குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!

– உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த வழக்கில் குற்றவாளி கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர். இதற்கு முன் அவர் குற்றங்களில் ஈடுபடவில்லை. அவரை பயங்கர குற்றவாளி என கூற முடியாது.

இவர் செய்திருப்பது கொடூரமான குற்றம் தான் என்றாலும் இது இவர் செய்துள்ள முதல் குற்றமாக உள்ளது. சிறையில் அவரது நடத்தையும் திருப்திகரமாக இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

குற்ற வழக்கை முடித்துவைப்பது மட்டுமல்லாமல் குற்றவாளியின் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீடு குற்றத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குற்றவாளி, அவரது மனநிலை, சமூக பொருளாதார நிலை ஆகியவற்றையும் கவனித்து தண்டனை வழங்க வேண்டும்.

எனவே மேல்முறையீட்டாளர் சீர்திருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என கூற முடியாது. மேலும், குறைந்த தண்டனை என்ற மாற்று விருப்பத்தை முன்கூட்டியே நிறுத்திவிட்டு மரண தண்டனையை கட்டாயமாக்க கூடாது” என நீதிபதிகள் கூறினர்.

You might also like