அதன்பிறகு என்னவானது என்பதுடன் படம் நிறைவடைகிறது.

சமூகப்படமானாலும், அரச கதைகளானாலும், மையப் பாத்திரங்களுக்கு கேடு செய்யும் வில்லனைத் தவிர்க்க முடியாது. இத்திரைப்படத்தின் சிறப்பு, அப்படி யாரும் இல்லாதது தான்.
ஜெமினியின் ராஜபாட்டை!

சாகசங்களும் இதர ஜனரஞ்சக அம்சங்களும் நிறைந்த கதைகளில் எம்ஜிஆர் ஈடுபாடு காட்ட, உணர்வுக் குவியலில் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தொடர்ச்சியாக சிவாஜி தந்து வர, இந்த இரு பெரும் சக்திகளுக்கிடையே தனக்கொன்று தனிப்பாதை அமைத்துக் கொண்டார் நடிகர் ஜெமினி கணேசன்.

கல்யாண பரிசுவின் கதை சரோஜாதேவியைச் சுற்றிவரும் வகையில் இருந்தும், அதில் நாயகனாக நடித்தது அந்நாட்களில் வேறெந்த நடிகருக்கும் இல்லாத துணிவு என்று சொல்லலாம்.

ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் ஜெமினி கணேசன் நடித்திருந்த போதும், ‘கல்யாண பரிசு’ உருவாக்கிய பிம்பம் அவரது நடிப்பு வாழ்க்கையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

நகைச்சுவை, ஆக்‌ஷன் படங்களில் நடித்தாலும் கூட, அவர் நடித்த மெலோடிராமாக்கள் ரசிகர்களால் விரும்பிக் கொண்டாடப்பட்டன. குறிப்பாக, நகர்ப்புற ஆண்கள், பெண்களுக்கான நட்சத்திரமாக அவர் அடையாளம் காணப்பட்டார்.

தன் மீது படிந்த ‘மென்குணம் கொண்ட ஆண்’ என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவே, பின்னாட்களில் ‘நான் அவனில்லை’, ‘இரு வல்லவர்கள்’ போன்ற படங்களில் ஜெமினி நடித்தார்.

இயல்பை வெளிப்படுத்திய நடிப்பு!

கல்யாண பரிசுவுக்குக் கிடைத்த பெருவெற்றியானது ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி, தங்கவேலு, சரோஜா உட்படப் பல கலைஞர்களின் சினிமா வாழ்வை அடியோடு மாற்றியது.

வெறும் அழகுப் பதுமையாக நில்லாமல், தன்னால் அருமையாக நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தார் சரோஜாதேவி. இப்படத்தின் வெற்றியினால் தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையானார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் ஜெமினியின் தங்கையாக வந்துபோனாலும், விஜயகுமாரியின் குணசித்திர நடிப்புக்கு கட்டியம் கூறியது இத்திரைப்படம் தான். இதன்பின், அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையானார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்த நாகேஸ்வரராவ், தன்னைப் போலவே இமேஜ் கொண்ட ஜெமினியின் படத்தில் ரகு என்ற துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம்.

வில்லன் வேடத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்த நம்பியார், நாகேஸ்வர ராவ் தந்தையாக நடிக்க ஒப்புக்கொண்டதும் நிச்சயம் சாதாரணமானதல்ல.

மனதில் நிலைத்த மன்னார் அண்ட் கம்பெனி!

கல்யாணபரிசு என்றதுமே பலரது நினைவில் நிற்பது தங்கவேலுவின் ‘மன்னார் அண்ட் கம்பெனி’ காமெடிதான். வேலை எதுவும் செய்யாமல் பொய் சொல்லித் திரியும் நபர்களைக் குறிப்பால் உணர்த்தும் அளவுக்கு, இது தமிழர்களின் வாழ்வோடு கலந்து போனது.

திரைக்கதையில் நகைச்சுவைப் பகுதி துண்டாகத் தெரிந்தாலும், ரசிகர்களை சோகக் கடலில் முற்றிலுமாக மூழ்கி விடாமல் காப்பாற்றியது தங்கவேலு, எம்.சரோஜாவின் உயிர்த்துடிப்பான நடிப்புதான்.

