தெலங்கானா மாநிவம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகள் இருவர் மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் வாழ்க்கை நடத்தினர். ஒருநாள் அவர்கள் தங்கள் விதியை மாற்ற நினைத்தனர்.
காங்கிதி மண்டல் பகுதியைச் சேர்ந்த விவசாய அதிகாரி ஒருவர் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். அவருடைய வழிகாட்டுதலில் இரு விவசாயிகளும் மாற்றுப் பயிர் விவசாயத்துக்கு மாறியதால், தங்கம் போல லாபம் அளிக்கும் பயிரை அறுவடை செய்தார்கள்.
தத்கல் வட்டாரத்தில் சாப்டா கே, சாப்டா பி, பாபுல்கம் மற்றும் தத்கல் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெற்பயிர் சாகுபடி செய்த மோச்சி பண்டாரி மற்றும் ஹவப்பா ஆகிய இரு விவசாயிகளும் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தனர்.
அதிலிருந்து மீள்வதற்கு வழிதெரியாமல் தவித்தார்கள். பிறகு அவர்கள் விவசாய அதிகாரியின் உதவியால் மாற்றுப்பயிரை கண்டுகொண்டனர்.
மற்ற நெல் பயிர்களைத் தவிர்த்து முதன்முறையாக பாஸ்மதி நெல் ரகத்தை இருவரும் பயிரிட்டார்கள். பழைய தலைமுறையைச் சேர்ந்த விவசாயிகள் அதுவரையில் பாஸ்மதி நெல் ரகத்தைப் பயிரிடவில்லை.
சரியான விலை கிடைக்காது என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் தற்போது பாஸ்மதி நெல் ரகத்திற்கு நாடு முழுவதும் அதிக லாபம் கிடைப்பதை பண்டாரி உணர்ந்தார்.
தன்னுடைய அரை ஏக்கர் நிலத்தில் பாஸ்மதி நெல் ரகத்தைப் பயிரிட்டார். ஒவ்வொரு பருவத்திலும் அவருக்கு லாபகரமான விளைச்சல் கிடைத்தது. மீதமுள்ள ஐந்து ஏக்கரில் உளுந்து, பருத்தி மற்றும் பயறு போன்ற பல பயிர்களை பண்டாரி விவசாயம் செய்தார்.
வனகாலத்தின் போது மட்டுமே நெல் சாகுபடி செய்வதாகவும், யாசங்கி காலத்தில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சாப்டா (பி) கிராமத்தில் உள்ள ஹவப்பாவின் வயல்வெளியில் எள் செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன.
“உள்ளூர் சந்தைகளில் எள்ளுக்கு அதிக தேவை இருந்துவருகிறது. ஒரு எள் செடி தானாகவே வளரும். அத்துடன் அதிக உழைப்பு தேவையில்லை என்பதால், தற்போது அதிகளவில் விவசாயிகள் அவற்றை வளர்த்துவருகின்றனர்” என்று ஹவாப்பா தெரிவித்தார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எள் சாகுபடியைத் தொடங்கியபோது, 10 குண்டாஸ் நிலத்தை மட்டுமே அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தினேன்.
நல்ல லாபத்தைக் கண்டு, உரம், கூலி அதிகம் செலவு செய்யாமல், மேலும் அதிக நிலத்தில் பயிர் செய்ய முடிவு செய்தேன்.
மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டுகிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹவப்பா. மீதமுள்ள ஐந்தரை ஏக்கரில் உளுந்து, பருத்தி, பருப்பு மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றை பயிரிடுகிறார்.
“கடந்த பருவத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் இருந்து 25 குவிண்டால் பருத்தியைப் பெற்றேன், இறுதியில் எனக்கு ரூ.1.7 லட்சம் வருவாய் கிடைத்தது.
கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,400 ஆக இருந்த நிலையில், தற்போது குவிண்டால் ரூ.8,900 ஆக உயர்ந்துள்ளது. மாற்றுப் பயிர்களை வளர்ப்பது எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது” என்று ஹப்பா தெரிவிக்கிறார்.
பா. மகிழ்மதி
18.12.2021 12 : 30 P.M