– மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்
“காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை” என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை.
நிஜமாகவே சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற சிறுகூடல்பட்டி பெயருக்கேற்றபடி சிறு கிராமம் தான். ஊருக்குள் நுழைகிற இடத்தில் கவிஞர் கண்ணதாசனின் சிலை.
கீழே “போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்” என்று எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் விதத்தில் கவிஞர் எழுதிய வரிகள் பட்டும்படாமல் அடிக்கல்லில் தெரிகின்றன.
நுழைகிற இடத்தில் எளிமையானபடி மலையரசி அம்மன் கோவில். கோவில் பிரகாரத்தில் அந்தக் கால பால்யத்தில் கண்ணதாசன் எழுதிய கவிதை தோய்ந்த வரிகள் பதிந்திருக்கின்றன.
“சாத்தப்பன் பெற்ற மகனைத் தமிழ் பாட வைத்தனை சிறுகூடற்பட்டி வளர் தங்க மலையரசி உமையே’’ என்று அதில் ஓர் மிக எளிய மழலைக் கவிதை வரி இதே அம்மனுக்கு முன்னால் அன்பு கனிந்த மனதோடு இதே பிரகாரத்தில் அமர்ந்து எழுதிய முத்தையா என்கிற கண்ணதாசனின் இளமையை அடையாளங் காட்டுகிறது.
“இங்கே தான் கண்ணதாசன் உட்கார்ந்து கவிதைகள் எழுதிக்கிட்டிருந்திருக்கார். இந்த மலையரசி அம்மனை இன்னொரு தாயைப் போல அவர் பார்த்திருக்கார்’’ என்கிறார் கோவில் பூசாரியான முத்துராமலிங்கம்.
சில செட்டிநாட்டு வீடுகளைக் கடந்தால் கண்ணதாசனும், அவரது சகோதரர் ஏ.எல்.சீனிவாசனும் பிறந்த வீடு என்பதைச் சொல்லும் பெயர்ப்பலகை.
“1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதிக்குச் சரியான பிரபவ வருஷம் ஆனி மாதம் 10 ஆம் நாள் அஸ்வினி நட்சத்திரமும், சிம்ம லக்கனமும் கூடிய சுப தினத்தில் பாண்டிய நாட்டில் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் குழந்தையொன்று பிறந்தது.
அந்தப் பிள்ளைக்கு ‘முத்து’ என்று பெயரிட்டார்கள்.
அது பிறந்தபோதே நாட்டிலே பல கலகங்களுக்கு அது காரணமாகப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?’’
– இப்படித் தன்னுடைய பிறப்பைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன் தான் எழுதிய ‘வனவாசம்’ நூலில்.
இங்கே உள்ள ஏட்டுப்பள்ளிக்கூடத்தில் இவரது கல்வி ஆரம்பமாயிற்று. சுட்டிப்பயல் என்று பேரெடுத்திருந்த கண்ணதாசனுக்குப் படிப்பில் ஆர்வம். மனப்பாடம் செய்தால் சட்டென்று எதையும் கிரகிக்கும் கற்பூரப்புத்தி.
அப்பா சாத்தப்பன் சீட்டாடிப் பணத்தை விடுவதில் கெட்டிக்காரர். ஆனால் பாசம் காட்டுவதிலும் அதே அடர்த்தி. இதற்கிடையில் கவிமனம் வாய்த்துவிட்டது கண்ணதாசனுக்கு.
ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக் கொண்டு, தான் நினைத்ததை எழுதித்தள்ள தமிழ்மொழி வசமாகிக் கொண்டிருந்தது அந்த இளைஞனுக்கு.
பத்திரிகை, சினிமா, பாட்டு, படத்தயாரிப்பு, நடிப்பு வசனம், அரசியல் என்று கண்ணதாசன் தொட்டிருக்கிற துறைகள் அநேகம்.
