உடம்புத் தோலை உரிச்சுடுங்க சார்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுநாளையொட்டி (21.12.2021) அவரது பள்ளிப் பிராயம் குறித்த அவரது அனுபவப் பதிவு. 

*****

“விருத்தாசலம் தான் என் கனவுகளில் வந்து போகும் ஊராக அப்போது இருந்தது. அங்குதான் என் தாத்தா, ஆயா வீடு இருந்தது.

கோடை விடுமுறை என்பது அப்போது மூன்று மாதங்கள் முழுசாக நீடித்தது. விடுமுறை விட்டவுடன், கடைசிப் பரீட்சையை எழுதி முடித்ததுமே, நாங்கள் எங்கள் அம்மாவை அரிக்க ஆரம்பித்து விடுவோம்.

நாங்கள் என்பது நானும், என் தம்பியும், அப்போது உயிரோடு இருந்த தங்கையும்.
அம்மாவுக்கும் அவருடைய அம்மா வீடு போவது என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகத்தானே இருக்கும்.

பூமிப் பந்தின் மேல் புதுச்சேரியை (பாண்டிச்சேரி) அடுத்து விருதாச்சலம் மட்டும்தான் இருந்தது என்பது என் அபிப்பிராயமாக அன்று இருந்தது.

பஸ் ஸ்டாண்டு எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அவரவர் பையைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடப்போம்.

முதலில் அப்பா. அவரது சின்னப் பையில் மாற்றுச் சட்டையும், வேட்டியும் அவர் அதிக நாட்கள் மாமனார் வீட்டில் தங்குவது முடியாது.

அவரது வேலை அப்படி. ஆகவே சுமை குறைவு. அடுத்து அம்மா. பையின் கனம் அதிகமாகவே இருக்கும். இரண்டு மாசமாவது அவர் அம்மா வீட்டில் தங்க வேண்டி இருக்கிறதே.

அம்மாவின் கனத்தை நான் வாங்கிக் கொள்வேன். என் சுமைதான் எப்போதும் என்னிடம் இருக்குமே. அப்புறம் என் தம்பியும், தங்கையும்.

என் சுட்டு விரலைப் பிடித்துக் கொண்டு என் தங்கை பானு நடப்பாள். தெருவே எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும். யாராவது அத்தையோ, மாமியோ, அக்காவோ “பயணம் புறப்பட்டாச்சா அம்புஜம்” என்று கேட்பார்கள்.

“ஆமாம், அம்மா வீட்டுக்கு” என்பாள் அம்மா. அம்மா முகம் முழுக்கத் திறந்திருக்கும் நேரம் அதுவாகவே இருக்கும். என் பள்ளிக்கூடப் பையன்கள் யாராவது என்னை அந்த நேரம் பார்க்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக் கொள்ளும்.

அதிர்ஷ்டவசமாக சுப்பிரமணி அவன் வீட்டு வாசற்படியில் இருப்பான். அனேகமாக என்னைக் கவனியாதவன் போல தூணைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

அவனை வலுக்கட்டாயமாக அழைத்து, “தாத்தா வீட்டுக்குப் போறேன்டா சுப்பிரமணி” என்றேன். அடிபட்ட வலியோடு அவன் “உம்” என்பான்.

கால் சட்டை, அரைஞாண் கயிறின் பலத்தில் நின்றது. பட்டன் இல்லாததால், கால் சட்டையின் உபயோகம் பயனற்றுப் போய் இருந்தது.

பிரயாணம் என்பதும் சந்தோஷம், அதன் தயாரிப்புகளிலும், வண்டி வாகன ஊர்தலிலும் தொடங்கிறது. ஊருக்குப் புறப்படும் முதல் நாள் எங்களுக்கு என்று இருக்கும் பைகளில் எங்கள் சட்டை, கால் சட்டை, பனியன் முதலானவைகளை அடுக்குவோம்.

சமயங்களிலும் என் பனியனும், தம்பி பனியனும் கலந்துவிடும். பஞ்சாயத்து அப்பாவரைக்கும் போய்விடும்.

புதுக்கோட்டையிலிருந்து கடலூர் வரைக்கும் பஸ் பயணம். அப்பா, டிரைவர் பக்கத்தில் பிரமுகா்களுக்கென்று இருக்கும் மூன்று பேர் மட்டும் அமரும் இடத்தில் அமர்வார்.

நாங்கள் பின்னால் நான்குபேர் அமரும் குறுக்குச் சீட்டில் அமர்ந்து கொள்வோம். ஜன்னலோரம் தான் எப்போதும் என் இடம். எங்கள் ஊருக்கும் கடலூருக்கும் இடையே நிறைய வயல்வெளிகள்.

பச்சை வர்ணம் பூசியதுபோல வெகுதூரத்துக்குத் தெரியும். இடையிடையே குளங்களில் வாத்துகள், கொக்குகள், மைனாக்கள்.

அப்போதெல்லாம் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடியும். எல்லா இடங்களிலும் தட்டுப்படும் பறவைகளில் காக்கைகளுக்கு அடுத்தபடியாக சிட்டுகள்.

