ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!

சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல்

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது.

அதேபோல் தான், தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. ‘எஸ் ஜீன்’ இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரசால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 40 பேருக்கு ‘எஸ் ஜீன்’ மாறுபாடு காரணமாக ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களது சளி மாதிரிகள், பெங்களூரு, புனே ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதைத்தவிர, அண்டை மாநிலமான கேரளாவிலும், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

எனவே, ‘ஒமிக்ரான் போன்ற வைரஸ் பரவ துவங்கினால், மக்கள் தொகை அடர்த்தியால், சென்னையில் மின்னல் வேகத்தில் பாதிப்பை சந்திக்க நேரிடும். மீண்டும் ஒரு பேரிடர் சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும்’ என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, விளக்கமளித்துள்ள பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனரும், மருத்துவ நிபுணருமான குழந்தைசாமி,

“கொரோனாவை பொறுத்த வரையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய பின் தான் இந்தியாவில் பரவுகிறது.

தற்போது, அந்நாடுகளில் கொரோனா பரவ துவங்கி இருப்பதால், இந்தியாவிலும் கொரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

இவற்றைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். கொரோனாவை பொறுத்த வரையில், திறந்தவெளிகளில் அதன் பரவும் வேகம் மிக குறைவாக உள்ளது.

அதே வேளையில் மூடப்பட்ட அறைகளில் தான் அதிகம் பரவுகிறது. எனவே, திரையரங்கம், துணி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் தேவை. இங்கு அதிகளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நேரக் கட்டுப்பாடு, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி, முகக் கவசம் அணிவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலக வளாகங்களிலும், ஜன்னல், கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம்.

மூன்றாம் அலை கொரோனாவில், தடுப்பூசி போட்டவர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டால், பெரியளவில் உடல்நல பாதிப்புகள் இருக்காது.

ஆனால், தடுப்பூசி போடாத, முதியோர், நாள்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லக்கூடும்.

ஒமைக்ரான் வைரஸ், நுரையீரலுக்குச் செல்வதற்கு முன் மூச்சுக்குழாயில் அதிக வீரியமாக இருப்பதால், மற்றவர்களுக்கு எளிதாக பரவும். மூச்சுக்குழாய் என்பதால் பெரியளவில் உடல்நல பாதிப்பு இல்லை.

அதே வேளையில் பலருக்கு பரவும்போது, அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, தற்போதிலிருந்தே தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

21.12.2021 12 : 30 P.M

You might also like