முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்!

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உட்பட 9 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 2 இடங்களில் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடக்கிறது.

இதில் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடக்கிறது. சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எந்தத் தொழிலும் செய்யாத நிலையில் தங்கமணி மனைவி வருமான வரி கட்டியது எப்படி எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சேலம் குரங்குசாவடி பகுதியில் வசிக்கும், தங்கமணியின் நண்பரும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக பொய் வழக்கு போடுவதாக குற்றஞ்சாட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like