கடலூரிலிருந்து ரயிலில் விருத்தாச்சலம் பயணங்களில் ரயில் பயணமே மிகவும் சுகமானது. ஒண்டுக்குடித்தனக்காரர்களுக்குப் பெரிய வீடு கிடைத்ததைப் போல சௌகரியமான பயணமாக இருக்கும்.

வண்டியில் குறுக்கும் மறுக்கும் நடக்கலாம். நகரத்துக்கு வெளியே ரயில்கள் ஓடுவதால், நிலம், அதன் மேடு பள்ளம், நீர் நீச்சு, மரம் மட்டை, செடிகொடி ஆகியவைகளைப் பார்த்துக் கொண்டே போகலாம்.

தாத்தா, பாட்டி வீடுகளில் அப்படி என்ன விசேஷம்? ஏன் குழந்தைகளுக்குப் பிறந்த வீடுகளைக் காட்டிலும், அந்த வீடுகள் சந்தோஷமாகின்றன? ஏனென்றால் அதிகாரம், குழந்தைகளை ஒற்றாடல் செய்வதில்லை.

பேயைப் போல பின்னிருந்து தொடர்வதில்லை. அதிகாரத்தை வன்முறையாகப் பிரயோகிப்பதில் அப்பா, அம்மா, ஆசிரியர்கள் எல்லோரும் ஒரே மாதிரிப் பட்டவர்கள்.

போலீஸ்காரர்கள் மாதிரி, தங்களிடம் குழந்தைகள் வந்து இருக்கின்றன என்கிற மிதப்பில் அப்பா, அம்மாக்கள் இருக்கிறார்கள்.

1. படிச்சியா…?
2. ஹோம் ஒா்க் பண்ணிட்டியா.?.
3. சாப்பிட்டியா. ஏன் ஒழுங்கா சாப்பிடலை…?
4. பட்டனை ஞாபகமாப் போடு…
5. சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவு…
6. நிமிர்ந்து நட… முதலிய சொற்கள் மட்டுமே அவர்களின் வார்த்தைக் கிடங்குகளில் இருக்கின்றன.

அவைகளுக்கு மேல் அவர்கள் பூஜ்ஜியங்கள். சற்று ஏறக்குறைய கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இருக்கும் உறவே குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும்.

எங்கள் கணக்கு வாத்தியாரின் சுண்டுவிரல் நீண்டு ஒரு பிரம்பாகவே முடிந்திருக்கும். அவரது மொழி. பிரம்பு மொழி. கல் தோன்றி மண் தோன்றா முன்னமே முன் தோன்றிக் குழந்தைகளைக் கொன்று குவித்த மொழி.

அந்த மொழியின் பாதுகாவலராக என் அப்பா இருந்தார். அடிக்கடி பள்ளிக்கு வந்து கணக்கு வாத்தியாரிடம், “கண்ணை மட்டும் விட்டுவிட்டு உடம்புத் தோலை உரிச்சிடுங்க சார்” என்பார்.

ஏன் கண்களை மட்டும் விடுவது என்று எனக்கு இன்னும்கூட விளங்கவில்லை. இத்தனைக்கும் அப்பா என்மேல் அன்பு இல்லாதவரில்லை. அப்பா-ஆசிரியா்கள் சொல்லாடல்கள் கல்வி குறித்து இவ்வாறாக தான் இருந்தன.

வகுப்புக்கு ஆசிரியர்கள் வராமல் பிரம்புகள் தானே வந்து வகுப்பெடுத்து, மார்க் போட்டு தானே அடித்து எங்களை வழிநடத்தப் போவதாகவும் கூட நான் அந்த நாட்களில் நினைத்ததுண்டு.
அப்புறம் வீட்டுப்பாடம். ஆறு பாட வாத்தியார்களும் இதில் ஒரே மாதிரிதான்.

எல்லோருமே மனப்பாடம் பண்ண இரண்டு பக்கம், வீட்டுப்பாடம் எழுத ஆளுக்கு நாலு பக்கம் என்று சாதாரணமாக, இவன் கழுத்தை வெட்டிப் போட்டுவிட்டு, ‘நல்லா ஸ்ட்ராங்கா ஒரு காபி கொண்டு வா’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.

மாலை நேரம், மஞ்சள் வெயில் காயும்போது எங்கள் தெருப் பையன்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பேன்.

தெருவில் ஆயா கடலைச் சுண்டல் விற்றுக்கொண்டு போகும். நான் எழுதிக் கொண்டிருப்பேன். தெருவில் அப்போதெல்லாம் யானை வரும். வரும்முன் மணியோசை வரும்.

நான் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பேன். அம்மா முகப்பவுடர் போட்டுக்கொண்டு கடைத்தெருவுக்குக் கிளம்புவார்.

 நான் பூகோளம் மனப்பாடம் பண்ணிக் கொண்டிருப்பேன். ஒன்று மட்டும் தெரிகிறது. வீட்டுப்பாடம் கொடுக்கிற வாத்தியார்கள், நிச்சயம் மோட்சம் போக மாட்டார்கள்.