இப்படத்தின் 100-வது நாளன்று இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் உண்டு.
இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை எழுதியவர் சித்ராலயா கோபு.

இவர், இயக்குனர் ஸ்ரீதரின் பால்ய நண்பர். கல்யாண பரிசு படத்தை இயக்குவதென்று முடிவானதும், கோபு பார்த்துவந்த பணியை உதறிவிட்டு தனக்கு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார் ஸ்ரீதர்.

உடனடியாக உதவி இயக்குனரான கோபு, கல்யாணபரிசு படப்பிடிப்பு நடந்த காலத்தில் தன் உறவினர்கள் அனைவரிடமும் ‘மன்னார் அண்ட் கம்பெனி’யில் வேலை செய்வதாகக் கூறியிருக்கிறார்.

கல்லூரிக் காலத்தில் தனது நண்பர் இஷ்டத்துக்குப் பொய் சொல்லித் திரிவதைப் பார்த்த அனுபவத்தில், இப்படத்தில் தங்கவேலுவின் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார் கோபு.

‘மாப்பிள்ளை என்ன பண்றாரு’ என்ற கேள்விக்கு ‘போண்டா சாப்பிடுறாரு’ என்று சொல்வதாகட்டும், தனக்காகக் கொண்டுவந்த காபியை உறவினரிடம் மனைவி தந்த எரிச்சலில் பேசுவதாகட்டும், டைமிங் காமெடியில் தங்கவேலுவை அசைத்திட முடியாது. இந்த விஷயத்தில் நாகேஷுக்கும் முன்னோடி.

மனைவி பவுடர், சீப்பு என்று ஒவ்வொன்றாகத் தர, அதை வாங்கிக்கொள்ளும் கணவனின் கைகள், நடை, உடை என்று காட்டிய பிறகே, தங்கவேலுவின் முகத்தை ரசிகர்களுக்குக் காட்டியிருப்பார் ஸ்ரீதர்.

நகைச்சுவை நடிகர்கள் திரையில் அறிமுகமாகும்போதே ரசிகர்கள் ஆரவாரிப்பதற்கு வழி வகுத்தது இந்த உத்தி.

இப்படத்தில் தங்கவேலு நடித்த காட்சிகளின் வசனங்கள் மட்டும் தனியாக இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டு விற்பனையாகிச் சாதனை படைத்தது வரலாறு.

கரு.பழனியப்பன் இயக்கிய ‘பார்த்திபன் கனவு’ படத்தில் இந்த நகைச்சுவையின் தாக்கத்தைப் பதிவு செய்திருப்பார் விவேக்.

அற்புதமான தொடக்கம்!

நகரத்து நடுத்தர வர்க்கத்து மனிதர்களைப் பிரதியெடுத்த பாத்திர வடிவமைப்பு, அவர்களது வாழ்வைச் சொல்லும் திரைக்கதை, நுணுக்கமான மனவோட்டத்தை வசன உதவியின்றித் திரைக்குக் கடத்தும் இயக்கம் என்று ஸ்ரீதரின் தொடக்கமே அற்புதமாக அமைந்தது.

இதுநாள் வரை, ‘தமிழ் திரையின் வெற்றித் தடங்கள்’ பகுதியில் கதை, வசனம், இயக்கம் என்று அனைத்துக்கும் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டதே இல்லை. ஸ்ரீதரின் அறிமுகம் அதனைத் தகர்த்திருக்கிறது.

ஸ்ரீதருக்கு முன்பும் தாங்களே கதை வசனம் எழுதி இயக்கியிருக்கின்றனர் சில இயக்குனர்கள். ஆனாலும், முத்திரை பதித்தது ஸ்ரீதர் தான்.

திரைக்கதையில் வசந்தி தான் கல்லூரிக்குக் கிளம்புவதாக அம்மாவிடம் சத்தமாகச் சொல்ல, அந்த குறிப்புணர்ந்து தன் வீட்டில் இருக்கும் தொட்டிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கிளம்புவார் பாஸ்கர்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று இந்த வழக்கம் தொடர்வதைக் காட்டுவதன் மூலமாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காதல் வளர்ந்தது என்று வசனத்தைத் தவிர்த்திருப்பார் ஸ்ரீதர்.

