ஒரு திரைப்படம் என்ன வகைமையைச் சேர்ந்தது என்பது பற்றி மிகச்சமீப காலமாகத்தான் தமிழ் திரையுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது.
கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், நடுவே நகைச்சுவை, அழ வைக்க லேசாய் சென்டிமெண்ட், அதன்பின் சுபமான கிளைமேக்ஸ் என்ற பார்முலாவை விட்டு விலகி நிற்கும் படங்கள் இப்போது பெருகிவிட்டன.
அந்த வரிசையில், ‘erotic comedy’ வகைமைக்குள் காமம் கலந்த காமெடியை சொல்கிறது ஸ்ரீஜர் எழுதி இயக்கியுள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.
திரைக்கதையில் ஜாலங்கள் நிகழ்த்திய கே.பாக்யராஜும், அவரது மகன் சாந்தனுவும் இதில் நடித்திருக்கின்றனர்.
‘முந்தானை முடிச்சு’வில் முருங்கைக்காய் மகிமையை பாக்யராஜ் சொன்னதாலோ என்னவோ, அதையே பேசுபொருளாகக் கொண்ட இப்படத்தின் டைட்டிலிலும் அது இடம்பெற்றிருக்கிறது.
ஓரிரவில் நடக்கும் கதை!
திருமணமான இளம் ஜோடியொன்று முதலிரவு நடக்கும் அறைக்குள் நுழைகிறது.
மணமகனின் குடும்பத்தில் முதலிரவன்று உறவு கொள்ளாமல் மன அடக்கத்தோடு, மனைவியுடன் பேசிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலிரவின்போது உறவு கொள்ளாமல் தள்ளிப்போட்டதாலேயே தங்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்ற தகவல் மணமகளிடம் சொல்லப்படுகிறது.
இரு வேறு நோக்கத்தோடு ஒரு அறையில் இருக்கும் அந்த ஜோடி அந்த இரவைக் கடந்தது எப்படி என்பதை காமெடியாகவும் காம நெடி மணக்கவும் சொல்ல முயன்றிருக்கிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.
இவர்கள் இருவரையும் கட்டிலில் தள்ள வெளியிலிருந்து ஒரு கும்பல் திட்டமிடுவது தனி ‘ட்ராக்’.
இந்த டைட்டிலையும் ட்ரெய்லரையும் பார்த்தபிறகும் தியேட்ட்டருக்குள் நுழைந்துவிட்டு, ‘ச்சீ.. இது என்ன கதை’ என்று சொல்வது மகா தவறு.
திரையில் ‘நலங்கு விளையாட்டு’
சில திருமண விழாக்களில் புதுமணத் தம்பதிகளிடையே காமத்தை விதைக்க ‘நலங்கு விளையாட்டு’ என்ற வடிவம் பயன்படுத்தப்படும். ஒருவரையொருவர் தொடுவதும் சீண்டுவதும்தான் அதன் மையம். இப்படமும் அப்படியே.
ஆனால், ‘புதிதாக திருமணமானவர்கள் நேரடியாக காமக்குளத்தில் நீந்த வேண்டும்’ என்பது போலவே படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் வசனம் பேசுவதுதான் கொஞ்சம் இடிக்கிறது.
அதை மட்டும் தவிர்த்து, காட்சிகளில் இருக்கும் அழகியலை கொஞ்சம் பேச்சிலும் கொண்டு வந்திருக்கலாம்.
யூடியூப்பில் ஆபாச வீடியோ பார்ப்பது சகஜமானபிறகும், செக்ஸ் கிளினிக்குகளில் தம்பதிகள் கூட்டம் பெருகும் காலமிது.
தனியறையில் பாலின ஈர்ப்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் ஜோடிகளும் நிறைய.
இவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர, ஒருகாலத்தில், ‘ஜாலியான’ கதையமைப்பைக் கொண்ட படங்களை ரசிக்குமாறு ‘அட்வைஸ்’ வழங்கப்படும். கண்டிப்பாக, ’முருங்கைக்காய் சிப்ஸ்’ அவர்களுக்கானது.
இப்படத்தில் லாஜிக் குறைகளைத் தேடுவதைவிட, கொஞ்சமாய் காதலை இழைத்திருக்கலாம் என்பதுதான் ஒரே வருத்தம். அதேபோல, சட்டென்று கிளைமேக்ஸில் சென்டிமெண்ட் பொங்குவதும் கூட தியேட்டரில் சிரிப்பலையை உருவாக்குகிறது.
