எம்.ஜி.ஆர் பாப்புலராக்கிய பிச்சாவரம் சுற்றுலா தளம்!

எம்.ஜி.ஆர். இதயக்கனி படத்தின் மூலம் பாப்புலராக்கிய 2300 ஏக்கர் பரப்பளவுள்ள மிதக்கும் காட்டை, கை, கால் உளைச்சல் இல்லாமல் கன்னாபின்னாவென்று மூச்சிரைக்காமல் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால், முதலில் பஸ் பிடியுங்கள் பிச்சாவரத்திற்கு.

பிச்சாவரத்திற்கு சிதம்பரம் போய் போக வேண்டும். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ டவுன் பஸ்தான். காய்கறி மூட்டை மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள். அது அலர்ஜி என்பவர்களுக்கு 150 ரூபாயில் டாக்ஸி கிடைக்கிறது.

போகும் வழியில் வறட்சியுடன் நீண்டு கொண்டிருக்கும் சின்னச் சின்னக் கிராமங்களைக் கடந்தால், கிட்டத்தட்ட இரண்டு கி.மீ முன்னால் மெல்ல கடல் காற்றுடன், பசுமையும், பனை மரங்களும், ‘கொஞ்ச தூரத்தில்தான் டூரிஸ்ட் ஸ்பாட்’ என்று வரவேற்கின்றன.

பிச்சாவரத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினால், சிமெண்ட் வர்ணம் பூசப்பட்ட மெகா யானை உருவம் (சிற்பம்?), நிறைய காளான்கள் முளைத்த மாதிரி நிழல் குடைகள், ஊஞ்சல்கள், தமிழ்நாடு டூரிஸம்காரர்களின் ரெஸ்டாரண்ட்,

அப்புறம் போட்டிங் ஹவுஸ் தவிர்த்து மற்றபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தண்ணீர் தேசம்தான். கொஞ்சம் வித்யாசமான தண்ணீர் தேசம் என்கிறார்கள் ஜியாக்ரபியில்.

பேக் வாட்டர்ஸ் (Back water) என்று ஆரம்பித்து டெக்னிக்கலாக பிச்சாவரத்தைப் பற்றி சொன்னதைக் கேட்டபோது, பிச்சாவரத்தை ஒரு பாங்க் அக்கவுண்ட் என்றழைக்கலாம் போல. அதுவும் கடலுடைய பாங்க் அக்கவுண்ட்.

கடல் மட்டம் ஏறி இறங்குவதற்கேற்பவும், அவைகளின் வேகத்தைப் பொறுத்தும், கடற்கரையோரப் பிரதேசங்களின் சில இடங்களில், இந்த மாதிரி நீர்த்தேக்கங்கள் ஏற்படுகின்றனவாம்.

உள்ளூர் படகுக்காரர்கள் சொல்வதைப் பார்த்தால் ஒவ்வொரு வாரமும், அமாவாசை, பௌர்ணமியன்றும் இந்த கடல் பாங்க் அக்கவுண்ட் ஏறி இறங்குகிறது.

போட்டிங் ஹவுசை தமிழ்நாடு டூரிஸம்காரர்கள்தான் நடத்துகிறார்கள். ஐந்து மணி நேரத்தில் கடல் வரைக்கும் போய் விடலாம். போட் போகாத இடங்களுக்கும் போக விரும்புகிறவர்களுக்குப் பக்கத்து கிராமத்தில் நிறைய மீனவர் தோணிகள் கிடைக்கின்றன. அதிலும் போய் வாலாம்.

நாம் போன போட்காரர் பிச்சாவரத்தில் கிட்டத்தட்ட நாற்பது வருஷமாயிருப்பவர்.

இப்படிப்பட்டவர்களை அழைத்துப் போதும்போது ஒரு வசதி என்னவென்றால், நாம் என்னென்ன கேட்போம் என்பதை அனுமானித்து அவர்களாகவே சொல்ல ஆரம்பித்து விடுவதுதான்.

மெல்ல கைகளை நீர்ப்பரப்பில் உரச் விட்டுக் கொண்டு (அதென்னவோ? எப்போது படகில் ஏறி உட்கார்ந்தாலும் கைகள் தன்னையறியாமலேயே நீரைக்கோதி விளையாடுகின்றன) எங்கே தண்ணீர் மட்டம் அதிகம், எங்கே மேடு, எங்கே தரைதட்டும் என்று லாவகமாக துடுப்பு போட்டவர் சொன்ன விஷயங்களைக் கேட்க ஆரம்பித்தோம்.

முதலில் ஒரு அரைமணி நேரப் பயணத்தில் காடு, கீடு எதுவும் கிடையாது வெறும் தண்ணீர் தான் “கொஞ்சம் பொறுங்க என்றார் போட்காரர். “கன்னித்தீவு அதை கேட்டிருக்கீங்கள்ல. அது மாதிரி பிச்சாவரமும் ஒரு கன்னித் தீவுதான்.

