மனித உடலை மையப்படுத்தி எழும் மதப்பிரச்சனைகள்!

சமீபத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைக்குள்ளான ‘ஆன்டி இண்டியன்’ படத்தில் இறந்துபோன மனிதனின் உடலை வைத்து மதப் பிரச்சனை நடப்பதாக காண்பிக்கப்பட்டு இருந்தது.

‘பிணத்துக்கு யாராவது மதச் சாயம் பூசுவார்களா? தங்கள் முறைப்படிதான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என அடித்துக் கொள்வார்களா?’ என சிலர் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். சமீபத்தில் இந்து மதத்தில்இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, அபுபக்கர் சித்தீக் ஜனாஸா என பெயர் வைத்துக்கொண்டார்.

அண்மையில் அவர் மரணமடைந்தார். அவரது உடலை தங்கள் மதப்படியே இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்வோம் என இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே பிரச்சினை.

அகில இந்திய அளவில் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை ஒருவரின் மரணத்தின்போதே இதுபோன்ற பிரச்சினை வந்தது.

அவர் – பர்வீன் பாபி.

1970 – 80களில் இந்தித் திரையுலகை, தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டவர். 1973 ஆம் ஆண்டில் ‘சரித்திரா’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘தீவார்’, ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘நமக் ஹலால்’, ‘சுஹாக்’ மற்றும் ‘ஷான்’ போன்ற பல படங்களில் கவர்ச்சியாக நடித்தவர்.

கவர்ச்சி நடிகை ஜீனத் அமனைவிட அதிக சம்பளம் பெறுபவராக இருந்தார்.

பிரபல ஆங்கில இதழான “டைம்” பத்திரிகையின் அட்டையில் தோன்றிய முதல் இந்தியர் பர்வீன் பாபிதான். அந்த காலகட்டத்தில் டாப் ஹீரோவாக இருந்த அமிதாப்புடன் 12 படங்களில் நடித்தவர். “இராடாக்குப்” என்ற படத்துடன் திரையுலகைவிட்டு விடைபெற்றார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கு சென்ற பாபி, சில காலம் கழித்து மீண்டும் தாயகம் திரும்பினார்.

திருமணம் என்கிற அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். கபீர் பேடி, அமிதாப் டேனி டென்சோங்கா ஆகியோருடன் ஒவ்வொரு காலத்தில் இணைத்துப் பேசப்பட்டார். பிறகு, மகேஷ்பட்.

இடையில் சில பரபரப்புகளைக் கிளப்பினார் பாபி.

“அமெரிக்க அரசாங்கம் என்னைக் கொல்ல முயற்சிக்கிறது”
“சி.ஐ.ஏ., கே.ஜி.பி. போன்ற உளவு நிறுவனங்கள் என்னை கண்காணிக்கின்றன”
“நடிகர் அமிதாப் ஒரு சர்வதேச டான்”

இதனால், பர்வீன் பாபியின் மனநிலை குழம்பிப் போயிருப்பதாகக் கூறினார்கள்.

ஒரு கட்டத்தில், பொது இடத்தில் பர்வீன் பாபியை யாரும் பார்க்க முடியவில்லை.

மும்பையின் ஜூஹூ பகுதியில் இருந்த தனது அப்பார்ட்மெண்ட் வீட்டிலேயே முடங்கினார்.

இறுதிக் காலத்தில் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். உடலின் பல பகுதிகள் செயல் இழந்து, வீட்டினுள்ளேயே சக்கர நாற்காலியில் நாட்களை நகர்த்தினார்.

2005, ஜனவரி – 20.

அவர் வசித்த மும்பை அபார்ட்மெண்ட் வீடு மூன்று நாட்களாக திறக்கப்படாததோடு, உள்ளிருந்து கெட்ட வாடை வீசவே.. பக்கத்து வீடுகளில் வசித்தோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது… கொடூரம்.

கால்கள் அழுகி, கோரமாக இறந்து கிடைந்தார் அழகி பாபி!

கொடும் சர்க்கரை நோய் அவரது அழகு உடலை ஏறக்குறைய தின்று தீர்த்திருந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, “மூன்று நாட்களாக அவர் உணவு எடுத்துக் கொள்ளவில்லை.. மது மட்டுமே அருந்தியிருக்கிறார்” என்றனர் மருத்துவர்கள்.

அவரது மரணத்துக்குக் காரணம் நீரிழிவு நோயும், அதீத மதுவும்!

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பாபி, இறப்பதற்கு சில காலம் முன்பு, கிறிஸ்துவ மதத்துக்கு மாறியிருந்தார். தனது இறுதிச் சடங்கு கிறித்துவ முறைப்படி நடக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆகவே, கிறித்துவ அமைப்பு ஒன்று அவரது உடலை அடக்கம் செய்ய வந்தது. ஆனால் பாபியின் உறவினர்கள், தங்களது இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்ய வேண்டும் என கொதித்தெழுந்தனர்.

பிரச்சினை எழுந்தது…

இறுதியில் கிறித்துவ அமைப்பு விட்டுக்கொடுக்க… இஸ்லாமிய முறைப்படி பாபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பாபியின் சோகமான இறுதிக்காலத்தில் உடன் இல்லாத உறவினர்கள், அவரது மறைவுக்குப் பிறகு சொத்துக்காக வழக்கு தொடுத்தனர்.

சொத்தில் 80 சதவிகிதம் அநாதை ஆசிரமங்களுக்கும், 10 சதவிகிதம் கிறித்துவ அமைப்பு ஒன்றுக்கும் மீதமுள்ள பத்து சதவிகிதம் உறவினர் ஒருவருக்கும் என தீர்ப்பானது.

இந்தியாவே கொண்டாடிய கவர்ச்சிக் கன்னி, உடல் சிதைந்து அநாதையாய் மரணித்த சோகம் ஒருபுறம்.. அவரது உடலை சொந்தம் கொண்டாடிய மத அமைப்பினர் மறுபுறம்!

மதம் என்கிற அமைப்பின் கோர முகத்தைத் தனது மரணத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காண்பித்துச் சென்றிருக்கிறார் பாபி.

-டி.வி.சோமு

23.12.2021 12 : 30 P.M

You might also like