(தமிழ்ச் சிறுகதை உலகில் சிகரம் தொட்ட புதுமைப்பித்தன் அவருடைய மனைவி கமலாவுக்கு எழுதிய அன்பைப் பொழியும் கடிதம்)
“எனது கட்டிக்கரும்பான கண்ணாளுக்கு,
இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தினங்களாகவே எதிர்பார்த்து, எதிர்பார்த்து வந்ததினால் அதை வாசிக்க ரொம்ப ஆவல்.
உன் மனச்சுமையையும், சங்கடத்தையும் கண்டு மனம் கலங்கி விட்டது…
உனக்கு அங்கு இருக்கும் நிலைமையும், சுற்றியுள்ளோர் பிடுங்கித் தின்பது போலப் பேசுவதும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக்கொண்டுதான் வருகிறேன்…
நீ எதற்கும் கோபப்பட்டுக் கொண்டு (அங்கே) தனி வீடு பார்த்து இருக்க வேண்டியதில்லை. கண்ணா இந்த வார்த்தைகளை எழுதும்போது உனக்கு நேர்ந்த அவமானம் எனக்கும் என்றுதான் நினைத்து எழுதுகிறேன்.
மனசைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதே. இதுவரை சுற்றுப்புறக் கடன்கள் இருந்ததைத் தீர்த்து வந்தேன். இங்கு வந்த பிற்பாடாவது கவலை இல்லாமல் நீ இருக்க வேண்டாமா? அதுதான் என் ஆசை, கனவு எல்லாம்.
உனக்குத் தூக்கம் வராததைப் போலத்தான் எனக்கும். இவ்வளவு வேலைக்கப்புறமும் மனசு உனது கஷ்டத்தில் சுற்றிச் சுற்றி விழுந்து கொண்டே கிடக்கிறது…
ஐந்நூறு மைலுக்கு அப்பால் இருந்தாலும் எனது கைத்தாங்குதலில் இருக்கிறோம் என்ற தெம்பு ஏற்பட்டால், உனக்கு இந்த மனச் சங்கடங்கள் ஜாஸ்தியாகாமல் குறைத்துக்கொள்ள முடியும்.
மறுபடியும் நாளைக்குக் கடிதம் எழுதுகிறேன்.
ஆயிரம் முத்தங்கள்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி.
(புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாச்சலம்)
(நன்றி: கண்மணி கமலாவுக்கு-புதுமைப்பித்தன் கடிதங்கள் தொகுப்பு, சாந்தி பிரசுரம். தொகுப்பு-இளையபாரதி)