கொஞ்சம் தவறினால் எப்படி வந்தோம். எப்படிப் போவது என்கிற பிரச்னை வந்து, தொலைந்து போவீர்கள். போட்காரர் சொல்கிறபடி நம்மைத் தொலைக்கக்கூடிய தீவுகள் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேல் பிச்சாவரத்திலிருக்கின்றன.

அப்புறம் ஏகப்பட்ட கால்வாய்கள். நீரோட்டம் இல்லையென்றாலும், ஆழம் ஏழு அடியிலிருந்து ஆரம்பித்து 10, 12 என்று மையத்தில் 20 அடி வரை போகுமாம். உப்புக் கரிக்கும் நீர், கடல் தண்ணி தான் என்றார் போட்காரர்.

கிட்டத்தட்ட அரைமணி நேரப் பயணத்துக்கப்புறம் மெல்ல மரங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன.

வரிசையாய் ரேஷன் க்யூ மாதிரி இடம் விடாமல் வேலிபோட்டுக் கொண்டு அடர்த்தியாகக் காணப்படும் அந்த மரங்களின் தோற்றத்தில் ஒரு வித்யாசம் தெரிகிறது. ஆக்டோபஸ் கைகளை விரிக்கிற மாதிரி ஏகப்பட்ட வேர்களை விட்டு ‘மிதந்து’ கொண்டிருக்கிறது.

சினிமாவில் டூயட் சீனில் சுற்றிப் பிடித்து ஓடி வருகிற மாதிரியான ஒரு உருளை லெவல் உடம்பில்லாமல், இந்த மரங்களுக்கு வேர்தான் உடம்பே, கயிற்றைத் திரித்து வைத்த மாதிரி நீர் மட்டத்திற்கும் மேலே ஒரு அடிக்கு வேர்கள் தெரிகின்றன.

பச்சையாய் பெரிய இலைகளுடன், ட்யூப் கட்டி தொங்க விட்ட மாதிரி காய்களுடன் காட்சியளிக்கும் இந்த மரங்களை, மரம் சார்ந்த காடுகளை ‘மாங்குரோவ் பாரஸ்ட்’ என்கிறார்கள்.

இந்த மாங்குரோவ் காடுகள் உலகத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக பிச்சாவரத்தில்தான் ரொம்பவும் செழுமையாக ஹெல்த்தியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு விஷயம் ‘கடல் அரிப்பை’த் தடுப்பதற்கு இந்த ஹெல்த்தியான மாங்குரோவ் காடுகள் ரொம்ப அவசியம் என்பது தான்.

இரண்டு பக்கமும் அடர்ந்து வெளியே என்ன என்று தெரியாத அளவுக்கிருக்கும் பகுதிக்குள் படகு போகிறது. நிறைய பறவைகள் உள்ளே உட்கார்ந்திருக்கின்றன உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தைரியமாய்.

கொஞ்சம் ஆழம் குறைச்சலாயிருக்கும் பகுதிகளில் சேறும் சகதியுமாய் தென்படுகின்றன.

இந்த மாதிரி சதுப்பு நிலங்கள்தான் இந்த மாங்குரோவ் காடுகளுக்கு ரொம்ப ஊட்டத்தை அளிப்பதாகச் சொல்கிறார்கள். சுந்தரவனக் காடுகள் என்று புவியியலில் படித்ததையும் ஞாபகப்படுத்துகிறார்கள். உண்மையிலேயே சுந்தரவனம்தான்.

“அது தெரிஞ்சு தான் எம்.ஜி.ஆர்.  (சின்னவர்) அந்தக் காலத்திலேயே பிச்சாவரத்தை படம்பிடிச்சுக் காண்பிச்சுட்டாரு” என்கிறார் போட்காரர். எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி யிலிருந்து, ஏகப்பட்ட படங்கள் பிச்சாவரத்தை ஸ்க்ரீனுக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

கார் ரேஸ், பைக் ரேஸ் மாதிரி ஒரு படகு ரேஸ் நடத்தக்கூடிய அளவுக்கு வளைவு நெளிவுகளுடன், வழி மறந்து போகக்கூடிய பாதைகளுடன் இருக்கும் பிச்சாவரத்தில், இப்போதைக்குப் படகுப் போட்டிகள் சினிமா ஷூட்டிங்கின் போது மட்டும்தான் நடத்தப்படுகின்றன.

அந்த மாதிரி ஒரு விஷயத்தை தமிழ்நாடு டூரிஸம்காரர்கள் தொடர்ந்து நடத்த யோசித்தால், பிச்சாவரம் இன்னும் வசதியாக வர வாய்ப்பிருக்கிறது.

