சண்டைப் பயிற்சியும் ஜீவகாருண்யமும் இரு கண்கள்!

– ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா குறித்த பதிவு!

80’ஸ் கிட்ஸ் என்றாலே, இப்போதுள்ள தலைமுறையினர் கிண்டல் செய்வதற்கேற்ப சில பழக்க வழக்கங்கள், பலவீனங்களைக் கைக்கொண்டிருப்பர். எனக்குத் தெரிந்தவரை, ஆக்‌ஷன் படங்களை பார்க்கும் ஆர்வமும் அவற்றுள் ஒன்று என்பேன்.

உடனே ப்ரூஸ்லீ, ஜாக்கிசான், சில்வர்ஸ்டர் ஸ்டோலன், ஜீன் கிளாட் வேன்டம் படங்களை மனத்திரையில் ஓட்டக் கூடாது. ‘டும் டுஷ்’, ‘டுகால்.. டுகால்’, ‘ய்யே.. டுப்.. டுப்..’ என்ற சத்தங்களுடன் தமிழ் சினிமாக்களில் வழக்கமாக இடம்பெறும் சண்டைக்காட்சிகளை ரசித்த காலமொன்று உண்டு.

1993-94 காலகட்டம் வரை, தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பப்படும் திரைப்படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

அப்படி ஒளிபரப்பாகும் படத்தின் டைட்டில் காட்சியில் ‘ஸ்டண்ட்’ என்றோ, ‘சண்டைப்பயிற்சி’ என்றோ வார்த்தைகள் வராவிட்டால் என் மனம் காற்று இறங்கிய பலூன் போலாகிவிடும். சண்டையிட்டால் மட்டுமே ஒரு நடிகரை பெரிய ‘ஸ்டார்’ என்று நினைத்த காலமது.

எதற்காக இந்த பில்டப் என்றால், அந்த பழக்கத்தினால் விக்ரம் தர்மா, ராக்கி ராஜேஷ், சூப்பர் சுப்பராயன் போன்றோரின் பெயர்கள் எனக்கு பரிச்சயம்.

இந்த லிஸ்டில் பப்பு வர்மா முதல் 1950களைச் சேர்ந்த ஆர்.என். நம்பியார், மாதவன், மாடக்குளம் தர்மலிங்கம், ஜூடோ ராமு, ஜூடோ ரத்தினம் என்று பல்வேறு மாஸ்டர்களின் பெயர்கள் உண்டு.

இவர்களில் இருந்து வேறுபட்டு, இந்த சண்டைக்காட்சி வெகு இயல்பாக இருக்கிறதே என்று எண்ண வைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா. இவரது முழுப்பெயர் கிருபாநிதி.

பாலுமகேந்திரா இயக்கத்தில் இவர் வடிவமைத்த ‘நீங்கள் கேட்டவை’ சண்டைக்காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

சமீபத்தில் சித்ரா லட்சுமணன் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் பவர் பாண்டியனுக்கு கிருபா அளித்த பேட்டிகளை யூடியூப்பில் ரசித்தேன்.

எவ்விதப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அக்காலத்தில், சண்டைக்காட்சிகளில் இவர் நடித்த விதமும் அவற்றைப் படமாக்கிய அனுபவமும் அடுத்த தலைமுறையினருக்கான ஆவணம்.

விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி..!

1950களில் பர்மாவுக்குச் சென்ற தமிழர்கள் நாடு திரும்புவது வாடிக்கையான நிகழ்வாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சென்னைக்கு வந்தவர்தான் கிருபாநிதி.

துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாகக் கப்பல் வழியே வரும் பொருட்களை எடுத்துவந்து, சில வியாபாரிகளிடம் சேர்க்கும் வேலையைச் செய்ததாகச் சொல்லும்போது நமக்கு ஆச்சர்யம் மேலிடுகிறது.

போலீஸ் பிடியில் இருந்து தப்ப இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் பணியைச் செய்தவர், அதே காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து உயர் ரக கார்களை சென்னைக்கு தருவிக்கும் வியாபாரத்தையும் மேற்கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே, சினிமாவில் சண்டைப்பயிற்சியாளர்களாக இருந்த மாதவன், ஜூடோ ரத்தினம் போன்றவர்களுடன் நட்பையும் வளர்த்திருக்கிறார்.