அதே காதல் தோல்வியில் முடிவதை, செடியில் இருந்த இலைகள் உதிர்ந்து சிதறிக் கிடப்பதன் மூலம் உணர்த்துவார்.

மற்றொரு காட்சியில், வசந்தியிடம் ‘கல்யாணம் செய்து கொள்ளலாமா’ என்று ரகு கேட்பார்.
அப்போது, அவர் முன்பாக இருக்கும் பளிங்கு மேஜையில் படியும் இருவரது உருவத்தையும் படமாக்கும் வகையில் கேமிரா சரியும்.

வசந்தி மறுப்பு தெரிவித்ததும் ரகு கையிலிருந்த ‘பேப்பர் வெயிட்’ தவறி உருண்டு, மீண்டும் அவரது கையை வந்தடையும். கிளைமேக்ஸில் இருவருக்கும் திருமணம் நடப்பதை அது முன்கூட்டியே உணர்த்துவது போலிருக்கும்.

வேறொரு காட்சியில், கீதா கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் சமைக்காமல் கடையில் இருந்து உணவு வாங்கி வந்திருப்பார் பாஸ்கர்.

அதனை உணர்த்த, எரியாமல் இருக்கும் அடுப்பைக் காட்டியவாறே காட்சியைத் தொடங்கியிருப்பார் ஸ்ரீதர்.

பில்டர் காபியை திறக்கும்போது பாஸ்கர் கையை அனல் சுட்டுவிட, ‘இதுக்குதான் பொம்பளைங்க வேலைய ஆம்பளைங்க செய்யக் கூடாது’ என்றவாறே ஊரில் இருந்து வந்திறங்குவார் வசந்தி.
தன் சகோதரியை பாஸ்கர் உள்ளத்தில் வைத்துத் தாங்குகிறார் என்று அவர் உணர்ந்து வெளிப்படுத்துவதை, இதைவிட அருமையாகச் சொல்லிட முடியாது.

எஸ்.டி.சுப்புலட்சுமி மரணத்தருவாயில் இருக்கையில், அவரது படுக்கைக்கு அருகில் இருக்கும் ஜன்னல் கதவுகள் காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருப்பது பின்னணியில் தெரியும்.
ஜன்னலுக்கு வெளியேயிருந்து அவரது உயிர் பிரிந்தது காட்டப்படும்போது, உள்ளேயிருப்பவர்களின் பிரிவுத் துயரை அது வெளிப்படுத்தும்.

கீதா உடல் நலிவுற்று படிப்படியாக மரணப்படுக்கைக்குச் செல்வது, விஜயகுமாரியின் முகத்தில் பூசப்பட்ட எண்ணெய் படிந்த மேக்கப் மூலமாக உணர்த்தப்படும்.

கீதா உயிரிழந்ததற்கு அடுத்த காட்சியில், தபால்காரர் வசந்தியிடம் ஒரு தந்தியை தருவார். ‘இவர் இருக்குமிடம் ஜெமினிக்கு தெரியாதே’ என்ற எண்ணம் நம்முள் பளிச்சிடுவதற்குள், ரகு ஊர் திரும்பும் தகவல் சொல்லப்படும். இப்படி ரசிகர்களின் கணிப்பைத் தன் திரைக்கதை திறனால் பொய்யாக்கியிருப்பார் ஸ்ரீதர்.

சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு என்று மூன்று ஊர்கள் திரைக்கதையில் இடம்பெற்றும், ஓரிடத்தில் கூட அதனைக் குறிக்கும் பெயர்ப் பலகையை கண்ணில் காட்டியிருக்க மாட்டார்.

கிளைமேக்ஸில் பெங்களூரு நோக்கி பாஸ்கர் வருவதும், வசந்தி-ரகுவின் திருமண ஏற்பாடுகளும் இண்டர்கட்டில் காட்டப்படும். இந்த உத்தி தரும் பதைபதைப்பு அன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் அனுபவித்திராதது.

இத்தனையையும் பார்த்து பார்த்து செய்த ஸ்ரீதர், கீதா வளைகாப்பு வைபவத்தில் பாஸ்கரைத் தவிர வேறு எந்த ஆணையும் கண்ணில் காட்டியிருக்க மாட்டார்.