இப்படி குட்டி குட்டித் தீவுகளுக்குள் புகுந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பயணம் செய்தால் கடலுக்குப் பக்கத்தில் வந்துவிடுகிறோம். கடலையும், நாம் கடந்து வந்த பிச்சாவரத்தையும் ஒரு பெரிய மணற்பரப்பு, மரங்களுடன் பிரிக்கிறது. ஒரே ஒரு மைல் நடந்தால் கடலுக்கருகில் சென்று வரலாம். அப்புறம் பிச்சாவரம் ரிட்டர்ன்.

இவ்வளவு தூரத்தையும் போட்காரர் துடுப்பு வலித்தபடியே வந்ததைப் பார்க்கும்போது நமக்கே வலித்தது. ஸ்டீமர் போட் எல்லாம் கிடையாதா என்று கேட்டோம்.

“நான் கன்னித்தீவுன்னு சொன்னேன்ல, அதுக்கு இன்னொரு காரணம் இதுதான்” என்று புதிர் போட்டுவிட்டு,

“இந்த ‘மாங்குரோவி’ மரங்களுக்கு வேர்கள் தான் ரொம்ப முக்கியம். அதற்கு மட்டுமல்ல. இங்கு நீருக்கடியில் வாழும் இறால் மீன்களுக்கும் அவை ரொம்ப முக்கியம் அதனால் டீசல் போட்கள், ஸ்டீமர்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

டீசல் புகை வேர்களை பாதிக்குமில்லையா? என்றார் உடன் வந்தவர்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் பிச்சாவரம் டூரிஸ்ட் ஸ்பாட் மட்டும் கிடையாது என்ற விவரம் தெரிய வருகிறது.

பக்கத்திலேயே மரைன் காலேஜ் ஒன்றிருக்கிறது. கடல் அரிப்பைத் தடுக்க இந்த வகைத் தாவரங்கள் (மரங்கள்!) எப்படி உதவுகின்றன என்ற ஆராய்ச்சிக்காகவும், இங்கே வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் நிறைய மாணவர்கள் வந்து போகிறார்களாம்.

தவிர இங்கே காணப்படும் ஜாலோபோராவும் அசினியா குடும்பத்துத் தாவரங்களும் பாட்டனி மாணவர்களை இழுக்கிறது.

தவிர எம்.எஸ். சுவாமிநாதன் பவுன்டேஷனிலிருந்தும் இங்கே ரிசர்ச் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

திரும்பும் வழியில், சாயங்காலம் ஆகிவிட்டபடியால், மெல்ல மெல்ல பறவைகள் மரங்களில் தஞ்சம் புக ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

குட்டி வேடந்தாங்கல் போலவும் பிச்சாவரம் உதவுகிறதை நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது.

ஒரு டூரிஸ்ட், பிக்னிக் ஸ்பாட் என்ற அறிமுகத்துடன் நாம் நுழையும் பிச்சாவரத்திற்கு எத்தனை முகங்கள் இருக்கிறது!

வரும் வழியில் தண்ணீருக்கு நடுவே, தமிழ்நாடு டூரிஸம்காரர்களின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. முகப்பில் நாலைந்து போட்களுடன் கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபாயிலிருந்து ரூம்கள் கிடைக்கின்றன.

உணவு மட்டும் ஆர்டர் கொடுத்தால் படகில் போய் கரையிலிருக்கும் ரெஸ்டாரண்ட்டிலிருந்து கொண்டு வருகிறார்கள்.

சத்தங்களிலிருந்து ஒதுங்கி ஒரு நாளாவது அந்த கெஸ்ட் ஹவுஸில் கழிக்கலாம். நாம் போன போனது நிறைய ஸ்கூல் பிள்ளைகள் வந்திருந்தார்கள்.

கடலூர். சிதம்பரம் பாண்டிச்சேரி வட்டாரத்தில் பிச்சாவரம் ஒரு பிக்னிக் ‘ஸ்பாட் மாதிரி நினைத்தபோது வந்து போகிறார்கள்.

நீர்ப்பகுதி இவ்வளவு செழுமையாக இருந்தாலும், கரையென்னவோ ஒரு மாதிரி வெறுமையாகத்தான் காட்சியளிக்கிறது.

ஏதாவது கார்டன் ஏற்படுத்தி கரையையும் பசுமையாக்கினால் பிச்சாவரம் இன்னும் மெருகேற வாய்ப்பிருக்கிறது.

ஒரு நல்ல வாட்டர் வேர்ல்ட் படம் பார்த்த திருப்தி கொடுக்கும் பிச்சாவரத்திற்குப் போய் அதன் குட்டி குட்டிக் கன்னித் தீவுகளில் உங்கள் டென்ஷனைக் கொஞ்சம் தொலைத்துவிட்டு வாருங்கள்.

– நன்றி: குமரகுருபரன் எழுதிய ‘பயணிகள் கவனிக்கவும்’ நூலிலிருந்து…

You might also like