ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு வரவேற்பு!

ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதைத் தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும் விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை.

எனவே, இதற்கு தீர்வு காணும் நோக்கில் மத்திய அரசு ஆள் கடத்தல் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்த கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் முனைவர் சண்முகம்,

“நாட்டின் மக்கள் தொகை 138 கோடியாக உள்ளது. இதில் சரி பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். மக்கள் தொகையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே 13.59 சதவீதம் பேர். 14 வயதுக்கு உட்பட்டோர் 30.76 சதவீதம் பேர்.

இத்தனை பெரும் எண்ணிக்கையில் இருக்கும் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதும், வடகிழக்கு மாநில பெண்கள் கடத்தப்பட்டு தென்னிந்தியா கொண்டு வரப்படுவதும், தென்னிந்திய பெண்கள் வட இந்தியாவுக்கு கடத்தப்படுவதும், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களாக உள்ளன.

குறிப்பிட்ட சிறு எல்லைக்குள் மட்டுமே செயல்படும் அதிகாரம் கொண்ட போலீசாரால், மாநிலங்கள் கடந்து நடக்கும் ஆள் கடத்தல் சம்பவங்களில், சரி வர செயல்பட முடிவதில்லை.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது மட்டுமே அவர்களது பணியாக இருக்கிறது.

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக புகார்கள் வரும்போது, காவல்துறையினர் செய்வது அறியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் தான், இந்தச் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் முக்கிய அம்சமாக, ஆள் கடத்தல் தடுப்புக் குழு தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க முன்மொழிகின்றனர்.

தேசியக் குழுவில் உள்துறை அமைச்சக செயலர் தலைவராக இருப்பார். சட்டம் மற்றும் நீதி, தொழிலாளர் துறை, பெண்கள் நலத்துறை உள்ளிட்ட ஒன்பது துறை அதிகாரிகள், ஏ.டி.ஜி.பி., தகுதிக்கு குறையாத அதிகாரி உறுப்பினராக இருப்பர்.

மாநில பிரதிநிதிகளும் இருப்பர். அத்துடன் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் நால்வரும் இருப்பர். அவர்களில் இருவர் பெண்கள் நலன் சார்ந்து செயல்படுவோராக இருப்பர். இவர்கள்தான் சட்டத்தை அமல் செய்வர்.

மாநிலத்தில் தலைமை செயலாளர் தலைமையிலும், மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலும் இந்தக் குழுக்கள் செயல்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு, மறுவாழ்வு, பாதுகாப்பு, சொந்த இடத்தில் குடியேற்றம் செய்வது, குற்றம் தடுத்தல் எல்லாம் இந்த குழுவின் பொறுப்பாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் ஆட்கடத்தலில் சிக்கி மீட்கப்பட்டோருக்கான பாதுகாப்பு இல்லம், மறுவாழ்வு இல்லம் ஏற்படுத்தி கண்காணிக்கும் பொறுப்பும் கமிட்டிக்கு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை அவரவர் சொந்த நாடு, சொந்த மாநிலம், சொந்த ஊர் அனுப்பி வைப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சம். அனைத்து வித ஆள் கடத்தலும் இந்த சட்டத்தின் வரையறைக்குள் வந்து விடும். இது, பெண்கள், குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு சட்டம்.ஆள் கடத்தலுக்கு துணை போகும் லாட்ஜ், வீட்டு உரிமையாளர்கள், டாக்டர், வக்கீல், அரசு ஊழியர் என அனைவரும் குற்றவாளிகளே என்கிறது இந்தச் சட்டம்.

என்.ஐ.ஏ., அமைப்பு நாடு முழுவதும் விசாரிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால், விசாரித்து தண்டனை பெற்றுத்தருவதும் எளிதாக இருக்கும். இந்த சட்டத்துக்கு சிறப்பு கோர்ட்டையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி மாவட்டம்தோறும் சிறப்பு கோர்ட் வரும். எனவே அனைவரும் வரவேற்க வேண்டிய சிறப்பான சட்டமாகும்” என சண்முகம் கூறினார்.

மேலும், பிச்சை எடுப்பதற்காக ஆட்களை கடத்துவது, குழந்தைகளை கடத்துவது, பெண்களை வற்புறுத்தி கருக்கலைப்புக்கு கொண்டு செல்வது, திருமணத்துக்கு கடத்திச் செல்வது, கொத்தடிமையாக கொண்டு செல்வது, பாலியல் வியாபாரத்துக்காக கொண்டு செல்வது,

மறுவாழ்வு இல்லங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை கொண்டு சென்றாலும் எல்லாம் ஆள் கடத்தல் சட்ட வரையறைக்குள் வந்து விடும்.

கடத்தப்பட்டவர்கள் இந்தியாவுக்குள் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும், விமானம், ரயிலில் சென்றாலும், வெளிநாட்டினரை கடத்தினாலும் இந்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்குகளை விசாரிக்க, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்” என்ற தகவலையும் வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.

You might also like