மயானம் வரை நடந்தே வந்த எம்.ஜி.ஆர்!

-ஆர்.எம்.வீரப்பனின் அனுபவம்

“கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன்.

அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், அரசியல் அரசாங்கம், பொறுப்பு ஆகியவைகளில் அவர் கூடவே கடைசிவரை இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன்.

அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவரது மனைவியை அடுத்து நான் தான். வேறு யாரும் இல்லை என்று சொல்வேன். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் நிர்வாகி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ஆகிய முழு பொறுப்புடன் தயாரிப்பு நிர்வாகத்தையும் முழுமையாக நான் பார்த்து வந்தேன்.

தி.மு.க.வில் அவர் சேர்ந்ததும், அவரது வாழ்க்கை முறையும், அவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய தொடர்பு 1944-ம் ஆண்டு முதல் ஏற்பட்டது.

‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் வி.சி.கணேசன் நடித்தார். 1945-ல் கலைஞருடன் ஏற்பட்ட பழக்கம் 1953வரை தொடர்ந்தது. கலைஞரின் முயற்சியால் தி.மு.க. உறுப்பினர் ஆனார். நானும் அப்போது தி.மு.க.வில் சேர்ந்தேன்.

அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி பிறகு எம்.ஜி.ஆர்., அண்ணாவுடன் தொடர்பு அறிமுகம் ஆனது. மிகுந்த பாசத்துடன் இருந்தார். வந்த நடிகர்களில் பெரிய அளவில் தி.மு.க.விற்கு பயன்பட்டவர்.

சிவாஜி, தி.மு.க.விற்கு வந்தாலும் காங்கிரஸுக்கு போய் விட்டார். எஸ்.எஸ்.ஆர். ஓரளவு புகழ்பெற்ற நடிகராகவே இருந்தார். டி.வி.நாராயணசாமி நாடக கம்பெனியில் இருந்தார்.

பெரிய வளர்ச்சியும், புகழ்பெற்ற செல்வாக்கும் பெற்ற நடிகராக எம்.ஜி.ஆர். மிகப்பெரிய அளவில் தி.மு.க. வளர்ச்சிக்கு துணை புரிந்தவர்.

எம்.ஜி.ஆர். கட்சி என்று கிராமத்தில் சொல்லும் அளவிற்கு வளர்ந்தது. 1953-ம் ஆண்டு முதல் 72-ம் ஆண்டுவரை அரசியலில் முக்கிய பகுதியாக இருந்தவர்.

1972-ல் எதிர்பாராமல் தனிக் கட்சி துவங்கினார். எனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை இன்றும் என்றும் மறக்க முடியாத அனுபவம் உள்ளது.

1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது தாயார் புதுக்கோட்டையில் இறந்து போனார். நான் இந்த செய்தியை சென்னையில் புரட்சித் தலைவரிடம் தெரிவித்தேன். அவர் “நான் வரும் வரைக்கும் பிணத்தை எடுக்க வேண்டாம்” என்று கூறி நேராக மறுநாள் புதுக்கோட்டைக்கு வந்தார்.

எனது தாயாரின் இறுதிச் சடங்குகள் நடக்கிற வரைக்கும் மயானத்திற்கு புரட்சித் தலைவர் என்னுடன் நடந்தே வந்தார்.

அப்போது புரட்சித் தலைவர் சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக இருந்ததால் அவருக்கு மந்திரி அந்தஸ்து. அதனால் அவருக்கு ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு.

இறுதி ஊர்வலத்தில் என்னுடன், நடந்து வரும்போது பொதுமக்கள் ‘யார் காலமாகி விட்டார், யார்? யார்?’ என்று பேசியபோது என்னால் அந்த சம்பவத்தை இன்றும், என்றும் மறக்க முடியாத பெருமைக்குரிய நிகழ்ச்சி.

அரசியல், சினிமா, பொது வாழ்க்கையில் அவருடன் எனக்கு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான்.”

நன்றி: தினபூமி தீபாவளி மலர் – 1998

21.12.2021   6 : 30 P.M

You might also like