மோட்டார் பைக்கில் வேகமாகச் செல்வதுடன், ‘வீலிங்’ போன்ற சாகசங்களைச் செய்வதில் கிருபாநிதிக்கு ஆர்வம் உண்டு. ஒருநாள் மோட்டார் பைக்கை ஓட்டியவாறே பலகையில் ஏறி சுமார் 11 அடிஉயரத்தைத் தாண்டுவதற்கு ஆள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் மாதவன்.

சர்க்கஸில் சாகசம் செய்பவரே அந்த வேலையைச் செய்ய முடியாது என்று உதறிச் சென்ற நிலையில், தான் அதைச் செய்கிறேன் என்று கிருபா விளையாட்டாகக் கூறியிருக்கிறார் கிருபா.

‘அப்படியானால் படப்பிடிப்புக்கு வந்துவிடுங்கள்’ என்று மாதவன் சீரியசாக சொல்ல, அன்றைய நாள் இரவு முழுவதும் சென்னை மகாலிங்கபுரம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து 1 அடி, 2 அடி என்று11 அடி உயரம் வரை பலகையைச் சாய்வாக வைத்து அதன் மீது மோட்டார் பைக்கை ஏற்றித் தாண்டியிருக்கிறார்.

முறையாகப் பயிற்சி பெற்றவர்களே தகுந்த முன்னேற்பாடுகளுடன் இப்படியொரு சாகசத்தை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓரிரவு மட்டும் பயிற்சி செய்துவிட்டு அடுத்தநாள் படப்பிடிப்பில் அந்த காட்சியில் நடித்திருக்கிறார் கிருபா.

அதுவே, மாதவனின் அடுத்தடுத்த படங்களில் ஸ்டண்ட் மேன் ஆகவும், தொடர்ந்து அவரது உதவியாளராகவும் பணியாற்றும் வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது.

முதல் அந்தஸ்து!

மாதவனின் உதவியாளராகவும், சிக்கல்மிக்க மோட்டார் பைக் சண்டைக் காட்சிகளில் நடிப்பவராகவும் இருந்த கிருபா, மலையாளத்தில் வெளியான ‘ஈட்டா’ மூலமாக சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானார்.

வேறொரு ஸ்டண்ட் மாஸ்டர் தவிர்த்த வாய்ப்பு, அப்படத்தில் நாயகனாக நடித்த கமல் மூலமாக கிருபாவிடம் வந்திருக்கிறது. அதில் அவர் பணியாற்றியவிதம், தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் மலையாளத் திரையுலகில் அவரைப் பயணிக்க வைத்திருக்கிறது.

எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றாவிட்டாலும், அதற்கடுத்த தலைமுறை திரை நட்சத்திரங்கள் அத்தனை பேருடனும் வேலை செய்த அனுபவம் கிருபாவுக்கு உண்டு.

சண்டைப்பயிற்சியாளர் அந்தஸ்தை அடைந்தபிறகும் கூட, ஸ்டண்ட் மேன்கள் செய்யத் தயங்கிய சில காட்சிகளில் இவர் நடித்திருக்கிறார். அதனால் காயம் ஏற்பட்டு சில நாட்கள் ஓய்விலும் இருந்திருக்கிறார்.

இப்போதும் கிருபாவின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும்போது, அவை யதார்த்தமாக இருப்பதாகவே தோன்றும். சண்டைக்காட்சிகளில் ஏன் யதார்த்தம் இல்லை என்று ஹீரோக்களிடம் அடி வாங்குவது போல நடித்த காலம் முதல் எழுந்த கேள்விக்கு அவராகக் கண்டுபிடித்த பதில் அது.

அதேபோல கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகள் தொடர்பான காட்சிகளும் இவர் படங்களில் அதிகம். ஆனால், அக்கலைகளை இவர் முறையாக அறிந்தவர் இல்லை.

