பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!

– தமிழக அரசு உத்தரவு

‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்’ என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

“தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளை இனம் கண்டு, அவற்றை அழியாமல் பாதுகாத்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்தவேண்டும்.

நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கையை, தொழில் மற்றும் வணிகத் துறை ஆணையரகமும், ‘எல்காட்’ நிறுவனமும் எடுக்க வேண்டும்.

இது குறித்து தொழில் துறையும், தொழில்நுட்பத் துறையும், உரிய ஆணைகளை வெளியிடவேண்டும்.

பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலை விழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை உரிய ஆணைகளை வெளியிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like