தாயின் அன்பை மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது!

– கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

குழந்தையின் பராமரிப்பு தொடர்பான வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில்,

“இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை, அதன் தாயின் பராமரிப்பில் உள்ளது.

ஆனால், தன்னிடம் போதிய வசதி உள்ளதாகவும், நன்கு படித்துள்ளதாகவும், அதனால் தாயிடம் இருப்பதைவிட குழந்தை தன்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் என, குழந்தையின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிந்த பின் இவர் மறுமணம் செய்துள்ளார். குழந்தையை நன்கு கவனித்துக் கொள்வதாக மாற்றாந்தாயும் கூறியுள்ளார்.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் அளிக்கும் அன்பு, பாசத்தை, மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது.

அதனால் குழந்தை அதன் தாயிடமே வளர வேண்டும். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.

வழக்கு தொடர்ந்ததற்காக குழந்தையின் தந்தை 50 ஆயிரம் ரூபாயை குழந்தைக்கு அளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அளிக்காவிட்டால், குழந்தையை பார்க்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

27.12.2021 11 : 50 A.M

You might also like