‘பகடை பன்னிரண்டு’ படத்தின் நாயகனும் வில்லனும் கராத்தே பயின்றவர்கள் என்று கதையில் இருந்ததால், அப்பயிற்சியை அளிக்கும் மையத்திற்குச் சென்று கவனித்திருக்கிறார் கிருபா.

தற்போது சீரியல்களில் நடித்துவரும் அழகு உள்ளிட்ட சில ஸ்டண்ட் கலைஞர்கள் அக்கலையைப் பயின்றவர்கள் என்பதால், அவர்களைக் கொண்டு கராத்தே சண்டை காட்சிகளைத் தான் வடிவமைத்ததாக கிருபா சொல்லியிருப்பது ஆச்சர்யத்தின் உச்சம்.

எதிலும் புதுமாதிரி!

சில நடிகர்கள் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும்போது, அவர்களுக்கு ‘டூப்’பாக நடித்தவர்கள் வரும் ஷாட்கள் எவை என்று நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், கிருபாவின் படங்களில் அதற்கான வாய்ப்பு குறைவு.

காரணம், அவர் குறைந்த அளவிலேயே ‘டூப்’ நடிகர்களைப் பயன்படுத்துவார். அதேநேரத்தில், அக்காட்சியில் நடித்தால் ஹீரோக்களுக்கு காயம் ஏற்படுமென்ற யோசனை மனதில் வந்தால் உடனடியாக அவர்களைத் தவிர்த்துவிடுவார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கிருபா. தன்னிடம் இயக்குனர் சொன்ன கதைக்கும், எடுக்கவிருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் சம்பந்தமில்லை எனில் அவற்றைத் தவிர்த்துவிடுவார்.

கமல்ஹாசன், ஐ.வி.சசி போன்றோரால் ஒரு காலகட்டத்தில் பெரிதும் விரும்பப்பட்ட கிருபா, பின்னர் அமீர்ஜான், ராபர்ட் – ராஜசேகரன் போன்ற சில இயக்குனர்களின் ஆஸ்தான மாஸ்டராக மாறினார்.

அதன் தொடர்ச்சியாகப் பின்னாட்களில் அந்த இயக்குனர்களின் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று, நட்பின் அடிப்படையில் சில காட்சிகளைப் படமாக்க உதவிகளும் செய்திருக்கிறார்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சாசனம்’ போன்ற படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘என்ன குருநாதா உங்களுக்கு புது ஐட்டமா வீசியிருக்காங்க’ என்ற வடிவேலு காமெடி மூலமாக இன்றைய தலைமுறைக்கும் தெரிந்தவர் கிருபா.

அந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முன்னர் அந்த படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றவர், சம்பந்தப்பட்ட நடிகர் வராததால் தானாக முன்வந்து நடித்துக் கொடுத்ததாகச் சொல்வது சினிமா எனும் தொழில் மீது இவர் வைத்திருக்கும் பற்றுக்குச் சான்று.

சண்டைக் கலைஞர்கள் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் சங்கத்தில் தலைவர் முதல் ஆலோசனை உறுப்பினர் வரை பல பதவிகளை வகித்த அனுபவமும் இவருக்குண்டு.

தலைவர் பதவியில் அமர்ந்தபிறகு சிறு பொறுப்புகளை விரும்பாத மனிதர்களிடையே, தலைவர் பதவிக்குப் பிறகு உறுப்பினராகவும் தொடர்ந்தவர் கிருபா. அச்சங்கத்தில் இருந்தபோது, தான் நினைத்த பல நல்ல காரியங்களைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இவருக்குண்டு.

சண்டையும் ஜீவகாருண்யமும்..!

சாதாரணமாக சண்டைப் பயிற்சியாளர் என்பவர் அபாயங்களை எதிர்கொள்வதையோ, காயம் ஏற்படுவதையோ பெரிதாகக் கருதமாட்டார். அதேநேரத்தில், உயிருக்கு ஆபத்தான காட்சிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அக்கறை காட்டுவார்.