நல்ல ஜோடி!
இப்படத்தின் பெரிய ப்ளஸ் சாந்தனு – அதுல்யா ஜோடி. இருவரையும் பார்த்தவுடன், புதுமணத் தம்பதிகள் என்ற எண்ணம் தானாக உண்டாகிறது. அதற்கேற்ப, இருவரது ‘கெமிஸ்ட்ரி’யும் கூட அசத்தலாக இருக்கிறது.
நடிப்பில் விஜய்யை காப்பியடித்தாலும், சாந்தனுவின் டான்ஸ் பச்செக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கிறது.
காட்சிகளில் ஒரே சேலையை அணிந்து வந்தாலும், பாடல் காட்சிகளில் கலர்ஃபுல்லாக வருகிறார் அதுல்யா.
கூச்ச சுபாவமுள்ள கதாபாத்திரம் என்று சுற்றியிருப்பவர்கள் சொன்னாலும், படத்தில் அவரது பாத்திர வடிவமைப்பு அப்படி இல்லை. அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
மணமகனின் தாத்தாவாக பாக்யராஜும், மணமகளின் அத்தையாக ஊர்வசியும் வருகின்றனர்.
மனோபாலா – மதுமிதா ஜோடியின் பேச்சும் செயல்பாடுகளும் கண்டிப்பாக காமெடியில் சேராது.
யோகிபாபு, முனீஸ்காந்த், மயில்சாமி வகையறா காமெடி பெரிதாக சிரிக்க வைக்காவிட்டாலும், அதற்குச் சேர்த்து வைத்து இறுதியில் வரும் தயாரிப்பாளர் ரவீந்திரன் நம்மை உலுக்கியெடுக்கிறார். அவரது போர்ஷனை இன்னும் சிறப்பாக ஆக்கியிருக்கலாம்.
ஒரே அறையை மீண்டும் மீண்டும் காட்ட வேண்டும் என்ற சவாலை நன்றாகவே சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி.
தேவையில்லாத காட்சிகளை வெட்டினால் படத்தின் நீளம் குறைந்துவிடும் என்று பார்த்து பார்த்து ‘கட்’ செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜோமின்.
தரண் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ஆனாலும், ‘பத்ரகாளி’ படத்தில் வரும் ‘கேட்டேளா இங்கே..’ போன்று ஒரு பாடலும் நம்மை ஆட்டுவிக்காதது பெருங்குறை.
தன் படத்திற்கான ஆடியன்ஸ் யாரென்பதை உணர்ந்து, அவர்களை மட்டும் குறிவைத்து காட்சிகளையும் வசனங்களையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். கண்டிப்பாக அவற்றில் முக்கால்வாசி ஆபாச ரகத்தில் சேர்கின்றன.
வழக்கமான ஒரு கமர்ஷியல் சினிமாவையோ அல்லது கலைப்படைப்பையோ ரசிக்க நினைப்பவர்களுக்கு ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உவப்பாக இருக்காது.
அதே நேரத்தில், அருவெருப்பான முறையில் அந்தரங்க அனுபவங்களைப் புரியவைக்கும் சினிமாக்களை தாண்டி இத்திரைக்கதையில் அழகுணர்ச்சி ததும்ப காமத்தைக் காட்டியிருப்பது அருமை.
அதனை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தால், இந்த வகைமையில் இன்னும் சில படங்கள் வெளியாக வழி ஏற்பட்டிருக்கும்.
ஆனால், இதையே பலர் ‘ஆபாச குப்பை’ என்று கரித்துக் கொட்டி வருகின்றனர்.
‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஓடும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும், யூடியூப்பிலோ அல்லது ஓடிடி தளமொன்றிலோ இப்படம் வெளியாகும்போது கண்டிப்பாக பார்வையாளர்கள் கூட்டம் முண்டியடிக்கும். கண்டிப்பாக, இதில் மாற்றம் நிகழாது.
அதை மீறி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே, ‘ஸோ கால்டு’ கலாசாரக் காவலர்களின் கூச்சல் உண்மை என்றாகும்!
-பா.உதய்
16.12.2021 6 : 30 P.M