– அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஆகிய நாடுகள் ஒமிக்ரான் வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா தொடங்கி 21 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது. நாடு முழுவதும் 653 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 167 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 165 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3-வது இடத்தில் கேரளா மாநிலத்தில் 57 பேருக்கும், தெலங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக இருக்கிறது.
இதேபோல் கர்நாடகா – 31; மத்தியப் பிரதேசம் – 9, மேற்கு வங்கம் – 6; ஹரியானா – 4; ஒடிஷா – 8; ஆந்திரா – 6; ஜம்மு காஷ்மீர் – 3; உத்தரப்பிரதேசம்-2; சண்டிகர்-3; லடாக்-1 உத்தரகாண்ட்-4. ஹிமாச்சல் பிரதேசம் -1, மணிப்பூர் -1, கோவா -1 என பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 186 பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கு கீழ் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.