ஹெலிகாப்டர் விபத்து: முகநூல் அரசியல் வேண்டாம்!

முப்படைத் தளபதியான பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு.

அதில் 13 பேர் உயிரிழந்த செய்தியைச் சாமானியமாகச் செரித்துக் கொள்ள முடியவில்லை.

அண்டை நாடுகளுக்கு எதிரான சச்சரவுகளின் போது இந்தியா சார்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வந்த அவருக்கு ஏற்பட்ட நிலை அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்குமே ஏற்பட்ட இழப்பு தான்.

ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை வைத்துச் சிலர் கருத்துச் சொல்லி, அதனால் ஏற்படும் பரபரப்புகள் எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல.

மகாத்மா காந்தி மறைந்து அந்தச் செய்தி பரவியபோது, கூடவே இன்னொரு செய்தியையும் அப்போதைய அரசு பரப்பியது.

அதாவது காந்தியைச் சுட்டது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் அன்று ஏற்பட்டது.

தற்போது விபத்தில் உருக்குலைந்த ஹெலிகாப்டரில் இருந்த கருப்புப் பெட்டியை ராணுவத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள். ராணுவமே உயர்மட்ட விசாரணையை அமைத்திருக்கிறது.

விபத்து நடந்த வனப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, புலன் விசாரணை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சந்தேகத்திற்குரிய எதுவும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது.

முகநூலில் இதே விபத்து குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பதிவிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பல மாநிலங்களில் நடந்திருக்கிறது.

ராணுவமே ஒரு கட்டத்தில் எந்தவிதமான வதந்தியையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

விசாரணை விரைவாக நடந்து கொண்டிருக்கையில், விசாரணை மற்றும் ஆய்வு முடிவுகளும் விரைவில் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அதுவரை விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தவிர்ப்பதே – நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவியாக இருக்கும்.

விபத்து அதிர்ச்சியானது தான் என்றாலும், இதை முன்வைத்து யாரும் அதிர்ச்சியூட்டும் அரசியலை முன்னெடுக்க வேண்டியதில்லை.

You might also like