நிறையப் பணம் வந்த வழிகள் தெரிந்தன. ஆனால் போன வழிகள் தெரியவில்லை. பல அரசியல் கட்சிகளின் வரலாற்றிலும் ஐக்கியமான கண்ணதாசன், சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க. துவக்கப்பட்டபோது கருணாநிதியுடன் சேலத்திலிருந்து வந்து விழாவில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிப் போனவர்.
அரசியல் காமராஜரிடம், அண்ணாவிடம், ஈ.வி.கே. சம்பத்திடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.
கண்ணதாசன் மறைந்தபோது கருணாநிதி எழுதிய ஒரு வரி அவருடைய அரசியலைத் தெளிந்த நீரைப் போலச் சொல்லும்.
“நீட்டுகிற கையை நோக்கியெல்லாம் தாவுகிற குழந்தை நீ’’
பல படங்களுக்கு வசனமும் எழுதிய கவிஞரின் பிரத்யேக அடையாளம் அவருடைய எளிமையான கவித்துவம்.
“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’
–‘நாடோடி மன்னன்’ படத்திற்காக கவிஞர் எழுதிய வசன வரி எம்.ஜி.ஆரின் அடையாளத்தைப் போல மாறிற்று.
“காதல் கொண்டேன்… கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்… உனக்கே உயிரானேன். எனை நீ மறவாதே’’
– என்று மூன்றாம்பிறை பாடலுக்கு வரிகளை எழுதிவிட்டு அமெரிக்காவுக்குச் சென்ற திறமையில் உச்சமும், மனதில் வெகுளித்தனமும் நிறைந்த கண்ணதாசன் தமிழகம் திரும்பியபோது உயிர் எங்கோ பிரிந்திருந்தது.
அவருடைய மனதைப் போல அவருடைய எழுத்தும் வெளிப்படை. தான் பிறந்த சிறுகூடல்பட்டி இருக்கிற திருக்கோஷ்டியூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கவிஞர் தோற்றுப்போனார்.
“இருபது வயசுக்கு முன்னாடியே அவர் இன்னொரு வீட்டுக்குப் பிள்ளையாகப் போய்விட்டார்.
இருந்தாலும் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்துவிட்டுப் போவார் கவிஞர்.’’ என்கிறார் சிறுகூடல்பட்டிக்காரரான எண்பது வயதான சிங்காரம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழில் எழுதுவதற்காக இதே சிறுகூடல்பட்டி கிராமத்திற்குச் சென்றபோது அவர் வாழ்ந்த வீடு காலத்தின் பிடியில் சீர்குலைந்து கிடந்தது.
வார இதழில் வெளிவந்த பிறகு கவிஞர் பிறந்த வீடு சில முயற்சிகளுக்குப் பிறகு நினைவில்லம் ஆகியிருக்கிறது. காரைக்குடியில் அவருக்கு மணிமண்டபம் எழுப்பப் பட்டிருக்கிறது.
கவிஞர் பிறந்தபோது கிடத்தப்பட்ட மரத்தொட்டில், சில நாற்காலிகள், சில பழுப்பேறிய புகைப்படங்கள், கவிஞரின் புத்தகங்கள் என்று எளிமையின் அடையாளமாக இருக்கிற அந்த வீட்டை அவ்வப்போது கவிஞரின் ரசிகர்கள் வந்து பார்வையிட்டுப் போகிறார்கள்.
கவிஞர் பிறந்தநாளின்போது இந்தச் சிறு கிராமத்திற்குப் பல வி.ஐ.பி.க்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.
“எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி’’ என்று தன்னுடைய சுயசரித நூலைப் பற்றிச் சொன்ன கண்ணதாசனை மரணம் கூட சிறுகுழந்தையின் விரல்நுனியைப் போல அவருடைய கனத்த உடலைப் பதமாகத் தொட்டு அழைத்துச் சென்றிருக்கிறது.
காவியத்தாயின் இளைய மகன் என்று தன்னை வர்ணித்துக் கொண்ட அந்தக் கவிமனதிற்கு என்றும் மரணமில்லை.
இன்னும் பல ஒலிநாடாக்களில் இந்தச் சிறுகூடல்பட்டிக் குரல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.
- மணா