மனிதர்களிடம் காட்டும் அதே சிரத்தையைப் பிற உயிரினங்களிடமும் காட்டியவர் கிருபா. ‘நீயா’ படத்தில் கயிற்றின் மீது பாம்பு ஊர்ந்து போகும் காட்சியில், பல அடி உயரத்தில் இருந்து அது கீழே விழுந்து சிதறிவிடக் கூடாது என்று அதனை நூலில் கட்டியிருக்கிறார்.

இதற்கு மாறாக, ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’ படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பல நூறு பாம்புகளுக்கு நடுவே நாயகனும் வில்லனும் மோதுவதையும் படம்பிடித்திருக்கிறார்.

அப்போது, சில பாம்புகள் பயத்தில் கழிவகற்றியதாகக் குறிப்பிடும் கிருபா, ‘அதுவரையிலான திரைக்கதைக்கும், கதாபாத்திர அமைப்புக்கும் சம்பந்தமில்லாத அந்த சண்டைக்காட்சியைப் படமாக்கியதில் தனக்கு விருப்பமேயில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.

தன்னோடு சண்டையிட்ட, தன்னைத் தவிர்த்த பல கலைஞர்களின் படங்களையோ, அவர்களுடனான மோசமான அனுபவங்களையோ குறிப்பிடாமல், இப்படிப்பட்டவற்றை மட்டும் குறிப்பிடத் துடிப்பது தனித்துவமான குணம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலாரின் ஜீவகாருண்யத்தைத் தான் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டதையே இதற்குக் காரணமாகச் சொல்கிறார் கிருபா.

அதாவது, சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியபோதே வள்ளலாரின் வழியில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதே அதற்கு அர்த்தம்.

குதிரைகளையும் பிற உயிரினங்களையும் நெருப்புக்கு நடுவே விரட்டுவதாகக் காட்டும் சண்டைக்காட்சிகளைத் தவிர்த்தவர் கிருபா.

80களிலும், 90களிலும் இது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளே அதிகம் என்று உணரும்போது, கிருபா தொடர்ச்சியாகப் பணியாற்றாததன் காரணமும் உடனடியாகத் தெரிகிறது.

கமலோடு ஏற்பட்ட முரண்!

பவர் பாண்டியனுக்கு அளித்த யூடியூப் காணொளியில் சிலம்பம் சுற்றுகிறார் கிருபா. இப்போது அவரது வயது 93 என்று தெரிந்தால், இன்னும் ஆச்சர்யம் பெருகும்.

இந்த வயதிலும் தெளிவாக, நிதானமாக, தன் நினைவில் உள்ளதைத் தடுமாற்றம் ஏதுமில்லாமல் வெளிப்படுத்துகிறார். கன்னடப் படங்களில் பணியாற்றிய காலம் தன் மனதை விட்டு மறைந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

கமலோடு தனக்கு ஏற்பட்ட முரண்பாட்டைச் சொல்வதோடு, அந்த தவறுக்கு தானே காரணம் என்கிறார். அதற்குக் காரணமானவர்களைப் பற்றி குறை சொல்லவே இல்லை.

கூடவே, மம்முட்டிக்கு சண்டைக்காட்சியில் முக்கியத்துவம் தராததால் அவர் தன்னைத் தவிர்த்ததையும் திறந்த மனதோடு சொல்கிறார். அவர் ஒற்றை வரியில் சொல்வதெல்லாம், ஒரு அத்தியாயத்தின் ரத்தினச் சுருக்கம்.

கிருபாவின் பேட்டியைப் பார்க்கும்போது, இவரது சுயசரிதையை யாராவது எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. முடியாத பட்சத்தில், அவரது பேச்சுகளை மட்டும் காட்சி வடிவில் ஆவணப்படுத்தலாம்.

சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு தொழில்நுட்பக் கலைஞன் என்பவன் குறைந்த செலவில் காட்சியாக்கத்திற்குத் தேவையான அத்தனை யுக்திகளையும் பயன்படுத்தத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

தன் முந்தைய தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் புதிதாகத் தெரியும் பல விஷயங்களை அனுபவங்களாகத் தன்னுள் அடுக்கியிருக்கும் கிருபா மாஸ்டர் போன்றவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியே தீர வேண்டும்!

-உதய் பாடகலிங்கம்

21.12.2021 12 : 30 P.M

You might also like