இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை பாதிக்கும்!

– பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை

பலமுறை உருமாறியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியுள்ளது.

நம் நாட்டில் இதுவரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது பரவியுள்ளது.

டெல்லியில் மிகவும் அதிகபட்சமாக 238 பேரும், மஹாராஷ்டிராவில் 167 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குஜராத்தில் 73, கேரளாவில் 65, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் “டெல்டா வகையை விட ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவக் கூடியது. ஒமைக்ரான் பாதிப்பு, 2 – 3 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது” என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தாக்கிய இரண்டாவது அலை, பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மூன்றாவது அலை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்தியாவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி,

“இதற்கு முந்தைய அலைகள் மற்றும் தற்போதுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது, இந்தியாவில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும். தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

டெல்டாவை பின்தள்ளி, ஒமிக்ரான் முழுமையாக ஆக்கிரமிக்க துவங்கினால், தினசரி பாதிப்பு கடுமையாக உயரும். அடுத்த சில நாட்களில் இதற்கு சாத்தியம் உள்ளது.

ஜனவரியில் தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்து, பிப்ரவரியில் உச்சத்தை அடையும். ஒரே ஆறுதல், இரண்டாவது அலையைப் போல், மூன்றாவது அலையில் பாதிப்பு நீண்ட காலம் இருக்காது.

அதிக அளவில் ஒமிக்ரான் தொற்று பரவினாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். தடுப்பூசி போட்டவர்களையும் ஒமிக்ரான் தாக்கும்; ஆனால், பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கும்.

இந்தியாவில் நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படும். அதே நேரத்தில், தென் ஆப்ரிக்காவில் உள்ளது போலவே, அதன் வீரியம் சற்று குறைவாகவே இருக்கும். தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தில் இருப்பர்.

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, பாதிப்பை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. முந்தைய அலைகளை ஏற்படுத்திய வைரஸ்களை விட, ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது;

அதே நேரத்தில் அதிக வேகத்தில் பலருக்கும் பரவுகிறது. தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வகை வைரசை பின்னுக்கு தள்ளி, ஒமிக்ரான் அதிகளவில் பரவி வருவது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30.12.2021  2 : 30 P.M

You might also like