மக்கள் திலகம் குறித்து மலைப்பான தகவல்கள்!
பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 34 ஆண்டுகள் – ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மாண்புகளை அவரது நினைவுநாளில் பசுமையான நினைவுகளுடன் மூன்று பேர் பகிர்ந்திருக்கிறார்கள்.
1.பேராசிரியர் ராஜேஸ்வரி
புரட்சித் தலைவரின் ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையைத் தீட்டியவர் ராஜேஸ்வரி.
அவர் சொல்கிறார்:
“எல்லா விஷயங்களிலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் எம்.ஜி.ஆர்.
புதிய தொழில் நுட்பம் அறிமுகமானால், அதனை ஆர்வத்துடன் கற்றுக்கொள்பவர்.
தொழிலில் அவரது ஈடுபாட்டுக்கு இரண்டு சம்பவங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
எந்த வேடம் ஏற்றாலும், அந்த பாத்திரமாகவே மாறி விடுவார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருந்தார். டூப் நடிகர்களை வைத்து லாங்ஷாட் எடுத்து, குளோசப்பில் மட்டும் முகம் காட்டி விட்டு போயிருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் நிஜமாகவே ரிக்ஷா ஓட்ட பயிற்சி எடுத்தார்.
சத்யா ஸ்டூடியோவில் பயிற்சி நடந்தது. ஸ்டுடியோவை சுற்றி சுற்றி வந்தார். உதவியாளர்கள் அசந்த நேரத்தில் மெயின் ரோட்டுக்கு வந்து விட்டார்.
ஒரு மணி நேரம் சாலைகளில் ரிக்ஷா ஓட்டினார். கரடு முரடான பாதைகளில் பயணித்தார்.
ஸ்டூடியோவில் தலைவரைக் காணாததால் உதவியாளர்கள் பதறிப்போனார்கள்.
சாவகாசமாக சென்னையை ரவுண்ட் அடித்து விட்டு எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நுழைந்தார்.
மேக்கப் போட்டிருந்ததால், சாலையில் சென்ற அவரை யாரும் கவனிக்கவில்லை.
இன்னொரு சம்பவம்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் கிளைமாக்சில், அவர் ஸ்கேட்டிங் செய்து கொண்டு எதிரிகளுடன் மோத வேண்டும். ஏற்கனவே ‘அன்பே வா’ படத்தில் ஸ்கேட்டிங் செய்திருப்பார்.
அது, சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும்.
ஆனால், இந்தப் படத்தில் ஸ்கேட்டிங் காட்சி பல நிமிடம் இடம் பெறும். எனவே, தனது ராமவரம் தோட்டத்து மாடியில் நிஜமாகவே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டார். அந்தத் தடங்கள் இன்னும் அங்கே உள்ளன.
2.லேனா தமிழ்வாணன்
பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணனின் மகன். எம்.ஜி.ஆருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘’எனது அப்பா தமிழ்வாணனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் நல்ல நட்பு கிடையாது.
தனது பத்திரிகையில் எம்.ஜி.ஆர். குறித்து எதிர்மறையாக எழுதியதால் பகைமை இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
எனது தம்பி ரவி தமிழ்வாணனின் திருமணத்துக்கு எம்.ஜி.ஆரை அழைக்க விரும்பினேன்.
பலர் நகைத்தார்கள்.
‘’தமிழ்வாணன் வீட்டுக் கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர் எப்படி வருவார்?’’ என கூறினார். அவர் அப்போது முதலமைச்சராக இருந்தார். அறிவுடை நம்பி என்ற எம்.எல்.சி. எனக்கு அறிமுகம். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
தோட்டத்துக்கு அழைத்துப் போனார். எம்.ஜி.ஆரைச் சந்தித்துச் சொன்னேன். வருவதாக ஒப்புக்கொண்டார். சொன்னபடி வந்தார்.
அங்கு நடந்த ஒரு முக்கிய விஷயம்.
ஒலிம்பிக் பாஸ்கரன் அப்போது, பதக்கம் வாங்கி வந்திருந்த நேரம். அரசு சார்பில் அவருக்கு வீடு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால் வீடு ஒதுக்கவில்லை. கல்யாணத்துக்கு வந்த பாஸ்கரன் இந்தத் தகவலை என்னிடம் கூறினார்.
நான் மேடையில் இருந்த எம்.ஜி.ஆர். காதில் விஷயத்தைச் சொன்னேன். அந்த மேடையிலேயே பாஸ்கரனுக்கு வீடு ஒதுக்கி உத்தரவிட்டார் எம்ஜிஆர்.
3.கவிஞர் முத்துலிங்கம்
‘தங்கத்தில் முகம் எடுத்து’, ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்’, ’அன்புக்கு நான் அடிமை’ போன்ற பல பாடல்களை, மக்கள் திலகத்துக்கு சமர்ப்பணம் செய்தவர் முத்துலிங்கம்.
எம்.ஜி.ஆர். குறித்து அவர் சிலாகித்துச் சொன்ன சில தகவல்கள்.
“தலைவர் தனது வாழ்க்கையில் மூன்று முறை சருக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. மூன்றில் இருந்தும் மீண்டு வந்தார்.
முதல் சம்பவம் – கும்பகோணத்தில் ஒரு நாடகம்.
குண்டுமணி, தலைவரைத் தூக்கி கீழே போடும் காட்சி. நிஜமாகவே தூக்கிப்போட, எம்ஜிஆர் தொடையில் முறிவு. எதிரிகளுக்குக் கொண்டாட்டம். ”எம்.ஜி.ஆரால் இனி சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. அவரது மார்க்கெட் அவுட்” என பிரச்சாரம் செய்தார்கள்.
முற்றிலும் குணமாகி, முன்னைக் காட்டிலும் வேகமாக செயல்பட்டார். அப்போது வெளிவந்த ‘பாக்தாத் திருடன்’ அதற்கு உதாரணம்.
இரண்டாவது நிகழ்வு – துப்பாக்கி சூடு.
தொண்டையில் குண்டு பாய்ந்தது. தமிழகம் பதறிப்போக, வழக்கம் போல் எதிர்ப்பாளர்கள் விமர்சனம் செய்தார்கள்.
’’எம்.ஜி.ஆரின் குரல் போய் விட்டது. டப்பிங் குரலில் தான் அவரது படங்கள் வரும். மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரின் சினிமா சகாப்தம் முடிந்து விட்டது’’ என்றார்கள். ஆனால், குணமடைந்து சொந்தக் குரலில் பேசினார்.
அதன் பின் வந்த அவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதோடு, வசூலிலும் சக்கைப் போடு போட்டது.
மூன்றாவது சம்பவம் – தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட நாள்.
அப்போது எதிர்க்கட்சிகளுடன் ஆளுங்கட்சியும் சேர்ந்து கோரஸ் பாடின.
‘’திமுகவில் இருந்து எம்.ஜி.ரை தூக்கி எறிந்து விட்டார்கள். அவருக்கு இனி ரசிகர் பட்டாளம் இருக்காது. அவரது படங்கள் இனி ஓடாது.’’ என்றார்கள்.
அதன் பின் வந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியை உலகம் அறியும்.
எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
12 லட்சம் ரூபாய். அந்தப் பணத்தின் இன்றைய மதிப்பு – 120 கோடி ரூபாய்.
– பி.எம்.எம்.