தாத்தா பாட்டி வீட்டில் எங்களை இம்சை செய்கிற எதுவும் இல்லை.. அதிகாரம் இல்லை. வீட்டுப்பாடம் இல்லை. தாத்தா வீட்டில், மிகப்பெரிய அலமாரி இருந்தது.

என் கையை விரித்து அகலப்படுத்தினாலும் தீராத அகல அலமாரி. அதில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. திகம்பர சாமியார் என்ற நாவலை அங்குதான் படித்தேன். சங்கா்ராம், கா.சி.வேங்கடரமணி, துரைசாமி ஐய்யங்கார், கல்கி ஆகியோரின் புத்தகங்களைத் தாத்தா வைத்திருந்தார்.

படித்ததில் லயிப்பு ஏற்பட்டது. படித்துக் கொண்டே இருந்தேன். நிறையக் கனவுகள் வந்தன. பகல் நேரத்திலும், எப்போதும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்த கனவுகள்.
நான்தான் துப்பறியும் கோவிந்தன்.

பயங்கரக் கொலை, களவு, கற்பழிக்கும் கயவர்கள் முதலான கேடிகளைப் பல மாறுவேஷத்தில் கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கம் நான்.

என் ஏழாம் வகுப்பில் ஒரு கதை எழுதினேன். மருங்காபுரி ஜமீன்தார் மார்த்தாண்டன் பல ஏழைகளைக் கொன்று, பல பெண்களைக் கற்பழிக்கிறான்.

அவனைப் பொதுநல வீரன் துன் பாண்டியன் சாட்டையால் அடித்துத் திருத்துகிறான். என் நோட் புக் தாள்களில் 12 பக்கங்கள் கதை எழுதி இருந்தேன்.

அப்பா ஒரு மதியம் சாப்பிட்டு முடித்து சுருட்டுப் பிடித்தபடி அந்தக் கதையைப் படித்தார்.
“நல்லா இருக்குப்பா” என்றார்.

அப்புறம் என்னைப் பார்க்காமல், சுருட்டைத் தட்டிக்கொண்டு, “கற்பழிக்கிறதுனா என்ன?” என்றார்.
என்னால் சொல்ல முடியவில்லை.

என் பள்ளியில் சூரியநாராயணன் என்ற பையன், பத்தாம் வகுப்பு பையன். ஓட்டம், உயரம் தாண்டுதலில் சூரன். எங்கள் பள்ளி நட்சத்திரம் அவன். எங்கள் பள்ளிக்கு எதிரில் பெண்கள் பள்ளி ஒன்று இருந்தது.

அதில் நளினி என்று ஒருத்தி பத்தாம் வகுப்பு படித்தாள்.

அவளை நடையழகி என்று நாங்கள் அழைப்போம். அவ்வளவு அழகாக நடப்பாளாம் அவள்.
ஒரு நாள் சூர்யா, “டேய் இங்கே வாடா” என்றான். அவன் அழைத்தால் ஏழாம் வகுப்பு மாணவன் நான் போகாமல் இருக்க முடியுமா? போனேன்.

ஒரு சின்ன காகிதச் சுருளை என் கையில் கொடுத்து, “இதை நளினிகிட்ட கொண்டு போய்க் கொடு” என்றான்.

நளினி தூரத்தில் வந்து கொண்டிருந்தாள.

“என்ன இது” என்றேன்.

“போய்க் கொடுன்னா.. கொடுக்கணும்.. கேள்வி கேட்கிறாயா? என்றான்.
என்னுடையது பூஞ்சை உடம்பு. அவன் ராட்சசன். கிண்டாதிகிண்டன்.

“சரி” என்றபடி அதை எடுத்துப்போய் நளினியின் எதிரில் நின்றேன்.

“என்னடா” என்றாள் நளினி.

நான் காகிதத்தை நீட்டினேன்.

“என்னா… இது”

“அந்த அண்ணன் கொடுக்கச் சொல்லுச்சு”

“எந்த அண்ணன்?”

நான் திரும்பிப் பார்த்தேன்.

சூர்யா காணாமல் போயிருந்தான்.

“செருப்பால அடிப்பேன்னு சொல்லு”

“சரி” என்றபடி திரும்பினேன்.

வாசற்படிக்கு முதுகைக் காட்டியபடி சூர்யாவும், நவநீதகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பூவரச மரம் அவர்களுக்கு நிழல் தந்தது.

சூரியாவிடம் போய் “அண்ணே” என்றேன்.

“சூ… போடா”

“அந்தப் பொண்ணுகிட்டே காகிதத்தைக் கொடுத்தேனா”

“போடான்னா..”

“அது உங்களை செருப்பால அடிப்பேன்னு சொல்லிச்சு”
நான் வந்துவிட்டேன்.

*

– ‘மணா’வின் தொகுப்பில் வெளியான ‘பள்ளிப் பிராயம்’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

You might also like