எத்தனைதான் பெண்கள் மட்டுமே இருக்கும் வீடு என்றாலும், விழாவின்போது மற்றவர்கள் வருவதுதான் இயல்பு. படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

எளிமையான வசனங்கள்!

அடிவயிற்றில் இருந்து குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவதும், அடுக்குமொழி தமிழை அள்ளியிறைப்பதும், கல்யாண பரிசுவில் இராது. வழக்கமாக பேசும் தமிழே மிக எளிமையாகக் கையாளப்பட்டிருக்கும்.

கீதாவை மணந்துகொள்ளுமாறு வசந்தி வற்புறுத்துகையில், ‘நான் ஏன் அதனைச் செய்ய வேண்டும்’ என்று பாஸ்கர் கேட்கையில், அவரது மனதை மாற்றும் வகையில் வசந்தி பேசுவது அருமையான வசனங்களுக்கான உதாரணம்.

அந்த இடத்தில் ஒரு சொல் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்காது.
ஆனாலும், இப்படத்தின் பின்பாதி முழுக்க வசனங்கள் வழக்கமான பேச்சுத் தமிழில் இருந்து உரைநடைக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகிறது.

கிளைமேக்ஸில் ‘அவரது சரித்திரம் முடிந்துவிட்டது’ என்று பாஸ்கரை பற்றி வசந்தி சொல்வதும், காதல் கைகூடாவிட்டால் வாழ்வே பறிபோனதை உணர்த்தும்.

அவநம்பிக்கையை உருவாக்கும் இந்த வார்த்தைகளும் கூட, இன்று பார்க்கையில் தேவையற்றதாகத் தோன்றுகிறது.

வின்சென்டின் அழகியல் பார்வை!

ஒளிப்பதிவில் அழகோடு புதுமையையும் பிரதிபலிப்பது அவசியம். அது, திரைக்கதையை மீறி பொலிவு பெற்றிடக் கூடாது.

இந்த இலக்கணத்துடன், கறுப்பு வெள்ளை படங்களில் ஒளியையும் இருளையும் தரையில் பாதரசத் துளிகளாய் கையாண்டவர்களில் ஒருவர் வின்சென்ட். அவரது பல்வேறு சோதனை முயற்சிகள் இந்த படத்தில் அற்புதமான பலன்களைத் தந்திருக்கும்.

ரயில்வே ஸ்டேஷனில் பாஸ்கரையும் கீதாவையும் வழியனுப்பி விட்டு ஸ்தம்பித்து நிற்கும் வசந்தியின் முகத்தில் ரயில் பெட்டிகளின் நிழல் படிந்து செல்லும் காட்சி அதற்கொரு உதாரணம்.

இதில், சரோஜாதேவிக்கு பின்னாலிருக்கும் விளக்குகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன், தண்டவாளத்துக்கு இணையாக நில்லாமல் குறுக்காக இருப்பது போன்று காட்சிப்படுத்தியிருப்பார்.

அதேபோல, கீதாவை மணந்துகொள்ளுமாறு வசந்தி பாஸ்கரிடம் சொல்லும் காட்சியில், பாஸ்கரின் கால் பகுதியில் இருந்து காட்டப்படும் ஷாட்டில் அவரது பின்புறத்தில் ஜன்னல் சட்டக கம்பிகளின் நிழல் படிந்திருக்கும்.

காதலை மறந்துவிடுமாறு வலியுறுத்துவது சிறைக்குள் அடைபட்ட உணர்வுக்குள் அவரைத் தள்ளுகிறதென்பதை அது உணர்த்தும்.

இப்படத்தில் பெரும்பாலான ஷாட்கள் நகர்வுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும். ஓரறைக்குள் நிகழும் சம்பவமானாலும் சரி, வெளியிடங்களானாலும் சரி, வந்துபோகும் பாத்திரங்களை ‘லபக்’கென்று பிடித்தவாறே நகரும் கேமிரா பார்வை.

‘வாடிக்கை மறந்தது ஏனோ’ பாடலுக்கு முன்னதாக கடற்கரை சாலையில் பாஸ்கர் காத்திருப்பார்.
அவர் எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதைக் காட்ட பின்னோக்கி நகரும் கேமிரா, சைக்கிளில் வரும் வசந்தியைப் பார்த்ததும் அவரும் சைக்கிளை நகர்த்திப் பயணிக்க கூடவே சில நொடிகள் தொடரும்.

