– முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதனிடையே சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, விளக்கமளித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், ‘பபாசி’யின் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடுத்தாண்டு (2022) ஜனவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சியை, அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
பல ஆண்டுகளாக பதிப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவோரையும் பாராட்டி சிறப்பிக்கிறார்.
சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையிலான 18 நாட்கள் நடைபெறுகிறது.
விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
கடந்த ஆண்டு போலவே 800 அரங்குகள் வரை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பபாசி’யில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமன்றி உறுப்பினர் அல்லாத பதிப்பகத்தாருக்கும் அரங்குக்கான கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்க இருக்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்குக் கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். வாசகர்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு ‘டிராலி’ உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
கண்காட்சி வளாகத்திலேயே கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட இருக்கிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கையாளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கண்காட்சி வளாகத்தில் உள்ள சிற்றுண்டியகத்தில் உணவு கட்டணம் அதிகமாக இருப்பதாக வாசகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அந்த விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் கண்காட்சியில் எத்தனை புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன? எத்தனை அரங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன? கூடுதலாக ஏற்படுத்தப்பட இருக்கும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் ஜனவரி 1 அல்லது 2-ம் தேதி முறையாக அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.