– நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
‘நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் இது’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில்,
“டெல்டா வகை வைரஸ் இன்னும் இருக்கும் வேளையில், உலகம் முழுவதும் 70 நாடுகள், இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு எஸ் ஜீன் வகை என ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிப்பது தற்போது குறைந்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து உறுதிப்படுத்துதல் வேண்டும். காலம் தாழ்த்தாமல் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேட்டர், மருந்துகள், மனிதவளம் உள்ளிட்டவை குறித்து கண்ட்ரோல் ரூமிற்கு தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களை இடம் பெற செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, உலக சுகாதர நிறுவனம், நிபுணர்களின் கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று பாதித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் பரிசோதனை செய்வதை துரிதப்படுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
16.12.2021 12 : 30 P.M