பாடலின் முடிவில், வீடு திரும்பும் சரோஜா தேவி சைக்கிளை உள்ளே கொண்டுவந்து நிறுத்துவார். அப்போது, விஜயகுமாரி இரண்டு கப் காபி கோப்பைகளோடு வரும் ஷாட் சைக்கிள் முன்சக்கரத்தோடு சேர்த்துக் காட்டப்படும்.

கிளைமேக்ஸில் பாஸ்கர் தன் மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு புல்லட்டில் செல்லும் காட்சியில், அவர் தாறுமாறாக வண்டியோட்டுகிறார் என்பதை வழக்கத்திற்கு மாறான கேமிரா கோணங்கள், நகர்வு மூலமாக உணர்த்தியிருப்பார் வின்சென்ட்.

கண்டிப்பாக, இக்காட்சி பகலில்தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சாலை காட்சிகள் ‘பேக் புரொஜக்‌ஷன்’ முறையில் ஓட, அதற்கேற்றவாறு ஸ்டூடியோவில் ஜெமினிக்கு லைட்டிங் செய்து அசத்தியிருப்பார்.

இது போன்ற மெனக்கெடல் படம் முழுக்கப் படர்ந்திருக்கும். இந்த உழைப்புதான், ஸ்ரீதரையும் வின்சென்டையும் நெடுநாட்கள் சேர்ந்து பயணிக்க வைத்தது.

மலையாளப் படவுலகில் மினிமலிசம் மிளிர, வின்சென்டின் ஒளிப்பதிவுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது.

கற்கண்டாய் இனிக்கும் இசை!

கல்யாண பரிசுவின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தபோதும், அவற்றில் முதலாவதாக இருப்பது இசை தான்.

இப்படத்தில் எல்லா பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமே எழுதியிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு.

‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட’ ஆகியன இன்பமான சூழலைப் பிரதிபலிக்கும்.

‘ஆசையினாலே மனம்’ பாடலில் பி.சுசீலாவின் கொஞ்சும் தமிழுக்கு எதிர்வினையாக ‘ஓ ஐ சீ…’ என்பது போன்ற வார்த்தைகளை மட்டுமே ஏ.எம்.ராஜா உதிர்த்தது ரசிகர்களை உன்மத்தம் கொள்ள வைத்தது.

‘மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும் வளையல் இது வாழ்வு தரும் வளையல்’ என்று வாழ்த்துப்பாவைத் தொடர்ந்து ஒலிக்கும் ‘அக்காவுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’ பாடலும் கூட இதே ரகம் தான்.

தங்கவேலுவும் சரோஜாவும் பாடுவதாக அமைந்த ‘டீ.. டீ..டீ. வாங்க டீ.. டீ.. டீ.. பாட்டாளி தோழருக்கும் பல தொழிலாளர்களுக்கும் கூட்டாளி யாயிருக்கும் டீ..’ பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

அவர் பெயர் டைட்டிலில் இல்லை என்பதை வைத்து இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. கல்யாண பரிசு இசைத்தட்டில் இடம்பெற்ற இப்பாடல், படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

‘உன்னைக் கண்டு நீயாடா’ பாடல் டெம்போ குறைந்து சோகமாக ஒலிக்கும்போது, ஒரு தீபாவளி முடிந்து அடுத்த தீபாவளி வரும்போது பாஸ்கரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பறிபோனது வெளிப்படும்.

‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ என்று சரோஜாதேவி பாடுவதும், கிளைமேக்ஸில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ என்று ஜெமினி பாடுவதும் நம் மனதை அரிக்கும் ரகத்தில் அமைந்திருக்கும்.

தமிழ் திரையிசை சோகப் பாடல்களில் இவற்றுக்குத் தனியிடம் உண்டு.
பாடகராக இருந்த ஏ.எம்.ராஜா இப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘தேனிலவு’, ‘விடிவெள்ளி’ உள்ளிட்ட சில படங்களோடு ஸ்ரீதருடனான அவரது பங்களிப்பு முடிந்துபோனது தமிழ் திரையுலகத்துக்குப் பேரிழப்பு.

