பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!

மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.12.2021) நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் தலைமையில், டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.

‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ நூலின் முதல் பிரதியை நீதியரசர் திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் வெளியிட, திரு. நாஞ்சில் சம்பத் பெற்றுக்கொண்டார்.

பத்திரிகையாளர் திரு. கடற்கரய் மத்தவிலாச அங்கதம், திரு. பெ.மகேந்திரன், ஐ.பி.எஸ், வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி, பத்திரிகையாளர் திரு. மை.பா நாராயாணன், கலைஞன் பதிப்பகம்  திரு. நந்தா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
“பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி, பாரதியின் பாடலுக்கு உண்டு” என்றார்.

“பொதுவாக கவிஞர்களாக இருந்தவர்கள், அறிஞர்களாக இருந்ததில்லை. அந்த வகையில் பாரதிதான் கவிஞனாகவும், அறிஞனாகவும் இருந்தான்.

அடிமையாகவே பிறந்து அடிமையாகவே இறந்த பாரதி, சமூக விடுதலைக்கு மட்டுமல்லாது, பெண் விடுதலைக்கும் சேர்த்து கனவு கண்டான்.

பாரதியின் எண்ணங்களிலும், வண்ணங்களிலும் முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும், அவனை தன் ஆசானாக ஏற்றுக்கொண்டான், பாரதிதாசன். அந்த அளவிற்கு பாரதியின் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனை இருந்தது.

தமிழ் வரலாற்றிலேயே வள்ளுவனுக்கு அடுத்தபடியாக அதிகமான இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டவன் பாரதி தான்” என்றார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத்தைத் தொடர்ந்து பேசிய தோழர் சி. மகேந்திரன், “பாரதியின் கவிதைகளை பொது மக்களுக்கு எடுத்துச் சென்ற பெருமை தோழர் ஜீவாவையே சாரும்.

அதேபோன்று பாரதியின் உரைநடையில் உள்ள உயர்வுகளை, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தொ. மு. சி. ரகுநாதன்.

திராவிட இயக்கப் பின்னணியில் வந்திருந்தாலும் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் பாரதியைக் கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கு இந்நூலில் அவர்கள் உட்பட மொத்தம் 113 பேர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாக இடம் பெற்றிருப்பதே சாட்சி” என்றார்.

அதேபோல், பெண் விடுதலையும், சமூக விடுதலையும் பாரதியின் பாடல்களில் மையமாக இருக்கும் என்ற மகேந்திரன், பாரதியின் பாடல்களில் தீ குறியீடாக இருக்கும் என்றார்.

நீதியரசர் திரு. ஜி ஆர். சுவாமிநாதன் பேசுகையில், “பாரதியின் நூல்களை நாட்டுடைமையாக்கச் செய்ததில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜீவாவின் பங்கு குறிப்பிடத்தக்கது” என்று புகழாரம் சூட்டினார்.

இந்த நூல் குறித்து விழாவில் பேசிய திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் தமது உரையில், “திருக்குறள், நாலடியார், பாரதி கவிதைகள் என இந்த மூன்றைப் படித்தாலே தமிழின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த நூல் தொகுப்பானது, என்னுடைய 25 ஆண்டு கால உழைப்பின் வெளிப்பாடு” என்றார்.

கடற்கரய் மத்தவிலாசம் பேசும்போது, “பாரதி விழாவை  நடத்துவதற்கு மிகப்பொருத்தமான இடம் இந்தக் கல்லூரிதான். ஏனென்றால், 1982-ல் முதல்வராக இருந்த சமயம் பாரதி விழாவை மிகச் சிறப்பாக நடத்தியவர் எம்.ஜி.ஆர்” என்றார்.

வழக்கறிஞர் சாந்தகுமாரி பேசும்போது, பாரதியின் கொடைத் தன்மையை வெகுவாகப் பாராட்டினார். வறுமையில் வாடிய போதும் அவர் மற்றவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்தார் என்பதை விளக்கிக் கூறினார்.

பத்திரிகையாளர் மை.பா. நாராயணன் பேசும்போது, பாரதிக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பை விளக்கினார்.

எம்.ஜி.ஆருக்கு நாடக ஆசிரியராக இருந்த வரகவி அ.சுப்ரமணிய பாரதியின் நெருங்கிய நண்பர் வீட்டில் பாரதியார் தங்கியிருந்ததையும், டெல்லியில் பாரதியின் சிலையை ராஜீவ் காந்தியை வைத்து திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர் தான் என்ற தகவலையும் அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை நூலாசிரியர் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியினை டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின்  தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் திருமதி அபிதா சபாபதி தொகுத்து வழங்கினார்.

முன்னதாக விழா துவக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள் இசையோடு பாடிய, “நித்தம் உன்னை…, “பாரத சமுதாயம் வாழ்கவே…” உள்ளிட்ட பாரதியின் பாடல்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மணா

விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரம்மாண்டமான பாரதியின் திருவுருவப் புகைப்படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியுடன் இணைந்து, பொதிகை – பொருநை – கரிசல், கதைசொல்லி, கலைஞன் பதிப்பகம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

– நா.மோகன்ராஜ்

11.12.2021

You might also like