கற்கண்டாய் இனிக்கும் ‘கல்யாண பரிசு’ பாடல்கள் அதனை நமக்கு உணர்த்துகின்றன.
இயக்குனருக்கு கைத்தட்டல்!

எம்ஜிஆர், சிவாஜி முதல் நகைச்சுவை நடிகர், நடிகையர் வரை திரையில் தோன்றுபவர்களே கைத்தட்டல்களைப் பரிசாகப் பெற்ற நிலையில், ஒரு இயக்குனரின் பெயர் திரையில் தோன்றும்போது அத்தகைய வரவேற்பு கிடைக்கத் தொடக்கம் ஏற்படுத்தித் தந்தவர் ஸ்ரீதர்.

‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ போன்ற நகைச்சுவை படங்களை இயக்கினாலும்கூட, ஸ்ரீதரின் காதல், குடும்பச் சித்திரங்களே அவரது அடையாளமாகிப் போயின.

தனது முக்கோணக் கதை டெம்ப்ளேட்டை ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தின் வெற்றிக்குப் பின்னும் அவர் தொடர்ந்தார். அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘தந்து விட்டேன் காதல்’ கூட அந்த ரகத்தில் அமைந்ததுதான்.

பெருகிய வட்டங்கள்!

‘கல்யாண பரிசு’ தெலுங்கில் ‘பெல்லி கனுகா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘நஸ்ரானா’ என்ற பெயரிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

தெலுங்கில் நாகேஸ்வரராவும், தமிழில் அவர் நடித்த பாத்திரத்தில் ஜக்கையாவும் நடித்திருந்தனர். இந்தியில் ராஜ்கபூரும், தமிழில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை ஜெமினி கணேசனும் ஏற்றனர்.
1975இல் இப்படம் ‘சம்மணம்’ என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் ஆனது. இதில் பிரேம் நசீர், மது, ஜெயபாரதி, சுஜாதா ஆகியோர் நடித்திருந்தனர்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பின், 1982இல் இதே முக்கோணக் காதல் கதையைத் தெலுங்கில் ‘தேவதா’ என்ற பெயரில் இயக்கினார் கே.ராகவேந்திர ராவ்.
பின்னர் இந்தியில் ‘தோபா’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் செய்தார்.

இறுதியாக, இதே கதை தொடங்கிய தமிழில் ‘தெய்வப் பிறவி’ என்ற பெயரில் மீண்டும் தயாரானது. இதில் மோகன், ராதிகா, ஊர்வசி ஆகியோர் நடித்தனர்.

காதல் திரைப்படங்கள் குறித்த வரிசையொன்றைத் தயார் செய்தால், அதில் ‘கல்யாண பரிசு’வுக்குக் கட்டாயம் இடமுண்டு.

கிட்டத்தட்ட 60, 70 ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகைக் காதல் ஆக்கிரமித்து வருகிறது.
அதனைத் தம்முடையதாக எண்ணிக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி யதார்த்தத்தில் காதலுக்கு விரோதமாகச் செயலாற்றி வருகிறது என்பது ஆகப்பெரிய முரண்!
**
படத்தின் பெயர்: கல்யாண பரிசு, கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர், பாடல்கள்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இசை: ஏ.எம்.ராஜா, கலை இயக்கம்: கங்கா, உடை அலங்காரம்: பி.ராமகிருஷ்ணன்,

மேக்கப்: பீதாம்பரம், ஒளிப்பதிவு இயக்குனர்: ஏ.வின்சென்ட், ஒளிப்பதிவு: பி.என்.சுந்தரம், ஒலிப்பதிவு: டி.எஸ்.கிருஷ்ணா, பாடல்கள் ஒலிப்பதிவு: ஏ.கிருஷ்ணன்

படத்தொகுப்பு: என்.எம்.சங்கர், தயாரிப்பு: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.கோவிந்தராஜன், ஸ்ரீதர், ஸ்டூடியோ: வாஹினி, விஜயா

நடிப்பு: ஜெமினி கணேசன், பி.சரோஜாதேவி, விஜயகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, தங்கவேலு, எம்.சரோஜா, ஏ,நாகேஸ்வர ராவ், எம்.என்.நம்பியார், மாஸ்டர் பாபு மற்றும் பலர்.

– உதய் பாடகலிங்கம்
02.01.2022  2 : 05 P.M

You might also like